தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரிமாய் எழுதினேன். ரோமர் 15 :16
எனக்கு அன்பானவர்களே!
கிருபையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
மாவீரன் அலெக்சாண்டர் பல நாடுகள் மீது போர் தொடுத்து அவற்றை எல்லாம் தன் வசப்படுத்தினார்.
அவரை ஒரு அறிஞர் சந்தித்தார்.நீங்கள் வெற்றி கொண்ட பலர் பலசாலியாக இருந்த போதும், நீங்கள் எப்படி அவர்களை தோற்கடித்து விட்டீர்கள்.
அதற்கு உங்கள் மனஉறுதி மட்டுமே காரணமாக இருக்குமென என்னால் நம்ப முடியவில்லை. வேறு ஏதோ ரகசியம் இருக்க வேண்டும், அதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றார்.அறிஞர்.
அதற்கு அலெக்சாண்டர் சொன்ன பதில் தான். இது எனது வெற்றியல்ல, என்னை உருவாக்கிய ஆண்டவரின் வெற்றி. அவர் அருளாலேயே தான் நான் வெற்றி பெற்றேன்.
அது மட்டுமல்ல, எந்த நாடுகளை ஜெயித்தேனோ, அந்த நாட்டு மக்களுக்கு முந்தைய மன்னர்கள் செய்து கொடுத்ததை விட அதிக வசதிகள் செய்து கொடுத்தேன். இதனால், அந்நாட்டு மக்கள் என்னை எதிர்க்கவில்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக எதிரிகள் என்று பாராமல், நான் வென்ற மன்னர்களை நண்பர்கள் போல் நடத்தினேன்.
அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுத்தேன். இதுவே என் வெற்றியின் ரகசியம், என்றார்.
ஆம், நம்மை படைத்த ஆண்டவருக்கு நாம் முதலிடம் கொடுத்து, நம்மைப் போல் உள்ள சக மனிதர்களை மனிதர்களாக நாம் நேசித்தாலே இவ்வுலகில் வெற்றி என்பது அதிக நிச்சயமே.
வேதத்தில் பார்ப்போம்,
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
நீதி16:6.
இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
ரோமர் 3 :24.
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
எபேசியர் 2 :8.
பிரியமானவர்களே,
நம்முடைய தேவனை நோக்கி நாம் கூப்பிடும் போது , உண்மையாகவே அவர் நம்மை அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறார்.
ஒரு வேளை நீங்கள் ஆண்டவரிடத்தில் ‘நான் எவ்வளவு நாள் காத்திருப்பது?’ என்று கேட்கலாம். பாருங்கள்,
ராஜாவாகிய தாவீது தன் வாழ்க்கையில் மிகுந்த போராட்டங்களையும் வேதனையையும் அனுபவித்தார்.
ஒவ்வொரு நாள் விடியும் போதும், முடியும் போதும் எதிரிகளை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலையிலை இருந்தது.
தாவீதினுடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் வேதனை, இழப்புகள் இருந்து. ஆனாலும் அவைகள் மத்தியிலும் ஆண்டவரை வாஞ்சையோடு ஒவ்வொரு நாளும் துதித்து வந்தார்.
கர்த்தர், தாவீது செய்த யாவற்றையும் அளவில்லாமல் ஆசீர்வதித்தார். ஆகவே தான் தாவீது சொல்லுகிறார், “கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன் என்று கூறுகிறார்.
இன்று நீங்களும் தாவீதை போன்று பல விதமான இன்னல்களில் சிக்கி தவிக்கிறீர்களா ?? பயப்படாதீர்கள். ஆண்டவரை நோக்கிப் பாருங்கள்.
இன்றைக்கு கர்த்தர் உங்களை எல்லா விதமான இன்னல்களிலிருந்து நிச்சயமாகவே விடுவித்து ஆசீர்வதிப்பார்.
அவர் உங்கள் கண்ணீரைப் பார்த்து உங்கள் கதறலைக் கேட்டு உங்களை குணமாக்குவார் .
2 இராஜாக்க: 20:5.
நீங்கள் முன்னேற்றமடைந்து எழும்பி பிரகாசிக்கும் படிக்கு ஒரு மாற்றத்தை நோக்கி காத்திருங்கள்.
அப்படிப்பட்ட தருணத்தை தேவன் உங்களுக்கு தருவார். உங்களுக்கான ஆசீர்வாதத்தின் கதவு எப்பொழுது திறக்கப்பட வேண்டுமென்பதை தேவன் திட்டமிட்டிருக்கிறார்.
“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” எரேமியா 29:11என்று ஆண்டவர் கூறுகிறார்.
ஆண்டவர் தருகிற கிருபையின் ஆசீர்வாதங்களை இந்த பரிசுத்த ஓய்வு நாளிலே நாம் பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.