பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதி 22 :6
எனக்கு அன்பானவர்களே!
நமக்கு நல்ல தாயும், தந்தையுமாய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
கரிசனையற்ற உலகில் கரிசனையோடு பிள்ளைகளை வளர்க்க,நமக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன.
ஆனால், இன்று நம்மில் அனேகம் பேர் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். சொல்லப் போனால், இந்த உலகம் எப்போதுமே சுயநலத்தில் தான் சுழன்று கொண்டிருக்கிறது.
உதாரணத்திற்கு, சிலர் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருக்கிறார்கள். சிலர் தான்தோன்றித் தனமாக வாழுகின்றனர். சிலர் கோபத்தில் கன்னா பின்னாவென்று கத்துகிறார்கள்.
சுயநலம் என்ற இந்த விஷச் செடி குடும்பத்திலும் வேர்விட ஆரம்பித்திருக்கிறது.
சில பெற்றோர் தங்களுக்குத் தெரியாமலேயே பிள்ளைகளின் மனதில் சுயநல விதையை விதைக்கிறார்கள்.
எப்படி? பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள், ஆனால் தவறு செய்தால் கண்டிக்கத் தயங்குகிறார்கள்.
எல்லா பெற்றோர்களும் அப்படி இல்லை. சுயநலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பிறர் நலனில் அக்கறை காட்ட நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இதனால் நல்ல பலன்களையும் அனுபவித்திருக்கிறார்கள். இப்படி அன்பும் கரிசனையும் காட்டும் பிள்ளைகளுக்கு நட்பைச் சம்பாதிப்பதும் சுலபம், அதைத் தக்க வைத்துக் கொள்வதும் சுலபம். அவர்களால் திருப்தியாகவும் வாழ முடிகிறது.
உங்கள் பிள்ளைகள் கனிவாக நடந்து கொள்ளவும், உலகின் சுயநல மனப்பான்மையால் கறைபடாமல் இருக்கவும், பெற்றோராக நீங்கள் எப்படி உதவலாம்? பிள்ளைகளின் மனதில் சுயநலம் குடிகொள்ள காரணமாக இருக்கும், செயல்களையும்,
வார்த்தைகளையும் அவர்களை விட்டு அகற்ற வேண்டும்.
கர்த்தருடைய வேதம் சொல்லுகிறது
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. என்று அன்பாக நமக்கு கட்டளையிடுகிறார்.
எனவே ஆண்டவர் நமக்கு கொடுத்த பிள்ளைகளை அவருக்கு பிரியமான வழியில் நடத்துவோம்.
வேதத்தில் பார்ப்போம்,
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
சங்கீதம் 127:4
பிரம்பும் கடிந்து கொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்.
நீதிமொழி: 29:15
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்: அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
நீதிமொழி 13:24
பிரியமானவர்களே,
பிரம்பைக் கையாளுவது இக்காலகட்டத்தில் குற்றம் என கருதப்படுகிறது. ஆனால் சிட்சை என்பது ஒரு பிள்ளையை நல்வழிப்படுத்தத் தேவையானது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
பிரம்பினால் தண்டனை கொடுத்து சிட்சிப்பதை மாத்திரமே வேதம் வலியுறுத்துகிறதே தவிர, பிள்ளையைக் கண்மண் தெரியாமல் அடித்துக் காயப்படுத்துவதை அது குறிப்பிடவில்லை என்பதை நாம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
“பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே நடத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று வேதம் எச்சரிக்கிறது. பிள்ளையைச் சரியான வழியில் நடத்த வேண்டியது பெற்றோராகிய நமது பொறுப்பு.
சரியான வழியில் பிள்ளைகளை நடத்த நிச்சயம் சிட்சையும், கண்டிப்பும் அவசியம். சிட்சிக்கப்படாத பிள்ளை நல்ல பிள்ளையாவது மிகவும் கடினம். தேவன் தாம் நேசித்து அன்புகூருகிற தமது பிள்ளைகளை சிட்சிக்கிறார் என்று வார்த்தை கூறுகிறது.
ஒரு பிள்ளை நடக்கத் தொடங்கிவிட்டால், இனி நடந்து பழகிவிடுவான் என்று நாம் ஒரு போதும் விட்டுவிடமாட்டோம். அவன் ஆபத்தை நோக்கிப் போய் விடுவானோ, என அஞ்சுவோம்.
அதுபோலவே வாழ்க்கைப் பாதையிலும் பிள்ளைக்கு எது சரி, எது தவறு, எப்படிப் போவதால் நன்மையைக் கண்டடையலாம், எது தேவனுக்குகந்த பாதையாய் இருக்கும் என்ற இதுபோன்ற படிப்பினைகளை நாம் சொல்லிக் கொடுத்து நல் வழிப்படுத்த வேண்டியது நமது பொறுப்பாகும்.
பிள்ளைகளை நடக்கவேண்டிய வழியில் சரியாக நடத்தினால் தான் அவர்கள் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பார்கள்.
பிள்ளைகள் சிறுவயதின் குறும்புத்தனம் செய்யத் தான் செய்வார்கள், வளர்ந்ததும் புரிந்து கொண்டு அதை விட்டு விடுவார்கள்.
இப்போது தண்டித்தால் அவர்களுக்கு வலிக்கும்’ என்று இப்படியே நாம் விட்டு விட்டால் பின்பு காலம் கடந்துவிடும்.
பிள்ளையின் நெஞ்சில் ஒட்டியிருக்கும் மதியீனத்தை அவனைவிட்டு அகற்றாவிட்டால் அதுவும் அவனோடேகூட சேர்ந்து வளர்ந்துவிடும். பின்னர் அதை அகற்றுவது மிகவும் கடினமாய் போய் விடும்.
“பிரம்பும் கடிந்து கொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும். தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்” (நீதி.29:15).
ஆம் பிரியமானவர்களே,
நாமும் பரம தகப்பனுக்கு பிள்ளைகளாய் இருக்கிறோம். அதனால் தான் நாம் நடக்க வேண்டிய வழியை நமக்கு காட்டி, நாம் தவறு செய்யும் போது கண்டித்து உணர்த்துகிறார்.
ஒரு வேளை நம்மிடம் தவறுகள் இருந்தால் அவற்றை விட்டு விட்டு புதிய மனிதர்களாய் இந்த புதிய மாதத்திற்குள் பிரவேசித்து, புதிய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
ஆமென்.