ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. ஏசாயா 49 :16
எனக்கு அன்பானவர்களே!
தாயினும் மேலான அன்புள்ளம் கொண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு செல்வ சீமாட்டி, சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள்.
அவர்களுக்கு நிறைய பிள்ளைகளும், பேரப் பிள்ளைகள் இருந்தார்கள்.
ஆண்டவர் அவர்களுக்கு எல்லா விதமான செல்வங்களையும், மகிழ்ச்சியையும் நிறைவாக கொடுத்திருந்தார்.
ஆனாலும் அவர்களுடைய வயதான நாட்களில், அவர்கள் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் சேர்ந்து அந்த வயதான தாயாரை அவர்கள் அனுமதியில்லாமல்
ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள்.
அந்த மூதாட்டியோ, தன்னுடைய பிள்ளைகளையும், தனக்கு அன்பான பேரப் பிள்ளைகளையும் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் தனது பிள்ளைகள் அந்தப் பக்கம் கூட வரவேயில்லை. ஆகவே, அவர்கள் மனம் சோர்ந்து போய், மரித்துப் போனார்கள்.
அவர்கள் எழுதி வைத்த நாட்குறிப்பிலே ஒவ்வொரு நாளும் துக்கத்தோடு, “இன்றைக்காவது என் பிள்ளைகளில் யாராவது என்னை பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் ஒருவரும் என்னை பார்க்க வரவில்லை. எல்லோரும் என்னை மறந்து விட்டார்கள், என்னை கைவிட்டு விட்டார்கள்” என்று ஒவ்வொரு நாளும் எழுதியிருந்தார்கள்.
எனக்கு பிரியமானவர்களே!
இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் அன்புக்காக ஏங்குகிறது. அன்பற்ற உலகத்திலே, நாம் இருந்தாலும் , நம் அன்பான இயேசு கிறிஸ்து நம்மை பார்த்து சொல்லுகிறார்.
” நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்”. என்று நம்மை தேற்றுகிற தெய்வம் அவர்.
வேதத்தில் பார்ப்போம்,
ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
ஏசாயா 66:13.
நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
யோசுவா 1 :5.
கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.
உபாகமம் 31:8
பிரியமானவர்களே,
இந்த உலகத்தார், உங்களை ஒடுக்கலாம். உங்கள் இனத்தவர்களும், உங்களை ஏளனம் செய்து ஒடுக்கலாம். மறுபக்கம், சாத்தானும் பலவிதமான வியாதிகளையும், பெலவீனங்களையும் கொண்டு வரலாம்.
ஆனால் ஒன்றை மறந்து விடாதிருங்கள். கர்த்தர் எப்போதும் உங்கள் அருகில் இருக்கிறார் என்பதை.
நம் கர்த்தர் அன்பு உள்ளவர், அது மட்டுமல்ல தயவும், காருண்யமும், மனதுருக்கமும் உள்ளவர். அவர் நம்மை நினைத்திருக்கிறார்.
நம்மில் அநேகம் பேர் கர்த்தர் என்னைக் கைவிட்டார். ஆண்டவர் என்னை மறந்து விட்டார் என்று சொல்லிப் புலம்புவதை நாம் பார்க்க முடியும். ஆனால் கர்த்தரோ நம் மீது எப்பொழுதும் நினைவாய் இருக்கிறார்.
கணவன் மனைவியை கைவிடலாம், பெற்றோர் பிள்ளைகளை கைவிடலாம், பிள்ளைகள் பெற்றோரை கைவிடலாம். வியாதியஸ்தர்கள் டாக்டர்களால் கைவிடப்படலாம்.
உதவி செய்வேன் என்றவர்கள் எல்லோரும் கை விடலாம். ஆனால் கர்த்தர் நம்மை ஒருபோதும் கைவிடவே மாட்டார் .
யோபு தன் துயர நேரத்தில், என் பந்து ஜனங்கள் என்னை விட்டு விலகிப் போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்து விட்டார்கள் “என்றார்.
தாவீதின் வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருந்தன, செத்தவனை போல எல்லாராலும் முழுவதுமாய் மறக்கப்பட்டேன். உடைந்த பாத்திரம் போல் ஆனேன் என்று புலம்புவதை நாம் வேதத்தின் வழியாக பார்க்க முடியும்.
ஒரு வேளை நாமும் இது போல எல்லாராலும் மறக்கப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் கர்த்தரே சமயத்திற்கேற்ற சகாயராய் நம்மோடு இருந்து வழிநடத்துவார்.
ஒரு தாய் தேற்றுவது போல் நம்மை தேற்றுவார்.யார் நம்மை மறந்தாலும் நம்மை மறவாத தேவன் அவர்.
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் சார்ந்து கொள்ளுவோம், மெய்யான சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளுவோம்.
ஆமென்.