Examine yourselves and see whether you are in the faith
நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்.
2 கொரிந்தியர் 13:5
=========================
எனக்கு அன்பானவர்களே!
விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
விசுவாசம் யாருக்கு உண்டோ, அவர்கள் ஆவிக்குரிய ஐசுவரியவான்கள். ஏனென்றால் விசுவாசம், பொன்னைக் காட்டிலும் அதிக விலையேறப் பெற்றது!
பொன்னையும் மனிதர்களையும் பிரிக்க முடியாத பந்தத்தில் சிலர் உள்ளனர்.பொன் (தங்கம்) மனிதர்களின் விஷேச நாட்களில் பயன்படுத்துவதில் இருந்து, முதலீடாக வைக்கும் வரைக்கும் பயன்படுகிறது.
தங்கம் விற்பனையில் முதலிடத்தில் இருப்பது தான் அதன் விலை உயர்வுக்கு முதல் காரணம். ஆனால் பரிசுத்த வேதம் கூறுகிறது, அந்த பொன்னைக் காட்டிலும், நாம் தேவன் பேரில் வைக்கும் விசுவாசம் பெரியது என்று.
விசுவாசம் ஓர் ஆவிக்குரிய வரம்! விசுவாசம், நம்மில் மாற்றங்களை ஏற்படுத்தும். விசுவாசம் தேவனை நம்மில் செயல்பட வைக்கும் காரணி.
எந்த அற்புதத்தை நடப்பிக்கவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மக்களிடம் விசுவாசத்தை எதிர்பார்த்தார்!
அவர் வீட்டிற்கு வந்த பின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
மத்தேயு 9:28 –
அதற்கு பிறகு தான் அற்புதம் செய்தார்!
பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டும் என்று யூதா நிருபத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது .
இந்த விலையேறப் பெற்ற விசுவாசத்தின் நிமித்தம் நமக்கு இவ்வுலகில் போராட்டம் உண்டு .
கிறிஸ்தவ வாழ்க்கை ரோஜா பூவின் மேல் நடக்கும் அனுபவம் அல்ல , மாறாக அக்கினியினால் சோதிக்கப்பட்டு, பின்னர் பொன்னாக ஜொலிக்கும் அனுபவமாகும்.
வேதத்தில் பார்ப்போம்,
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
நீதிமொழி:17 :3.
தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
1 கொரி 10 :13.
ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
எபிரேயர் 2 :18.
பிரியமானவர்களே,
கிறிஸ்தவ விசுவாசம் என்பது இயேசு கிறிஸ்துவில் வைக்கும் நம்பிக்கையின் ஆழமான நம்பிக்கை ஆகும். ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லது என்று தாவீது சொல்லுகிறார் என்றால் அது அவருக்கு இருந்த விசுவாசத்தை குறிக்கிறது. கிறிஸ்துவின் மேல் இருந்த விசுவாசத்திற்காக தங்கள் உயிரையும் இழந்தவர்கள் அநேகம்.
கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் அறிக்கை செய்கிறார். ஒரு மனிதன் தன் பாவ நிலையை உணர்ந்து, கிறிஸ்து இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து இனி நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார் என்று தன் சுயத்தை இழப்பதுதான் ரட்சிப்பு. இது ஒரு நாளிலோ அல்லது ஒரு அறிக்கை செய்தவுடனோ முடிந்து விடும் காரியம் அல்ல.
சில சமயங்களில் சோதனைகள் நம் விசுவாசத்தை சோதிக்கவும் சுத்திகரிக்கவும் வருகின்றன.
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” –
1 பேதுரு 1:6-7
உடைக்கப்படுதல் என்ற சொல் சிலருக்கு பயத்தைத் தரக்கூடும். ஆனால் இது உண்மையில் மோசமான வார்த்தை அல்ல. தேவன் நம்முடைய ஆவியை உடைக்க ஒருபோதும் விரும்பவில்லை.
நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அதற்கு மாறாக செயல்படுகிற மாம்சீக சிந்தையை உடைக்கிறார். பெருமை, முரட்டாட்டம், சுயநலம் மற்றும் சார்ந்திராமை போன்றவற்றை உடைக்க அவர் விரும்புகிறார்.
நாம் அவரை முழுமையாக நம்பியிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். பாடுகள் நம்மை மேன்மை நிலைக்கு கொண்டு வருகிறது.
சில நேரங்களில் மக்கள் சோதனை அல்லது துன்பத்தை கடந்து செல்ல வேண்டும் என்பதைக் குறித்து வேதனைப்படுகிறார்கள். நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது கூட, விசுவாசத்தில் பெலன் கொள்வதற்கும் கீழ்ப்படிதலை கற்றுக் கொள்வதற்கும் தாழ்மையை தரித்துக் கொள்வதற்கும்,
சோதனைகள் அவசியமாயிருக்கிறது.
இன்று நீங்கள் கடவுளுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்களா? உடைபடுதல் எதிர்காலத்தில் உங்களை பெரிய காரியங்களுக்கு நேராக வழி நடத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அனுதின வாழ்விலிருந்து, அற்புதமான பரலோக வாழ்க்கை வரை நமக்குத் தேவையானது, விசுவாசம்! அது உலகத்தை ஜெயிக்கும்! அனைத்திலும் உன்னதரை சார்ந்து கொள்ள வைக்கும்.
இத்தகைய விசுவாச வாழ்வு வாழ்ந்து, சோதனைகளை ஜெயிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்