If anyone serves me, the Father will honor him
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்.
யோவான்: 12:26
~~~~~~~எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஆப்ரிக்காவில், டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் தேவ ஊழியம் செய்து வந்தார்.அவரைச் சந்திக்க நிருபர் ஸ்டான்லி சென்றார். அவர்கள் பல விஷயங்கள் குறித்து பேசினர்.
தன் பணி முடிந்ததும் நிருபர் ஸ்டான்லி, டேவிட்டிடம், நீங்கள் என்னோடு இங்கிலாந்து வந்து விடுங்கள். இதை விட்டால் உங்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைக்காது. அங்கு வந்தால் உங்கள் புகழ் மேலும் கூடும், என்றார்.
டேவிட் மறுத்து விட்டார். ஸ்டான்லி கிளம்பிச் சென்றதும், தனது டைரியில், நான் என்ன தியாகம் செய்து விட்டதாக ஸ்டான்லி நினைத்தார்! மக்களும், நான் ஆப்ரிக்காவிற்கு மிஷனரியாக வந்ததை பெரிய தியாகம் செய்து விட்டதாகக் கருதுகின்றனர்.
உண்மையில், இயேசு கிறிஸ்து, தனது பிதாவாகிய தேவனுக்கு சமமாய் இருந்தும், தம்மைத்தாமே வெறுமையாக்கி, தம்மைத் தாமே தாழ்த்தி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷகுமாரனாக இந்த பூமிக்கு வந்தாரே… அதுவல்லவா தியாகம்!
அதற்கு இணையான தியாகம் எதுவுமில்லையே!ஆகவே, நான் செய்தது தியாகமல்ல. நமக்காக தமது ஜீவனைக் கொடுத்த அவருக்கு ஊழியம் செய்ய நமக்கு கிடைத்த பெரிய பாக்கியம், என்று எழுதினார்.
ஆம்… ஆண்டவரின் தியாகத்துக்கு முன்னால், நமது செயல்பாடுகள் தியாகம் என்று சொல்வதற்கு அருகதையற்றவை என்றால் அது மிகையல்ல.
வேதத்தில் பார்ப்போம்,
ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்;
யோவான் 12:26
மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
எபேசியர் 6:6.
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
மத்தேயு 25:23
பிரியமானவர்களே,
இன்றைக்கு எல்லாரும் ஒருவன் ஊழியம் செய்தால் பிதாவானவர் கனம் பண்ணுவார் என்ற வார்த்தையை மாத்திரம் பிரதானமாக சொல்லி ஊழியம் செய்கிறவர்கள் எல்லாரும் பிதாவினால் ஆசீர்வதிக்கபடுவீர்கள் என்கிறார்கள்.
ஆனால் அதற்கு முன்பு இயேசு சொன்ன இரண்டு காரியங்களை பற்றி பேசுவதேயில்லை.
ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் என்னை பின்பற்ற கடவன் என்று இயேசு சொன்னார்.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மத் 16-24 ல் இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன்.
தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல என்றார்.
முதலாவதாக ஊழியக்காரன் தன் எஜமானனுக்கு பாத்திரவானாய் இருக்க வேண்டும்.
இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் ஊழியம் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் சிலுவையை சுமப்பதற்கு ஆயத்தமில்லை.
நம்முடைய சுய வாழ்க்கை சிலுவையில் அறையப்பட்டால் தான் கிறிஸ்து மகிமையோடு நமக்குள் வெளிப்பட முடியும்.
நம் சுயம் சிலுவையில் அறையப்பட வேண்டுமென்றால் நாம் சிலுவை சுமக்க வேண்டும். கலா2:20. (கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்.
சிலுவை சுமப்பது நம்மை அதாவது நம் சுயத்தை நொறுக்குவது மாத்திரமல்ல நம்மை வெறுமையாக்கவும் செய்கிறது.
இன்றைக்கு தேவனுடைய ராஜ்ஜியத்தை விட்டு விட்டு தங்களுடைய ராஜ்ஜியத்தையே அநேகர் கட்டி கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் உலகத்திலும், பணத்திலும், பொருளாசையிலும் ஆசை வைப்பது தான்.
இவர்கள் உலகத்தில் இருப்பதால் தேவனோடு கொண்டிருக்கும் உறவிலிருந்து விலகி செல்வதால் தேவனுடைய சித்தத்தை விட்டு விலகி தங்கள் பேர் புகழுக்காக உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து சுயசித்தம் செய்கிறார்கள். கொலோ 3-1,2 ல் உலகத்தில் உள்ளவைகளையல்ல கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் மேலானவைகளை தேடுங்கள் என்று பவுல் எழுதுகிறார்.
எனவே அழிந்து போகிற உலக ஆசை இச்சைகளை தேடாமல் காணப்படாத நித்தியமானவைகளை தேடுகிறவர்களே தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்ட முடியும்.
இப்படிப்பட்ட ஊழியக்காரர்கள் மாத்திரமே இயேசுவுக்காக உண்மையும் உத்தமுமாக ஊழியம் செய்வார்கள்.
இவர்களை தான் பிதா கனம் பண்ணுவார்.
மோசேயை போல எத்தனை ஊழியர்கள் தேவனுடைய சமுகத்தில் தங்கள் சொந்த ஜனத்திற்காக பரிந்து பேசுவார்கள். தேவனே அவர்களை வணங்கா கழுத்துள்ள ஜனங்கள் என்று கூறிய போதும் மோசே தன் ஜனங்களுக்காக பரிந்து பேசுவதை யாத்திரா:32:11-14 வரையுள்ள வசனங்களில் காணலாம்.
ஆம் பிரியமானவர்களே, நம் யாவரையுமே ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் தேவன் மாற்றியிருக்க, ஒவ்வொருவரும் தேவ பணியினை செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
ஆகவே நாம் நமது வாழ்வில் உண்மையுள்ளவர்களாகவும், தேவனுடைய கனமான ஊழியத்தை
செய்யும்படிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் யாவரையும் தகுதிப்படுத்துவாராக
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானம் நம் யாரோடும் நிறைவாய் தங்கி தரித்திருப்பதாக.
ஆமென்