Daily Manna 88

இயேசு சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. மாற்கு 10:14

எனக்கு அன்பானவர்களே!

தாயினும் மேலான அன்புள்ளம் கொண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போது, அவர்களை மெதுவாக முத்தமிட்டோ, அல்லது அணைத்துக் கொண்டோ அனுப்பி வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பெற்றோருக்கு ஆலோசனை சொல்கிறார்கள்.

ஏன் அப்படி செய்ய வேண்டும்? அந்த *சிறு அணைப்பும், சிறு முத்தங்களும் குழந்தைகளோடு பெற்றோருக்கு நல்ல நெருக்கத்தையும், குழந்தைகளுக்கு நல்ல பாதுகாப்பு உணர்வையும் அளிக்கிறதாம்.*

ஆம். பாதுகாப்பு உணர்வு மிக முக்கியம். அதிலும் ஒரு பிள்ளைக்கு, தாய் போல தகப்பனால் பாதுகாப்பு உணர்வை அளிப்பது சற்று கடினம் தான்.

*தாயானவள் தகப்பனை விட உடலளவில் பலவீனமாய் இருந்தாலும், குழந்தைக்கான பாதுகாப்பு ,மற்றும் தன்னம்பிக்கை உணர்வை மனதளவில் அதிகமாக கொடுப்பது தாய் தான்!*

வளர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு உணர்வு அவசியம் தான்! ஆனால் அவர்களுக்குத் தாயானவள் அவர்கள் செல்லும் இடமெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியுமா? முடியாது . எனவே தான் நம் அன்பின் ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் தாயைப் போல எப்போதும் பாதுகாக்கின்றார்.

ஒரு தாய் கஷ்டப்பட்டு பிள்ளை பெற்றதாலோ என்னவோ, அவள் தன் பிள்ளைகள் மேல் காட்டும் பாசம் தனிச் சிறப்பானது.

இயேசு கிறிஸ்து, தம் இரத்தத்தால் நம்மை பெற்றாரே! நாம் அவரது உயிருக்குச் சமமானவர்களாம்! எனவே தான் *அவர் நம்மை ஒரு போதும் மறப்பதில்லை என்று வெறுமனே சொல்லாமல், ஒரு தாயை விட மேலாகக் அன்பு காட்டி, நான் உங்களை மறப்பதில்லை* என்றார்!

*தேவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்மைக் கட்டித் தழுவும் தாயின் கரங்களே!* அதில் பாசமும் உண்டு! ஒப்பற்ற பாதுகாப்பும் உண்டு! எவரும் காட்டவியலாத இரக்கமும் உண்டு!

வேதத்தில் பார்ப்போம்,

கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று.
லூக்கா 13:34

இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
மத்தேயு 19:14.

பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
நீதி 22:6.

பிரியமானவர்களே!

பெண்களாகிய நம்மில் பலர், நான் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறோம் என்று கூறிக் கொள்வதில் பெருமையடைகிறோம்.
எவ்வளவு சம்பளம் வாங்குகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

ஆனால் , ஒரு நல்ல தாயாக, நம் பிள்ளைகளுக்கு கடவுளுக்கு பயப்படுதலையும் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டுகிறவர்களாக, இருக்கிறோமா??

நம் குடும்பத்தை தேவன் மேல் கொண்ட விசுவாசத்திலும், அன்பிலும் கட்டுகிறவர்களாக வாழ்கிறோமா?

ஒரு நல்ல தாயால் மட்டுமே தன்னுடைய பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளவும், அவர்களை செவ்வைப்படுத்தவும் உருவாக்கவும் முடியும்!

தேவனாகிய கர்த்தரை விசுவாசிக்கும் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் பிள்ளைகளை வளர்க்க ஒரு நல்ல தாயால் மட்டுமே முடியும்!

இன்று அநேக தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை ஆலயத்திற்கு அழைத்து செல்வதில்லை ஏன் ,
நாம் ஆராதனையில் கவனம் செலுத்த முடியாது என்று ஒரு தவறான எண்ணம் தான்.

இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வராதபடிக்கு அவர்களைத் தடை செய்யாதிருங்கள், பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்றார்.
மத்தேயு 19:14

தயவு செய்து உங்கள் குழந்தைகளை தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்!
அவர்கள் தேவாலயத்தில் இருக்கையில் அவர்கள் தூங்கினாலும் பரவாயில்லை.

அவர்கள் ஆராதனையின் போது அழுதாலும், சிரித்தாலும் பரவாயில்லை.
ஆராதனையின் போது அவர்கள் கிசுகிசுத்தாலும் பரவாயில்லை.
மக்கள் உங்களை அலட்சியமாகமாக பார்த்தாலும் கவலைப்படாதீர்கள்.

தேவாலயம் தான் உங்கள் குழந்தைகளுக்கு ஸ்திரத் தன்மையை வழங்குகிறது. வாழும் வழியைக் கற்றுக் கொடுக்கிறது.
தேவாலயம் அவர்களை பாதுகாப்பாக உணர வைக்கிறது.

தேவாலயம் உங்கள் குழந்தைகள் நற்செய்தியைக் கேட்கும் இடம்!
எனவே, தயவுசெய்து உங்கள் குழந்தைகளை தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்! இயேசு அவர்களை மிகவும் நேசிக்கிறாா்!

நம் பிள்ளைகள் மட்டுமல்ல,நாமும் கர்த்தருக்கு பிள்ளைகள் தான். “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
ஏசாயா 49:15 என்கிறார்.
நம் கர்த்தர் தாயினும் மேலானவர்.

அவரின் அன்பிலே நிலைபெற்று வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *