நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136 :23.
=========================
எனக்கு அன்பானவர்களே!
உயர்ந்தவராய் இருந்தும், தாழ்மையுள்ளவர்களாகிய நம்மை நோக்கிப் பார்க்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒருவன் நன்றாய் வாழ்ந்திருக்கும் போது அவனைச் சுற்றி ஏராளமானோர் இருப்பார்கள். ஓடி ஓடி பணிவிடை செய்வார்கள். உறவுகள் தேடி வரும்.
அவனே ஒருநாள் வாழ்வில் விழுந்து போனால், எல்லோரும் அவனை விட்டு ஓடி ஒளிந்து விடுவார்கள். பணிவிடை செய்தவர்கள் எல்லாரும் பகைவனைப் பார்ப்பது போல் ஓரடி தள்ளியே நிற்பார்கள்.
இதுதான் இன்றைய நிலை.
அவன் நன்றாக வாழும் போது அவனிடம் உதவி பெற்றவர்கள், அவனுக்குத் தாழ்வுநிலை வரும் போது ஓடி ஒளிவது ஏன்? விழுந்து போன அந்த மனிதனுக்கு உதவி செய்ய வேண்டுமே என்பதற்காக விலகி செல்வர்.
இன்னும் சொல்லப் போனால் நோய்வாய்ப்பட்ட கணவனையோ மனைவியையோ விட்டு விலகி மறுமணம் செய்கின்ற ஒரு சிலர் மனித சமூகத்தினுள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
உங்களிடத்தில் செல்வம் பெருகும் போது, உங்களை நினைக்க ஏராளம் பேர் உண்டு. உங்களுக்கு புகழ்பாடி, நன் கொடை பெறுகிறவர்கள் அநேகர் உண்டு.
ஆனால் நீங்கள் வறுமையிலே வாடும் போதும், பசியோடும் பட்டினியோடும் தவிக்கும்போதும், உங்களை ஒருவரும் தேடுவதுமில்லை, நினைப்பதுமில்லை.
ஆனால் கர்த்தரோ, உங்களுடைய தாழ்விலே உங்களை நினைக்கிறார். உலகமே உங்களை அற்பமாய் எண்ணிப் புறக்கணித்தாலும், கர்த்தர் உங்களை அன்போடு விசாரிக்கிறார்.
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்”.
வேதத்தில் பார்ப்போம்,
பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.
சங்கீதம் 139 :15.
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136:23.
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
சங்கீதம் 126 :1.
பிரியமானவர்களே,
தாவீதுடைய வாழ்க்கையிலும் எத்தனையோ தாழ்வான நிலைமைகள்; ஈசாயின் பிள்ளைகளில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணும்படி சாமுவேல் தீர்க்கதரிசி சென்றபோது, தாவீது மாத்திரம் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.
அந்த விருந்திலே அவனைப்பற்றி யாரும் நினைக்கவில்லை. ஆனால், காத்தர் தாவீதை நினைத்தருளினார். அதுமட்டுமல்ல பின்னொரு நாளில் தாவீதைக் கொன்று போடவேண்டுமென்றே சவுல் விடாமல் துரத்திக் கொண்டிருந்தான். அந்த சவுலினால் பல திசைகளிலுமிருந்து வந்த நெருக்குதல்கள் ஏராளம்;
இதினிமித்தம், ராஜாவாக அமர வேண்டிய தாவீது மலைகளிலும் குகைகளிலும் தனது நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது. தாவீது தன் வாழ்விலும் மனவேதனையினாலும் தாழ்த்தப்பட்டான்.
ஆனால் கர்த்தரோ, அந்தத் தாழ்மையிலும் அவனை நினைத்தார். தாவீதுடைய மன்னிக்கும் குணத்திற்கும், விட்டுக் கொடுக்கும் தன்மைக்கும் முன்பதாக சவுலின் பகைமை தோற்றுப் போனது.
தாவீதை நம்முடன் ஒப்பிட முடியாவிட்டாலும், தேவன் நம் எல்லோரையும் ஒன்று போலவே நேசிக்கிறவர்.
தாவீதை அவனுடைய தாழ்விலே நினைத்த அவர், நம்மை ஒருபோதும் மறவார். நம் வாழ்வில் ஏற்படும் வேதனைகள், துக்கங்கள், இழப்புகள், கடன் சுமைகள், வியாதிகள் நம்மைக் கீழே விழத் தள்ளலாம்.
அந்தத் தாழ்வு நிலையிலும் கர்த்தர் நம்மை கைவிடார். பாவத்தின் பிடியில் அகப்பட்டு, தாழ்த்தப்பட்டு, உலகத்தாரால் வெறுக்கப்பட்டிருந்த நமது சிறையிருப்பை மாற்றி நம்மை மீட்டவருக்கு, இந்த உலகத்து சிறையிருப்புகள் பெரிதல்ல.
அவருடைய கிருபை பெரிது. ஆகையால், நம் வாழ்வில் என்ன தான் துன்பங்கள் நம்மை நெருக்கித் தள்ளினாலும், தாழ்வில் நம்மை நினைத்தவரை எண்ணி, தைரியத்தோடு எழுந்து முன் செல்லுவோமாக.
இப்படிப்பட்ட விசுவாச உறுதியோடு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்