Do not be afraid Trust in the Lord
இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப் போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன்.
ஏசாயா 48:10
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””எனக்கு அன்பானவர்களே!
முடிந்ததிலிருந்து, புதிய துவக்கத்தை ஏற்படுத்துகிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பல ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் மாதம் 25ம் நாள் மேற்கு வங்காளத்தில் டார்ஜிலிங் மலைப் பட்டணத்தில் தூறலாக ஆரம்பித்த மழை, வர வர கடுமையான புயலுடன் கொட்ட ஆரம்பித்தது.
பட்டணத்தின் ஒரு மலை விளிம்பில் ஒரு மிஷனெரியின் பங்களாவிற்குள் 17 வயது முதல் 5 வயது வரையுள்ள 6 பிள்ளைகள், பணிப் பெண்ணின் கவனிப்பின் கீழ் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த கோர மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது . அதனுடன் மிஷனரியின் பங்களாவும் பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்தது. அதற்குள் இருந்த 6 மிஷனெரியின் பிள்ளைகளும் பணிப் பெண்ணும் புதையுண்டு மாண்டு போய்விட்டனர்.
யார் இந்த பிள்ளைகளின் பெற்றோர்? அமெரிக்காவிலிருந்து நம் இந்தியாவிற்கு வந்த மிஷனெரி லீ-யும் அவரது மனைவி அடால் லீ-யுமே!
ஜீரணிக்க முடியாத இச்செய்தி அவர்கள் காதுகளுக்கு வரும் போது அவர்கள் கல்கத்தாவிலிருந்தனர். 6 அன்பு பிள்ளைகளையும் ஒரே நாளில் மரிக்கக் கொடுத்த தாயின் மனம் எப்படித் துடித்திருக்கும்!
ஆயினும் வீட்டை அசைத்த இந்த கோர புயலால் அவர்களின் விசுவாசத்தை அசைக்க முடியவில்லை. தங்கள் பிள்ளைகள் கண்ணீர் கவலையில்லாத மோட்ச வீட்டில் இயேசு கிறிஸ்துவுடன் இருப்பதை எண்ணி ஆறுதலடைந்தனர்
அந்த கண்ணீரின் நாட்களில் அடால் தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம் இதோ, “நமது கிறிஸ்தவ வாழ்வில் உபத்திரவத்தின் குகையானது சாதாரணமாயிருப்பதைக் காட்டிலும், ஏழு மடங்கு அக்கினியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
அப்போது தான் அக்கினி சூளையில் காணப்படும் நான்காவது நபரின் சாயலை நாம் காண முடியும்.
என் ஒவ்வொரு உபத்திரவத்தின் குகைக்கு அருகிலும் புடமிடுவோனாகிய கர்த்தரும் கட்டாயம் உட்கார்ந்து கொண்டு தான் இருப்பார்.
நான் சோதிக்கப்பட்ட பின் பொன்னாக விளங்குவேன்” என எழுதினார். இது தான் உண்மையான விசுவாசம். இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் நிலைத்து நிற்பவனே உண்மையான கிறிஸ்தவன்.
வேதத்தில் பார்ப்போம்,
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
1 பேதுரு 1 :7.
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
நீதி 27 :21.
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கின பின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:12.
பிரியமானவர்களே!
நம்மை சூழ்ந்து நிற்கிற பிரச்சனைகளும், அனுபவிக்கிற போராட்டங்களும், ஏதோ அக்கினிக் கடலில் இருப்பதைப் போல தோன்ற வைக்கலாம்.
உண்மை தான். அக்கினி ஒரு பொருளின் வடிவமைப்பை, தன்மைகளை முற்றிலும் மாற்றுகிறது போல, நம்மையும் கர்த்தர், உபத்திரவ குகையில் தெரிந்தெடுத்து, புதிய பயனுள்ள மகிமையான பாத்திரங்களாய் உருமாற்றுகிறார். பிறகு பயன்படுத்துவார்.
எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது என்றால், நாம் சரியான பாதையில் இல்லை என்பது தான் உண்மை.
நான் எல்லாம் உண்மையும் ,
உத்தமுமாய் தான் செய்கிறேன்.
ஆனாலும் எதுவும் சரியில்லாமல் போய் கொண்டுயிருக்கிறதே என்றால், நாம் சரியான பாதையில் தான் போகிறோம் என்பது தான் உறுதி.
யோபு சொல்லுகிறார். என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.
யோபு 16 :17. என்று
அவ்விதமான பாதைகளிலிருந்து கர்த்தர் நம்மை மிகச்சரியாக நடத்த முடியும் என்பது அதைவிட உறுதி!
மேற்கண்ட சம்பவத்திற்கு பின் லீ-யின் மனைவி அடால்-லீ வங்காளத்தில் 522 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயானார் .அவரது விடுதியில் படித்த மாணவர்கள் பேராயர்களாகவும், ஊழியர்களாகவும், உயர்பதவியிலும் வைக்கப்பட்டனர்.
“வங்காளத்தில் ஏற்பட்ட எழுப்புதலுக்கு லீ குடும்பத்தின் பங்கு மிகப் பெரியதே” இன்றும் லீ மிஷன் மூலம் அவரது பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.
எனக்கு அன்பான சகோதரனே, சகோதரியே !
சிறு, சிறு பிரச்சனை, சின்ன பாடு வந்தாலே, “நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் தேவன் இதை அனுமதித்தார்? என கேள்வி கேட்கும் நமக்கு லீ-யின் வாழ்வு மிக பெரிய சவாலல்லவா!
யோபுவைப் போல இழப்பிலும் தேவனை விட்டுப் பின்வாங்காமல், விசுவாசத்தில் உறுதியாய் நின்று கொடுக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடித்த இவர்கள், விசுவாச வீரர்கள் அல்லவா?
இவர்களின் வாழ்வு நமக்குச் சொல்லும் செய்தி என்ன? கிறிஸ்தவ வாழ்வில் புடமிடப்படும் சூழ்நிலை வரலாம், ஆனாலும் கர்த்தர் நம் அருகில் தான் இருக்கிறார்.
ஆம், பாடுகள் நம் பரமனை விட்டு நம்மை தூரப்படுத்த அல்ல, கிட்டி நெருங்கிச்
சேரவே!
எல்லாம் இழந்த பிறகு யோபு எல்லாமே முடிந்தது என்று யோசித்திருப்பார். ஆனால் அங்கே தானே ஒரு பரிபூரண ஆரம்பத்தைக் கர்த்தர் வைத்திருந்தார்.
அக்கினியில் அகப்பட்டு “புழுவாய் துடித்த யோபு, பலம்மிக்க, விசுவாசக் கழுகாய் புறப்பட்டு அனேகருடைய விசுவாசத்திற்கு உயிர் கொடுத்து நின்றார். “
நம் வாழ்வில் முடிந்து விட்டது என்று மற்றவர்கள் கூறினால் ஒன்றை மாத்திரம் நினைவிற் கொள்ள வேண்டும்.என் தேவன் என்னைக் கொண்டு வைத்திருக்கிற திட்டங்கள் ஆரம்பமாகிறது என்று.ஏனெனில் அவர் முடிவிலிருந்து புதிய துவக்கத்தை ஏற்படுத்துகிற தேவன்.
இன்று பலவிதமான வேதனைகளில் சிக்கி தவிக்கின்றீர்களா? பயப்படாதீர்கள். கர்த்தரில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
நமக்காய் ஓர் பரிபூரணமான, மகிழ்ச்சியான வாழ்வு உண்டு. அங்கே கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாய் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அருகில் அமர்ந்து மேன்மையான வாழ்க்கையை சாதாகாலமும் அவரோடு கூட வாழ்ந்து கொண்டிருப்போம்!
ஆமென்