Put your burden on the Lord

Put your burden on the Lord, and he will sustain you

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்து விடு, அவர் உன்னை ஆதரிப்பார்;
சங்கீதம் 55 :22

~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

நம்மை ஒவ்வொரு நாளும் விசாரித்து வழிநடத்தி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். அவர் காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே போய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்குப் போய் சேர்ந்தார்.

முதலாளி அவரை கடுமையாக திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.

சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் பலமாய் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார்.

சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே” என்று முணுமுணுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார்.

முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது.

இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய்? வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்” என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினான்.

போகும் வழியில்
பாவம்யா நீ காலையில் இருந்துதே உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டி சென்றார் முதலாளி.

தச்சர் வீடு வந்ததும் “தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா” என்று முதலாளி சொன்னார்.
“வீட்டுக்குள் வாங்க முதலாளி” என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார்.

தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அணைத்து முத்தம் கொடுத்தார்.

தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகப்படுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.

காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார்.

தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.

தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், “இந்த மரத்தை தொட்டு விட்டு போனவுடன் காலையில் நடந்த எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது? என்று கேட்டார்.

அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம் . ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு கா்த்தாிடத்தில் என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் உள்ளே செல்வேன்.

வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துக் கொண்டு போகக் கூடாது.

காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்?

நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும் போது இந்த மரத்துக்கு அருகில் நின்று ஜெபம் செய்து பிரச்சனைகள் இல்லாமல் சமாதானமாய் போவேன்.

ஆச்சரியம் என்னவென்றால் நான் மாலையில் என் சுமைதாங்கி மரத்திடம் நின்று ஜெபித்து விட்டு உள்ளே போவேன். அடுத்த நாள் காலை வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் என் தேவன் காத்திடுவார் என்றான்.

தச்சர் சொல்வதைக் கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.

வேதத்தில் பார்ப்போம்,,

அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்.
1 பேதுரு 5:7

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, அப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
கலா6 :2.

கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரேமியா 17 :7.

பிரியமானவர்களே,

அநேக நேரங்களில் தேவன் நமக்கு கொடுத்திருக்கிற வாக்குறுதிகளை நாம் மறந்து விடுகிறோம். ஆகையினால் தான் நம்முடைய பாரங்களை நாமே சுமந்து திரிகிறோம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரக்கமும், மனதுருக்கமும் நிறைந்தவர். “அவர் நம்மை விசாரிக்கிறவர்” என்று வேதம் கூறுகிறது.

இதனுடைய விளக்கம் என்னவென்றால், நாம் எந்தவொரு காரியத்தைக் குறித்தும் வேதனைப்படாமல், கண்ணீர் விடாமல், நம் கவலைகள் யாவற்றையும் அவரிடத்தில் அர்ப்பணித்து விடுவோம் என்பதே.

ஆனால் பல நேரங்களில் நம் பாரங்களை இறக்கி வைக்க நமக்கு வழியிருந்தாலும், அவற்றை இறக்கி வைக்காமல், நாமே வலியுடன் அவற்றை சுமந்து கொண்டிருக்கிறோம்.

நம் வாழ்வின் பிரச்சினைகளை, மனக் கவலைகளை, பாரங்களை, கண்ணீரை நீக்கி, சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கையைக் கொடுப்பதற்காகவே, இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாக பிறந்து சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தார்.

இவ்வுலகத்தில் உங்களுக்கு உபத்திரவங்களும் பாடுகளும் உண்டு என்பது உண்மை தான். ஆனால், உங்களுக்கு எதிராக எழும்பும் சத்துருவை, இயேசு சிலுவையில் ஜெயங்கொண்டார். அவர் நமக்கும் ஒரு வெற்றியுள்ள வாழ்க்கையை தருவேன் என்று வாக்களித்திருக்கிறார்.

ஆம், சர்வ வல்லமையுள்ள தேவனை நீங்கள் துணையாக கொள்வீர்களானால், அவர் உங்கள் பிரச்சினைகள், தேவைகள் யாவற்றையும் பொறுப்பெடுத்துக் கொள்வார்.

ஆகவே, உங்களை கலங்கடிக்கிற பிரச்சினைகள் எதுவாயிருப்பினும், எல்லாவற்றையும் தேவனிடத்தில் அர்ப்பணியுங்கள்.

நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது,எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்.
பிலி 4:6

ஆம், பிரியமானவர்களே, நம் பாரத்தை, கர்த்தரிடம் இறக்கி வைத்து விடுவோம்.
ஏனெனில் அவர் நம்மை தினமும் தேடி வந்து நமது நலம் விசாரிக்கிறவராய் இருக்கிறார். நம் பிரச்சனைகள் என்ன? நம் பாரங்கள் என்ன? நம் எதிர்கால திட்டங்கள் என்ன? போன்ற எல்லாவற்றையும் அவரிடம் கூறுவோம்.

இந்த உலகில் அநேகர் ” நான் தனிமையில் இருக்கிறேனே, என்னை விசாரிக்க யாரும் இல்லையே, என் நலம் விசாரிக்க ஒருவரும்
இல்லையே , என் எதிர்கால வாழ்வு என்னவாய் இருக்குமோ? ” என்ற ஏக்கத்தில் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. என்னையும் விசாரிக்க ஒருவர் இருக்கிறார் என்று. அவர் தான் “இயேசு.

அவரே நமக்கு நல்ல தகப்பனாக,தாயாக, நல்ல நண்பராக, சுகம் தரும் மருத்துவராக, சிறந்த ஔஷதமாக எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருந்து வழிநடத்துவார்.

நம் கர்த்தராகிய இயேசுவின் ஆறுதலைப் பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *