என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங்கீதம் 51 :3
எனக்கு அன்பானவர்களே!
பாவங்களை பாராத பரிசுத்தராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பாவத்தை, ஆண்டவர் முற்றிலுமாய் வெறுக்கிறார் பாவம் கொடியது, அது சுவை நிறைந்த விஷம்.
அதின் உள்ளே ஒருவர் போனாலும், அல்லது அது ஒருவர் உள்ளே வந்தாலும், அவரையும்,அவர் முழு குடும்பத்தையும் அழித்து சின்னா பின்னமாக்கி விடும்.
ஒரு முறை விஞ்ஞானிகள் பரிசோதனை ஒன்றை மேற்கொண்டனர். அது என்னவென்றால், ஒரு பாத்திரத்தில் நன்றாக சூடாக்கப்பட்ட தண்ணீரில் ஒரு தவளையைப் போட்டனர்.
அது மறு வினாடியே துள்ளிக் குதித்து வெளியே வந்து விட்டது.அதன் பின் மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீரை எடுத்து அதில் ஒரு தவளையை விட்டனர்.
முதலில் அது மிகவும் மகிழ்ச்சியாக சுற்றி வந்தது. பின் அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி கொண்டே வந்தனர். தவளையும் எவ்வித வித்தியாச உணர்வுமின்றி வெதுவெதுப்பான நீரில் சுகமாய் நீந்திக் கொண்டு வந்தது.
தண்ணீரும் சற்று நேரத்தில் நன்றாக சூடானது. நீந்திக் கொண்டிருந்த தவளை சிறிது சிறிதாக தன் பெலனை இழந்து வெளிவர நினைத்தும் அதனால் வெளிவர முடியாமல் பரிதாபமாய் செத்துப் போனது.
பாவமானது
அழிவுக்கு உரியது,
கற்பனையினாலே சமயம் பெற்றுச் சகலவித இச்சைகளையும் நடத்துகிறது.
பாவத்தின் பலன் மரணம் என்பதை நிச்சயமாக
உணர்ந்தும், பாவத்தின் அநீதத்தில் களிகூர்ந்து, பின் அவைகளிலிருந்து வெளி வர முடியாமல், அதன் பலனாகிய மரணத்தையும், நித்திய ஆக்கினையையும் அடைகிறவர்கள் ஏராளம்.
வேதத்தில் பார்ப்போம்,
உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வர வொட்டாதிருக்கிறது.
எரேமியா 5:25.
உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.
எண்ணாக: 32:23.
கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்.
ஏசாயா:1:18
பிரியமானவர்களே,
வேத வசனம் இப்படி சொல்லுகிறது, உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்குஅவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது என்று
ஏசாயா: 59:2.-ல் பார்க்கிறோம்.
ஆண்டவருடைய முகத்தை நமக்கு மறைக்கிற எந்த காரியத்தையும் நம்மை விட்டு அகற்றுவோம்.
நாமும் பாவத்தில் விழும் போது ஐயோ இது பாவமல்லவா, இதன் விளைவு மரணமல்லவா என உணர்வடைந்து, இந்த பாவ தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளுவோம் .
ஆண்டவர் இப்போது கொடுத்திருக்கும் கிருபையின் காலத்தில் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் வெளியே வர ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வோம்.
அன்பின் ஆண்டவர் நம் ஜெபத்தைக் கேட்கக்கூடாதபடி நம் வாழ்விலும், நம்முடைய குடும்ப வாழ்விலும் ஆண்டவர் வெறுக்கும் பாவ செயல்கள் நம்மில் இருக்குமானால், இன்றே அவைகளிலிருந்து வெளியே வர முயற்சிப்போம்.
“நான் பாவம் செய்ய சோதிக்கப்படும் போது, அதற்கு சம்மதியாமல்,அதை அருவருக்கவும், உமக்கு பிரியமான பிள்ளையாக நடக்கவும் பரிசுத்த ஆவியைக் கொண்டு எனக்கு புத்தியையும், பலத்தையும் தந்தருளும்” என பாவ அறிக்கையை ஒவ்வொரு நாளும் ஜெபிப்போம்.
இவ்வாறு நாம் ஆண்டவரிடம் ஜெபிக்கும் போது ஆவியானவர் தாமே நம்மை பாவத்தில் விழாத படி, நமக்கு நல்வழியை சுட்டிக் காட்டி நம்மை பரிசுத்த பாதையில் வழிநடத்துவார்.
இப்படிப்பட்ட பரிசுத்த வாழ்வு வாழ தூய ஆவியானவர் நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.