If we repent, we will be blessed and benefited.
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
எபேசியர் 2:8
========================எனக்கு அன்பானவர்களே,
நம்மை மீட்டெடுத்த இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இரட்சிப்பு என்ற வார்த்தையை கிறிஸ்தவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்களே, அதன் அர்த்தம் என்னவென்று, இன்று அநேகருக்குப் புரியவில்லை.
“இரட்சிப்பு” என்ற வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் முக்கியமான வார்த்தைகளில் ஒன்றாகும். இந்த வார்த்தை ஒரு முக்கியமான ஆன்மீக அனுபவத்தை விளக்குகிறது
ஆபத்து அல்லது துன்பத்திலிருந்து மீட்கப்படுகிறதே இரட்சிப்பு ஆகும். இரட்சித்தல் என்பது விடுவி அல்லது பாதுகாத்துக் கொள் என்பதாகும். இந்த வார்த்தை வெற்றி, ஆரோக்கியம், அல்லது பாதுகாப்பு ஆகியவற்றின் கருத்தை கொண்டுள்ளது.
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் “இரட்சிப்பு” என்று கூறுவது ஒரு விலையாக கொடுத்துப் பெற்றுக் கொள்ளுதலையே குறிக்கிறது. இதை “மீட்பு” என்றும் கூறலாம் (Redumption). புதிய ஏற்பாட்டிலே 1பேது. 1:18-19ல் விசுவாசிகள் “வெள்ளி, தங்கத்தினால் அல்ல, கிறிஸ்துவின் உயர் மதிப்புடைய இரத்தத்தினால் மீட்கப்பட்டார்கள்” என்று கூறுகிறது.
இந்த இரத்தத்தினால் மீட்கப்பட்டது புதிய ஏற்பாடு முழுவதும் காணப்படும் ஒரு விஷயமாகும். இரத்தம் சிந்துதல் இன்றி பாவ நிவாரணம் இல்லை, மீட்பு இல்லை. இதனாலேயே சிலுவையில் இயேசு மரிக்க வேண்டிய கட்டாயம் வந்தது.
இரட்சிப்பு என்பது இயேசுவால் மட்டுமே கிட்டும். ஒரு மதமும், ஒரு சபையும், ஒரு சட்டமும், ஒரு மதகுருவும் இரட்சிப்பைக் கொடுக்க முடியாது. இயேசு ஒருவரே வழி. அவரே கதி.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று அப்போஸ்:16:31- ல் வேதம் கூறுகிறது.
கிறிஸ்தவர்களிலும் அநேகருக்கு அது புரியாதிருக்கின்றது. இரட்சிப்பு யாருக்குக் கிடைக்கும் . இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள் “இரட்சிக்கப்பட்டவர்கள். ஆனால், அது யாருக்குக் கிடைக்கும், அதற்கு தகுதி என்ன? நான் ஒரு பாவி என்று யார் ஒத்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்குத் தான் இரட்சிப்பு கிடைக்கும்.
நீதி 28: 13இல் “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று எழுதப்பட்டிருக்கிறது.
பாவங்களை மறைத்து வைப்பதினாலே நிச்சயமாய் நமக்கு வாழ்வு கிடையாது. ஒருவன் தனது பாவங்களை மறைக்க மறைக்க அவனுக்கு சமாதானம் தான் குறையும். இன்றைக்கு அநேகம்பேர், பாவத்துக்குள்ளே மூழ்கிக் கிடக்கிறார்கள்.
சிலர் நான் பாவமே செய்யவில்லை என்றும், இது பாவமா? அது பாவமா? என்றும், சிலர் சிறிய பாவம் பெரிய பாவம் என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு, தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பாவம் என்று எதுவும் இல்லையென்று கூட சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 1யோவான்1:8இல், “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இராது” என்று எழுதப்பட்டிருக்கிறது.
நாம் பாவம் செய்யவில்லையென்று சொல்லிச் சொல்லி, நம்மையே திருப்திப்படுத்திக் கொண்டிருந்தால் நமது உள்ளத்திலே சமாதானம் இழப்பதோடு நம்மை நாமே வஞ்சித்துக் கொண்டிருக்கிறோம்.
அருமையானவர்களே
இன்றைக்கு நீ உன்னுடைய பாவங்களைக் குறித்து யோசித்துப் பார். தேவன் பல தடவை உன்னை எச்சரித்துப் பார்க்கிறார். எதையாவது அவர் சுட்டிக்காட்டும் பொழுது, நீ அதை அலட்சிப்படுத்தாது விட்டு விடுவது உனக்கு நல்லது.
நீ செய்கிறது நல்லதல்ல, அது பாவம் என்று முதலாவது உன் மனச்சாட்சியே உனக்குச் சொல்லும் போது நீ அதை விட்டு விடுகின்றது உனக்கு நல்லது.
சிகரெட் குடிக்கிறது பாவமா?சினிமா பார்க்கிறது பாவமா? கதை புத்தகம் படிக்கிறது பாவமா? என்று இப்படியெல்லாம் சிலர் கேட்கிறார்கள். இவையெல்லாம் பைபிளில் எழுதியிருக்கிறதா என்று கூட கேட்கிறார்கள். ‘பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்’ 1தெச.5:22 என்பதுதான் வேதத்தின் போதனை.
உனக்குத் தவறாய்த் தோன்றுகிறதை விட்டு விடுகிறது உனக்கு நல்லது. அதைக் குறித்து நீ தர்க்கம் பண்ணாதே.
அருமையான தேவனுடைய மக்களே, பாவியை தேவன் நேசிக்கிறார். ஆனால், பாவத்தை அவர் விரும்புகிறது கிடையாது.
வேதத்தில் பார்ப்போம்,
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.
ரோமர் 10 :10.
கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள் என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.
ஏசாயா 56 :1.
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
1 பேதுரு 1 :5.
பிரியமானவர்களே,
இந்த வருடத்தில் எத்தனை விதமான வேதனைகள், பாடுகள்,நெருக்கங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் இப்படி எத்தனை எத்தனையோ நம்முடைய வாழ்க்கையில் நடந்திருக்கலாம்.
உங்களை எதிர்நோக்கும் பாவங்களை நீங்கள் விட்டு விலகுவது உங்களுக்கு நல்லது. இந்த செய்தியின் மூலமாய் தேவன் உங்களை எச்சரிக்கிறார் என்று நினைத்து கொள்ளுங்கள்.
கர்த்தரைக் கண்டடையத் தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாய் இருக்கும் போதே கூப்பிடுங்கள் என்று வேதம் சொல்லுகிறது.
அருமையான தேவபிள்ளையே! இப்பொழுது உன் பக்கத்திலே அவர் நின்று கொண்டிருக்கிறார். உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போதாவது உன் பாவத்தை விட்டுவிடுவாயா? தேவ எச்சரிப்பு உன்னைத் தேடி வந்து விட்டது.
நம் பாவங்களை அறிக்கை செய்வது மாத்திரமல்ல, அறிக்கை செய்து விட்டு விடவேண்டும். இன்றைக்கு நீங்கள் தீர்மானம் பண்ணுங்கள். அன்பின் ஆண்டவர் உங்களுக்கு நிச்சயம் ஜெயம் தருவார், இரக்கம் பாராட்டுவார்.
இரக்கம் கிடைத்தால் உங்கள் வாழ்வில் சந்தோஷம் உண்டாகும். அவர் இரக்கப்பட்டால், நம் வியாதி நீங்கும். நம் பிரச்சனைகள் மாறும். எனவே தேவ இரக்கத்தைப் பெற வேண்டுமென்றால் நாம் அறிக்கை செய்த பாவத்தை விட்டுவிட வேண்டும்.
இன்றைக்கு பாவத்தைக் குறித்த எச்சரிப்பு நம்மை தேடி வந்திருக்கிறது. நாம் மனந்திரும்பினால், நமக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாகும்.
இத்தகைய நன்மைகளை இந்த நாளில் நாம் பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்