Know for sure that your sin will continue to haunt you

என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
சங்கீதம் 51 :3.

=========================
எனக்கு அன்பானவர்களே!

பாவங்களைப் போக்கும் பரிசுத்தராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு மனிதர் ஒரு குதிரையை பாசமாக வளர்த்து வந்தார். அந்த குதிரை தன் எஜமான் சொல்வதை கேட்டு அவருக்கு உதவியாக இருந்து வந்தது. ஒரு நாள் அது பின்னால் இருந்த வேலியை எட்டி உதைத்ததினால் அதன் கால்களில் புண் உண்டானது.

அதைக் கண்ட அந்த மனிதர் அதற்கு மருந்து போட்டு, காயத்தை கட்டி விட்டார். ஆனால் அந்த குதிரையால் சரியாக நடக்க முடியவில்லை. ஆகையால் ஒரு கால்நடை மருத்துவரிடம் போய் அந்த குதிரையை காட்டினார். அவர் அந்த குதிரையை பரிசோதித்து விட்டு, அதற்கு புண் ஆறுவதற்கான மருந்தை கொடுத்தார்.

அதை சாப்பிடும் நேரத்தில் அந்த குதிரை நன்றாக நடந்தது. ஆனால் மருந்தை நிறுத்தினால், பின் திரும்பவும் நடக்க முடியாமல் போனது. அந்த மனிதர் திரும்பவும் அந்த மருந்தை கொடுத்தார். அதை சாப்பிட்ட குதிரை நடந்தது, பின் திரும்ப பழையபடி நொண்டி நொண்டி நடக்க ஆரம்பித்தது.

அந்த மனிதர் அந்த குதிரையை மீண்டும் அதை மருத்துவரிடம் கொண்டு போய் காண்பித்தார். அந்த வைத்தியர் மயக்க மருந்து கொடுத்து அந்த காலை சரியாக பரிசோதித்து பார்த்தபோது, அந்த காலுக்குள், ஒரு இரும்பு கம்பி உள்ளே இருப்பதை கண்டார்.

அந்த இரும்பு கம்பியை எடுத்து, சரியான மருந்து இட்டபோது, அந்த குதிரை குணமாகி, நன்கு நடக்க ஆரம்பித்தது.

அதுபோலவே நம்முடைய இருதயத்திற்குள்ளே பாவத்தின் வேர் ஆழமாக பதிந்து இருப்பதனால் , நம் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியாமல்
தவிக்கிறோம்.

வேதத்தில் பார்ப்போம்,

உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.
எண் 32 :23

நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.
1 சாமுவேல் 14 :38.

கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
நீதி 16 :6.

பிரியமானவர்களே,

நாம் கர்த்தருடைய வசனத்தை கேட்கும் போது, பாவத்திலிருந்து நாம் மன்னிப்பை பெற்று விட்டோம் என்று நினைத்து கொள்கிறோம். ஆனாலும் திரும்ப திரும்ப நாம் ஏதோ ஒரு பாவம் செய்து அதில் விழுந்து கொண்டிருக்கிறோம்.

நாம் கர்த்தரிடம் வந்து அவரிடம் மன்னிப்பை பெற்றது உண்மை தான்.
ஆனாலும் நாம் பல சூழ்நிலையில் பரிசுத்தமுள்ளவர்களாய் இருப்பதில்லை.ஏதோ ஒரு பாவத்தில் விழுந்தவர்களாகவே காணப்படுகிறோம்.

ஏனெனில் பாவ சுபாவம் நமக்குள் வேர்விட்டு ஆழ பதிந்திருப்பதால் பாவ சுபாவங்கள் நம்மை மறுபடியும் பாவம் செய்ய தூண்டுகிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்.
அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை.
ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
ரோமர் 7:18-19

ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது
என்று கூறுகிறார்.

உங்களுக்கு உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? நீங்கள் பாவத்தை விட்டு வெளியே வர இயலாத நிலையில் உங்கள் குற்ற உணர்ச்சி உங்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறதா?

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களானால், உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்படும்.

“அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின் படியே, அவருடைய இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு அவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” என்று எபேசியர் 1:7 கூறுகிறது.

நமது பாவக்கடனை எல்லாம் இயேசு நமக்காக கொடுத்து தீர்த்து விட்டார், ஆகவே நாம் மன்னிக்கப்படுவோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தேவனிடம் இயேசுவின் மூலமாக உங்களை மன்னிகும்படி கேளுங்கள்.

இயேசு உங்கள் பாவங்களிலிருந்து உங்களை மன்னிப்பதற்காக சிலுவையில் மரித்தார் என விசுவாசியுங்கள்.

நமக்கு உதவியாக பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் துணையாக இருப்பதால் அவர் மூலமாக நாம் பாவத்தின் மேல் வெற்றி பெற்றவர்களாக வாழ முடியும்.

இப்படிப்பட்ட பரிசுத்த வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *