Let us test and examine our ways, and return to the LORD!
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவோம்.
புலம்பல்: 3:40
================அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு தேவ பக்தர், ஆண்டவரையும் அவரது வார்த்தைகளையும் மிகவும் நேசிக்கிறவர். ஒருமுறை அவர் வசித்து வந்த பகுதியில் மழை பெய்து வெள்ளம் வந்தது. மக்கள் யாவரும் பயந்து வீடுகளை விட்டு ஓடினர்.
அவர்கள் இவரிடம் வந்து, ஐயா இந்த வெள்ளம் மிகவும் அபாயமானது, நீங்களும் எங்களுடன் வந்து விடுங்கள் என்று அழைத்தனர். அவரோ, என் தேவன் என்னைக் காப்பாற்றுவார். அவர் வாக்கு மாறாதவர் என்று வேத வசனங்களையெல்லாம் சொல்லி, தப்பிப் போக மறுத்து விட்டார்.
வெள்ளம் உயர்ந்தது. அப்பொழுதும் படகுகளில் வந்து இவரை அழைத்தார்கள். இவரோ மறுத்து விட்டார். வெள்ளம் உயர உயர இவரும் கூரையில் ஏறி, பின்னர் ஒரு தென்னை மரத்தில் தொங்கிக் கொண்டார். அப்போதும் வானூர்த்தியிலே வந்தவர்கள் கயிறு ஒன்றைக் கீழேவிட்டு, அதைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறும்படி கூச்சலிட்டு கூப்பிட்டனர்.
இவரோ என் ஆண்டவர் என்னைக் காப்பார், இப்படியாகத் தப்பித்துக் கொண்டால் என் விசுவாசம் பரியாசமாகி விடும் என்று மறுத்து விட்டார்.
நடந்தது என்ன? மரம் விழுந்து அவர் இறந்து விட்டார். இறந்தவர் ஆண்டவரிடம், ‘உம்மை நான் எவ்வளவாக நம்பி விசுவாசித்தேன். வாக்குமாறாத நீர் என் விஷயத்தில் வாக்கு மாறியது என்ன?’ என்று கேட்டாராம்.
அன்பின் ஆண்டவர் , ‘மகனே, நான் வாக்கு மாறவேயில்லை. உன்னைத் தப்புவிப்பேன் என்ற என் வாக்குப்படி எத்தனை தடவை உன்னைத் தப்புவிக்க நான் முயற்சி செய்தேன்.
மக்களை அனுப்பினேன்…….
படகை அனுப்பினேன்……
ஏன் வானூர்த்தியையும் அனுப்பினேன்….. ஆனால் நீயோ மறுத்துவிட்டாய்; நீ என்னை நம்பவில்லை, என் வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை. நான் என்ன செய்வேன்? என்றாராம்.
இப்படித் தான் நாமும் அனேக நேரங்களில் கர்த்தரையே சோதித்துப் பார்க்கிறோம்; அல்லது, நாம் நினைத்தபடி தேவன் நடக்க வேண்டும் என்று தப்புக் கணக்குப் போடுகிறோம்…….
இந்த மனிதர் கர்த்தரை நம்பியது தவறா? அல்லது, அவரது விசுவாசம் பொய்யா? இரண்டுமேயில்லை.
அப்டியென்றால் தவறு எங்கே? அன்று மாத்திரம் அந்த வெள்ளம் வற்றிப்போய், அல்லது அந்த வெள்ளத்திலும் இவர் உயிர் தப்பி இருந்தால் நான் விசுவாசித்தபடி கர்த்தர் என் உயிரைக் காத்தார் என்று சொல்லியிருக்கக் கூடும்.
ஆனால் படகோ கயிறோ வானூர்த்தியோ காப்பாற்ற வந்தபோதும், தான் எண்ணியபடி அற்புதமான விதத்தில் எதுவும் நடக்காதபடியினாலே அவரால் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வேதத்தில் பார்ப்போம்,
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்
1 தெச: 5:21
கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள்.
எபே: 5:10
கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்.
செப் :1:12
பிரியமானவர்களே,
கர்த்தர் அற்புதம் செய்கிறவர் தான். நம்மை
காக்கிறவர் காப்பார்; அதற்காக நாம் நினைத்த வழிகளில் தான் அவர் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்பது நியாயமா?
நீ தண்ணீரையும் ஆறுகளையும் கடக்க நேர்ந்தாலும் நான் உன்னோடு இருப்பேன் என்று கர்த்தர் சொன்னது சத்தியம் தான். அதற்காக நான் நினைத்தபடி தான் அவர் என்னோடு இருக்க வேண்டும் என்று நினைப்பது நியாயமா?
“கர்த்தருடைய ஆலோசனையில் கூட நின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?”
எரே 23:18
இப்போது நம்முடைய பிரச்சனை என்ன என்பது விளங்குகிறதா? கர்த்தருடைய வழி என் வழியாயிருக்க வேண்டும் என்பதை சற்றேனும் நினையாமல், என் வழி கர்த்தருடைய வழி என்பது போல நாம் வாழுகிறோம்.
கர்த்தருடைய நினைவின்படி அல்ல; என் நினைவின்படி கர்த்தர் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது ஜெபங்களும் அதே பிரகாரம் தான் இருக்கிறது.
நமது பிரச்சனைகளையும் முறையிட்டு, அதிலிருந்து தப்பிக் கொள்ளக் கூடிய வழியையும் கர்த்தருக்கு நாமே கற்பித்து, அதன்படி நடக்க கர்த்தரையே அழைக்கின்ற அளவுக்கு நாமே தான் கதாநாயகர்களாகி விட எண்ணுகிறோம் என்பது தான் உண்மை.
நான் கேட்டேன், கர்த்தர் செய்தார் என்பது தான் அநேகருடைய சாட்சியாகவும் இருக்கிறது. ஆம், உண்மைதான், கர்த்தர் தமது பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்பார், நாம் கேட்டபடியும் செய்வார். அது அவருடைய சுத்த கிருபை. மாறாக, நாம் சொல்ல அவர் கேட்க, அவர் நமது வேலையாள் அல்ல.
அவர் கர்த்தர். அவர் ராஜரீகம் செய்கிறவர். அவரது வழிகள் உயர்ந்தவைகள். அவர் நம்மைத் தப்புவிப்பது சத்தியம்; ஆனால் அது நாம் நினைக்கும் வழியில் அல்ல. அவர் வழிகள் உயர்ந்தவைகள்.
“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே”
எரே: 29:11
நாம் எதிர்பார்க்கும் முடிவை கர்த்தர் தருவார் என்று இந்த வார்த்தையைக் குறித்து தவறான விளக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியாது.
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
1 யோவான் 5:14
ஆம், நம் ஆண்டவரின் சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுப்போம்.
மேலான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு உதவி செய்வாராக.
ஆமென் .