Daily Manna 99

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். சங்கீதம் 91:14

எனக்கு அன்பானவர்களே,

நம்மை பாதுகாத்து வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

சென்னை பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. துணிக் கடையிலிருந்து பற்றி எரிந்த தீ மூன்றாவது தளத்தில் நடைபெற்று வந்த ஜெப வீட்டிலும் பரவியது.

முழுவதும் புகைக்காடாய் மாறியது. அந்த ஜெபவீட்டில் ஞாயிறு ஆராதனைக்காக சிறியோர், வாலிபர், கற்பிணி பெண்கள், வயோதிபர்கள் உட்பட நடிகர் ஸ்ரீ மற்றும் அவரின் குடும்பத்தினர் என கூடியிருந்த அனைவரும் பயங்கர தீ விபத்தில் சிக்கி கொண்டனர்.

சம்பம் அறிந்து தீயணைப்பு துறையினர் 4 வாகனங்களில் அதிரடியாக வந்து தீயை கட்டுப்படுத்தி உள்ளே இருந்த அனைவரையும் மீட்டனர்.

செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஸ்ரீ தன்னை காப்பாற்றிய இயேசுவுக்கும், உதவிய தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் அனைவரும் நன்றி கூறினார்.

எங்கள் ஆராதனை ஐந்து நிமிடம் தாமதமாகி முடிந்திருந்தால் நாங்கள் லிப்ட் – ல் சிக்கியிருப்போம். மேலும் தீயணைப்பு வீரர்கள் வந்து சேர ஒரு ஐந்து நிமிடங்கள் தாமதமாயிருந்தாலும் சூழ்நிலை ஆபத்தாக மாறியிருக்கும்.

இது ஒரு மனிதனுடைய செயல் அல்ல. இயேசுவின் கிருபையினால் மட்டுமே நாங்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டோம்.

பல கோடி மதிப்புடைய சொத்துக்கள் வணிக வளாகத்தில் எரிந்திருந்தும், நாங்கள் கூடியிருந்த ஜெப அறையில் ஒருவருக்கும் ஒரு சேதமுமின்றி மீட்கப்பட்டனர்.

மேலும் எங்கள் கைகளில் வைத்திருந்த பைபிள்களில் ஒரு பக்கம் கூட எரிந்து போகவே இல்லை. இது இயேசு கிறிஸ்து செய்த அற்புதம் என்பதை ஆதாரப்பூர்வமாகவும், பகிரங்கமாகவும் பொது வெளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தானி 3:26 -27. அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச் சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.

தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.

அன்று மட்டுமல்ல இன்றும் அதே பரிசுத்த ஆவியானவர் நம்மோடு கூடவே இருக்கிறார்‌ என்பதற்கு மேற்கண்ட சம்பவமே சாட்சி.

வேதத்தில் பார்ப்போம்,

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.
சங்கீதம் 46:1

அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச் செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
சங்கீதம் 91 :15.

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.
நீதிமொழி: 1 :33.

பிரியமானவர்களே,

இப்பூமியிலே நீங்கள் பலவிதமான போராட்டங்களையும், உபத்திரவங்களையும் மற்றும் பாடுகளையும் அனுபவிக்கும் போது ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்.

நம்முடைய அருமை ஆண்டவருடைய மறைவிடமும், சர்வ வல்லவருடைய நிழலும் உங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் மறந்து போகாதீர்கள்.

எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு அடைக்கலமாக இருக்கிற ஆண்டவரைச் சார்ந்து கொள்ளுங்கள். அவருடைய சிறகுகளால் உங்களை மூடி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் தருவார்.

ஆகவே, உலக மனிதர்களையோ, பணத்தையோ, ஞானத்தையோ நீங்கள் சார்ந்து கொள்ளாமல் உன்னதமானவருடைய மறைவுக்கு ஓடி வாருங்கள்.

எனக்கன்பான கர்த்தருடைய பிள்ளையே,
நம் அருமை ஆண்டவருடைய செட்டையின் நிழலுக்குள் நீங்கள் வரும் போது அவர் உங்களை ஆச்சரியமான விதத்தில் நடத்துவார்.

என்றைக்கு நீங்கள் உன்னதமானவருடைய மறைவுக்கும் அவருடைய நிழலுக்கும் ஒதுங்கி அடைக்கலத்திற்காக அவரிடத்தில் வருகிறீர்களோ? அன்றிலிருந்து உங்களை ஆச்சரியமாக நடத்துவார். அவருடைய நடத்துதல் உங்களுக்கே அதிசயமாய் இருக்கும்.

கழுகு தன் செட்டைகளை விரித்து தன் குஞ்சுகளை சுமந்து கொண்டு போவதுபோல கர்த்தர் உங்களை சுமந்து கொண்டு வழிநடத்துவார்.

வேதாகமத்தில் உள்ள தேவ பிள்ளைகளை, நம் அருமை ஆண்டவர் நடத்தி வந்த அனைத்துப் பாதைகளும் ஆச்சரியமானவைகள். அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் அருமை ஆண்டவர் நடத்தி வந்த விதத்தைக் குறித்து இவ்விதமாய் நாம் வாசிக்கிறோம்.

‘அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக் கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்னி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.

பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்னிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப் போகவில்லை’. யாத்திராகமம் 13:21,22

ஆம், அன்றைக்கு தேவபிள்ளைகளை வழிநடத்தின கர்த்தர் உங்களையும் வழிநடத்த வல்லவராயிருக்கிறார். அடைக்கப்பட்ட வாசல்களை கர்த்தர் கிருபையாக உங்களுக்காக திறப்பார்.

வனாந்தரத்தில் உங்களுக்காக வழியை உண்டாக்குவார். அவருடைய நடத்துதல் மிகவும் ஆசீர்வாதமானது. இன்றே அவருடைய செட்டையின் மறைவுக்குள் ஓடிவாருங்கள்.

‘உன் செய்கைக்குத் தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்’. ரூத் 2:12

ஆம் பிரியமானவர்களே,
கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த நமக்கு கர்த்தராலே நிறைவான பலன் கிடைக்கும்.

இந்த ஓய்வு நாளில் அவருடைய அடைக்கலப் பட்டணமாம் தேவாலயத்திற்கு சென்று நிறைவான நன்மைகளை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *