My people will be satisfied with my goodness

My people will be satisfied with my goodness

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 31 :14

~~~~~~~

எனக்கு அன்பானவர்களே!

நன்மையினால் நம்மை திருப்தியாக்குகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

‌ ‌‌ஒரு சிற்பி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதில் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். தலைக்கு மேலே சூரிய வெப்பம் அவரை தாக்கவே, ‘சே, இது என்ன வாழ்க்கை,
எப்போது பார்த்தாலும், இந்த வெயிலில் நின்று இந்த உளியை கையில் வைத்து செதுக்கி கொண்டே இருக்கிறேனே!

எனக்கு வேறு நல்ல வேலையும், எளிதாக அதிகமாக சம்பளமும் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று நினைத்தார்.

அப்போது அந்த வழியாக அந்த நாட்டு ராஜா குதிரையில் வருவதை கண்டார். ஆ, இந்த ராஜாவை போல் தானிருந்தால் எத்தனை நலமாயிருக்கும் என்று எண்ணினார், என்ன ஆச்சரியம், உடனே அவர் ராஜாவாக மாறினார்.

அவர் குதிரையில் பயணித்து கொண்டிருந்த போது, சூரிய வெப்பம் அவர் மேல் அதிகமாக பாய்ந்தபோது, இந்த சூரியன் தான் இந்த ராஜாவை விட பெரியது என்று நினைத்த மாத்திரத்தில், உடனே சூரியனாக மாறினார்.

அப்படி சூரியனாக பிரகாசித்து கொண்டிருந்த போது, ஒரு மேகம் தோன்றி, பூமியின்மேல் மழையை பொழிந்தது. தண்ணீரை அங்கு இருந்த எல்லாவற்றையும் அடித்து கொண்டு போகிற போது, ஒரு பெரிய கல்லை தவிர வேறு எல்லாவற்றையும் அது போகிற வழியில் அடித்துக் கொண்டு சென்றது.

உடனே அந்த சிற்பி, ஆ, அந்த கல் தான் மிகவும் உறுதியானது. என்ன வந்தாலும் அசையவில்லையே என்று நினைத்த மாத்திரத்தில் உடனே ஒரு பெரிய கல்லாக மாறினார்.

அப்போது ஒரு சிற்பி, ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு வந்து, அந்த கல்லை செதுக்க ஆரம்பித்த போது தான், அந்த சிற்பிக்கு தன்னுடைய நிலைமையும், தான் எவ்வளவு வல்லமையுள்ளவரென்பதும் தெரிய வந்தது.

நம்மில் அநேகர் நமக்கு இருக்கிற வசதிகளையும், தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் கண்டு‌ திருப்தி அடைவதில்லை.

மற்றவர்களை பார்த்து, அவர்களை போல எனக்கு இல்லையே என்று அதிருப்திபடுகிறவர்களாகவும், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று முறையிடுகிறவர்களாகவும் காணப்படுகிறோம்.

நாம் இருக்கிற நிலைமையை நினைத்து திருப்தி அடைவதேயில்லை! எவ்வளவு தான் சம்பளம் உயரட்டும், இன்னும் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்ப்பார்ப்பது மனிதனின் இயல்பாக மாறிவிட்டது.

அந்த சம்பளத்திற்கு ஏற்ற வேலை செய்கிறோமா என்று பார்த்தால், ஒரு சிலரைத் தவிர நிச்சயமாக இல்லை. என்பது தான் உண்மை.

வேதத்தில் பார்ப்போம்,

பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.
நீதிமொழி: 27 :20.

ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை;
பிரசங்கி: 4 :8.

அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக் கிரியையின் பலனுக்குத் தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
நீதிமொழி:12 : 14.

பிரியமானவர்களே,

பவுல் சொல்கிறார், ‘என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன்.
தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்’ என்றார்.

நாம் எந்த நிலைமையில் இருந்தாலும், நாம் மனரம்மியமாக இருக்க கற்று கொள்ளும் போது, தேவன் அதில் மகிழ்ந்து, நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கிறார்.

தேவன் நம்முடைய பெலவீனங்களை அறிந்திருக்கிறபடியால், நம்மை ஒருபோதும் கைவிடாமல் நம்மை தாங்கி வழிநடத்த வல்லமைமிக்க தேவனாயிருக்கிறார்.

நம் அன்பின் ஆண்டவர் நமது தேவைகளை சந்தித்து, நம்மை அதிசயமாய் வழிநடத்துவார்.

எகிப்திலிருந்து கானானுக்கு சென்ற இஸ்ரவேலர் கர்த்தரையே சார்ந்து ஜீவித்தபடியால், நாற்பது வருடங்கள் அவர்கள் வனாந்தரத்திலே இருந்தபோதும், அவர்களுக்கு ஒரு குறையையும் தேவன் வைக்கவில்லை.

அவர்களில் சிறுபிள்ளைகள் வளர்ந்தபோது, அவர்கள் துணிகளும்
அவர்கள் செருப்புகளும் பெரிதானது.
ஆனால் அவற்றில் கூட குறைவுகள் காணப்படவில்லை.

அவர்களுக்கு சாப்பிட மாம்சம் வேண்டும் என்று கேட்ட போது, கீழ்காற்று சிவந்த சமுத்திரத்திலிருந்து, காடைகளை கொண்டு வந்து போட்டது.

மாராவின் கசந்த தண்ணீர் மதுரமாக மாறியது. ஒருவர் கூட வியாதிப் படுக்கையில் படுக்கவில்லை. கர்த்தர் அவர்களை அதிசயவிதமாக பாதுகாத்தார். 40 வருடங்கள் அங்குள்ள சிறுவர் முதல் பெரியவர் வரை நடந்து செல்வதற்கான பலனையும், சத்துவத்தையும் தேவன் அவர்களுக்கு கொடுத்தார் ‌.

அதே தேவன் இன்றும் மாறாதவராய் இருக்கிறபடியால் நாம் அவரை சார்ந்து கொள்கிறபோது, நம் தேவைகளை அதிசயமாய் சந்திப்பார். நம் சரீர தேவைகள் மட்டுமல்ல.நம் ஆத்தும தேவைகளையும் அவர் சந்திக்க வல்லவராயிருக்கிறார். நாம் மற்றவர்கள் போல அது இல்லையே இது இல்லையே என்று முறுமுறுக்க தேவையில்லை,

கர்த்தர் அதினதின் நேரத்தில் நம் தேவைகளை சந்தித்து அதிசயமாய் நடத்துவார். நாம் கர்த்தரையே சார்ந்து கொள்கிறபோது இந்த அற்புதங்கள் நம் வாழ்விலும் நிச்சயமாய் நடக்கும்.

இது போன்ற பல நன்மைகளை நம் வாழ்வில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருளிச் செய்வாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *