May the quality that is hidden in the heart of a calm and serene spirit adorn you

May the quality that is hidden in the heart of a calm and serene spirit adorn you

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது
1பேதுரு 3:4.

~~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

பூரண அழகுள்ளவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான்.

யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.
“அய்யோ, வழி தெரியாம ரொம்ப தூரம் வந்துட்டேனே…அம்மா..அம்மா…எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்”! என கதறி அழுதான்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்று.
நீ யாரு…எதுக்காக இங்க தனியா நிக்கற? என்றார்.
நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..
அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க. எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே,
அவனை சமாதானப்படுத்தி “சரி, பயப்படாதே… நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?” எனக் கேட்டார்.

அதற்கு “எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க…இந்த ஊருலயே அவங்க தான் அழகு!” என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.

சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே “தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க,

என் அம்மா இன்னும் அழகாக இருப்பாங்க என சிறுவன் பதிலளித்தான்.
வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார்.

ஆனால் “இல்ல… எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!” என்று உறுதியாகக் கூறினான்.
அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் “அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!” என சந்தோஷக் கூக்குரலிட்டான்.

கறுப்பாகவும், பார்ப்பதற்கு அழகற்றும் ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்…
அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். “இதுவா உங்கம்மா..
இவங்களையா நீ அழகுன்னு சொன்ன” என்று சிருவனைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, “ஆமா…அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!” என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான்.

உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவனின், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வேதத்தில் பார்ப்போம்,

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது.
1 பேதுரு 3:4

உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
பிலிப்பியர் 4 :5.

நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.
1 தீமோ 6 :11.

பிரியமானவர்களே,

இந்த உலகத்தில் தாயின் அன்பு ஈடற்றது, இணையற்றது என சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் அழகு என்பதை வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ஒரு போதும் கணக்கிடக்கூடாது.

நாம் நல்லெண்ணத் தோடு பிறருக்கு உதவி செய்யும் போது அவர்களின் கண்களுக்கு நாம் அழகாக தெரிவோம்.

தன்னுடைய தாய் கருப்பாகவும், அழகற்றும் ஒரு கண்ணில் காட்சி இல்லாமல் இருந்த போதும் தன்னை அன்போடும், பாசத்தோடும் நடத்தினதால் அவன் கண்களுக்கு மிகுந்த அழகுள்ளவளாய் காணப்பட்டாள்.

நாம் இந்நாட்களில் எத்தனை பேர்களின் கண்களுக்கு அழகுள்ளவர்களாய் காணப்படுகிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

சிலரின் எண்ணம் இது தான்.” நான் கருப்பாயிருக்கிறன் என்னை யார் நேசிப்பார்கள், எனக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை” என்று எந்நேரமும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.

இருதயம் அழகாக இருப்பவர்கள் தான்‌ இந்த உலகத்தில் மிகுந்த அழகுள்ளவர்கள்.
இந்த தாயைப்போல அன்பும், அரவணைப்பும் நமக்கு இருக்கும் பட்சத்தில் அனைவரின் கண்களுக்கும் நாம் அழகானவர்கள் தான்.

ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார், இளங்கிளையைப் போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும் போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
ஏசாயா 53:2

நாம் விரும்பத்தக்க ரூபம் இல்லாமல் போக காரணம் நாம் தான். நம்முடைய பாவங்களை, வியாதிகளை தன்மேல் சுமந்து கொண்டு அடிக்கப்பட்டு, நொருக்கப்பட்டார். அவர் பூரண அழகுள்ளவராய் இருந்தும் நமக்காக அவருடைய அழகை இழந்தார் மட்டுமல்ல தன் ஜீவனையே கொடுத்தார்.

ஆகவே தான் பல நூறு ஆண்டுகளாக அநேகருடைய இருதயத்தில் மிகுந்த அழகுள்ளவராய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒருவேளை நாம் இந்த உலகத்தில் இருந்து எடுக்கப்பட்டாலும் இந்த உலகம் உள்ளவரை ஆண்டவருடைய அழகும், அன்பும் போற்றப்பட்டுக் கொண்டே இருக்கும்.

எனவே இவ்வுலகில் வாழும் நாட்களில் நம்மால் மற்றவர்களுக்கு முடிந்தவரை உதவுவோம் அழகுள்ளவர்களாய் மாறுவோம்.

இப்படிப்பட்ட வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *