Rejoice in the Lord always

Rejoice in the Lord always

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
பிலிப்பியர் 4:4.

=========================
எனக்கு அன்பானவர்களே!

சமாதானத்தின் தேவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

மிகுந்த மனக்குழப்பத்துடன் கடற்கரையில் ஒரு வாலிபன் உட்கார்ந்திருந்தான்.

சற்று தூரத்தில் குடித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த சில வாலிபர்களைக் கண்டு, “எந்தக் கவலையுமில்லாமல் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள்” என்று தனக்குள் ஏக்கமுற்றாவனாயிருந்தான்.

அந்த வாலிபர்கள் சற்று நேரத்தில் கலைந்து போகையில், ஒருவன் மாத்திரம் கடற்கரையில் உட்கார்ந்திருந்தான். அவனிடம் போய் , “ஏன் நீ மாத்திரம் இங்கே இருக்கிறாய்” என்று கேட்டபோது, ஆம் “அவர்கள் எல்லாரும் போய் விட்டனர்.

குடியும் கும்மாளமும் முடிந்து விட்டது. ஆனால், என் பிரச்சனை தீரவில்லை. திரும்பி என்னால் வீட்டுக்கு போக முடியவில்லை என அழுதான்! அப்போது தான் புரிந்தது.அவர் உண்மையாகவே சந்தோஷமாய் இல்லை என்று.

ஆங்கிலத்திலே Happy, Joy என இரு சொற்களை உபயோகிப்போம். இதில் முதலாவது, சந்தோஷம்! இது சூழ்நிலை சார்ந்தது எனவும், joy என்பது சூழ்நிலை சாராதது எனவும் அர்த்தப்படுத்துவது
உண்டு.

‘சந்தோஷம்’ என்பது இரு பக்கமும் நெருக்குகின்ற வேதனைக்கு நடுவிலே கிடைக்கின்ற ஒரு இடைவெளி என சில தத்துவமேதைகள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரையில், அதாவது உலகத்தைப் பொறுத்த வரையில் அது உண்மை தான். ஆனால், வேதனையின் மத்தியில் ஒரு சிறு இடைவெளி நேரம் சந்தோஷமாக இருப்பதில் வேதனை தீருமா? அந்த அற்ப சந்தோஷ நேரம் முடிவுக்கு வரும்போது, திரும்பவும் வேதனை தாக்குகிறது.

இந்த கடினமான சூழ்நிலைகளின் வழியாக கடந்து செல்கிறவர்களுக்கு இந்த வார்த்தை சற்று வித்தியாசமாக தோன்றலாம்.

ஆனால், இந்த வார்த்தையில் உண்மை மறைந்திருக்கிறது. வாழ்க்கையில் நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்தாலும் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார்.

குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டும் நாம் மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமென்று குறிப்பிடவில்லை. நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் நாம் நம்ப வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.

கர்த்தருக்குள் ஒருவர் மகிழ்ச்சியாயிருப்பது எப்படி? நாம் சமாதானத்தையும் தேவனுடைய அன்பையும் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியமா? ஆம், கர்த்தரை நம்பி முற்றிலுமாக அவரை சார்ந்து கொள்கிறவர்கள் இந்த தெய்வீக ஆசீர்வாதத்தை பெற்று சந்தோஷமாய் வாழ்வது சாத்தியமே.

மனிதனுடைய வாழ்க்கையில் எப்பொழுதும் துக்கமும், துயரமும், மனக்கவலைகள், மனக் கஷ்டங்கள் என்று அநேகம் இருக்கின்றன. சொல்லப் போனால் வாழ்க்கையில் பெரும் பகுதி இவ்விதமான காரியங்களால் தான் நிறைந்திருக்கிறது.

வேதத்தில் பார்ப்போம்,

உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்;
செப்பனியா 3 :17.

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
ரோமர் 12 :12.

இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும் படி பெற்றுக் கொள்வீர்கள்.
யோவான் 16 :24.

பிரியமானவர்களே,

பவுல் சிறைச்சாலையில் இருந்தபோது பிலிப்பியர் நிருபம் எழுதப்பட்டது (பிலிப்பியர் 1:13.) பவுல் ஒரு சிறைச்சாலையில் இருந்தபொழுது சந்தோஷத்தை குறித்து இவ்வளவு அதிகமாக எழுதினார் என்பதைப் பார்ப்பது சவாலாய் இருக்கிறது.

நம்முடைய சூழ்நிலைகளெல்லாம் சௌகரியமாய் இருக்கும் பொழுது சந்தோஷத்தை குறித்துப் பேசுவது எளிதாய் இருக்கலாம். ஆனால் நம்முடைய சூழ்நிலைகள் கடினமாக இருக்கும் பொழுது சந்தோஷத்தை குறித்து எழுதுவது முற்றிலும் வேறுபட்ட ஒரு காரியம்.

ஒரு கிறிஸ்தவன் எல்லா சூழ்நிலைகளிலும் சந்தோஷத்தோடு இருப்பது சாத்தியம் என பவுலினுடைய வார்த்தைகள் நமக்குப் போதிக்கிறது. அதுதான் கிறிஸ்துவினுடைய சிந்தை, கிறிஸ்துவினுடைய மனப்பான்மையும் கூட.
தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின நாள் இரவில், இயேசு சந்தோஷத்தை குறித்து அதிகமாய் பேசினார்
யோவான் 15 மற்றும் 16 ஆம் அதிகாரம்.

கடைசி இராபோஜனத்தில், “உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்கு சொன்னேன்” என்றும் “உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப் போடமாட்டான்” என்றும் “என்னுடைய சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்” என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்கு சொன்னார்.

இன்னும் சில மணி நேரங்களில் அவர் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, ஒரு குற்றவாளியைப் போல வெளியரங்கமாக சிலுவையில் அறையப்படப் போகிறார். இருப்பினும், அவர் தம்முடைய சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து, அவர்களை உற்சாகப்படுத்தினார்

இந்த கிறிஸ்துவின் சிந்தையையும், கிறிஸ்துவின் மனப்பான்மையையும் பவுல் பெற்றிருந்தார். அவர் சிறைச்சாலையில் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தார். பவுல் இந்தக் கடிதத்தை எழுதிய போது
அப்போஸ்தலர்: 28:16, 30,31 வீட்டுக்காவலில் (house arrest) இருந்தாரோ அல்லது உண்மையான ரோம சிறைச்சாலையில் இருந்தாரோ என்பது நமக்குத் தெரியாது.

அந்த நாட்களில் ரோம சிறைச் சாலைகளானது எலிகளினாலும், கொசுக்களினாலும், ஊரும் பூச்சிகளினாலும் நிறைந்த இருண்ட நிலவறைகளாய் (dark dungeons) இருந்தது. அங்கே கைதிகள் தரையிலே உறங்க வேண்டும்.

அவர்களுக்கு மிகவும் குறைவான உணவே கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு இடங்களில் எந்த இடத்தில் பவுல் இருந்தாலும், சூழ்நிலைகள் மோசமாகத் தான் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் கூட பவுல் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தார்.

சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததற்காக அவர் சிறைப்பட்டிருந்தார். ஆனால் தன்னுடைய துக்கங்களுக்காக அவர் கண்ணீர் விடவில்லை. யாரிடத்திலும் எந்த ஒரு அனுதாபத்தையும் அவர் விரும்பவில்லை. அவர் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தார்.

நம் வாழ்விலும் கஷ்டங்களும், கவலைகளும் பெருகும் போது, நாம் நமது சூழ்நிலைகளையோ, கவலைகளையோ பார்த்து கலங்காமல், நம் வாழ்வை சந்தோஷமாய் மாற்றும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்ற விசுவாசத்தை ஒவ்வொரு நாளும் மெருகேற்றுவோம்.

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானம் நம் யாரோடும் கூட இருப்பதாக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *