Seek First The Kingdom Of God and His Righteousness

Seek First The Kingdom Of God and His Righteousness

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். – மத்தேயு 6:33.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே!
ஆசீர்வாதத்தின் ஊற்றும் உறைவிடமும் காரணருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு கல்லூரியின் பேராசிரியர் வாழ்க்கை தத்துவ வகுப்பில் தன் மாணவர்களுக்கு முன் சில பொருட்களை வைத்து சொல்லி தர ஆரம்பித்தார்.

ஒரு பெரிய வாயகன்ற பாட்டிலை கொண்டு வந்து, அதில் கோல்ப் பந்துகளினால் நிரப்பினார். நிரப்பி விட்டு, தன் மாணவர்களிடம் ‘இந்த பாட்டில் நிரம்பி விட்டதா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘ஆம் நிரம்பி விட்டது’ என்றார்கள்.

பின் அதில் உருண்டையான சிறிய கற்களினால் நிரப்பி, அந்த பாட்டிலை மெதுவாக உலுக்கினார். அந்த கல் உருண்டைகள் பந்துகளுக்கு இடையில் அங்கங்கு போய் அமர்ந்தது. பின் மாணவர்களிடம் ‘இப்போது பாட்டில் நிரம்பி இருக்கிறதா?’ என்று கேட்க, அவர்களும் ‘ஆம் நிரம்பியிருக்கிறது’ என்று சொன்னார்கள்.

பின்னர் அந்த பாட்டிலில் மணலை கொண்டு வந்து நிரப்பினார். அதற்கும் அந்த பாட்டிலில் இடம் இருந்தது. பின் மாணவர்களிடம் ‘இப்போதும் நிரம்பி இருக்கிறது அல்லவா?’ என்று கேட்டார். அதற்கு மாணவர்கள், ஆம் என்று கூறினார்கள்.

பின் அந்த பேராசிரியர் மாணவர்களிடம், ‘இந்த உதாரணத்தை வைத்து உங்களுக்கு வாழ்க்கையை குறித்து விளக்க விரும்புகிறேன். இந்த பாட்டில் உங்கள் வாழ்க்கை போன்றது.

இந்த கோல்ப் பந்துகள் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள முக்கியமானவர்களை குறிக்கிறது. ஆண்டவர், உங்கள் குடும்பம், போன்ற முக்கிய உறவுகளை குறிக்கிறது.

வாழ்க்கையில் நீங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டாலும், இவர்களை நீங்கள் இழக்காவிட்டால், உங்கள் வாழ்க்கையில் எல்லாம் இருப்பதை போலத் தான் இந்த உறவுகள் உங்களுக்கு இருக்கிறார்கள்.

பின் போடப்பட்ட உருண்டையான கற்கள், உங்கள் வேலை, உங்கள் வீடு, உங்கள் கார் போன்றவற்றை குறிக்கிறது. இவை இல்லாமலும் நீங்கள் வாழ்ந்து விடலாம்.

மணல், மற்ற எல்லாவற்றையும் குறிக்கிறது, அதாவது தேவையற்றவைகளை!
உங்கள் வாழ்க்கையில் முழுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டுமென்றால் அது நீங்கள் மேலே காணப்பட்ட மூன்று காரியங்களில் எதை முக்கியமானதாகவும் முதலிடமாகவும் தெரிந்து கொள்கிறீர்களோ அதை பொறுத்தது.

மணலை முதலாவது நிரப்பி, அதற்கு இடம் கொடுத்தால், கோல்ப் பந்துக்கோ, கற்களுக்கோ இடமில்லாமற் போகும்.

உங்கள் நேரத்தையும், உங்கள் கவனத்தையும், உங்கள் பெலனையும் மணல் போன்ற தேவையற்ற காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து வாழ்ந்தீர்களானால், உங்களுக்கு கோல்ப் பந்து, கற்கள் போன்ற முக்கிய காரியங்களுக்கு இடமே இல்லாமல் போய் விடும்.

ஆமோஸ் 5:14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.

ஆகவே நாம் எதற்கு முக்கியத்துவமும் முதலிடமும் கொடுக்கிறோமோ அதுவே நம் வாழ்க்கையின் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் நிர்ணயிக்கும்.

வேதத்தில் பார்ப்போம்,

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
1 நாளா 16 :11.

கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
ஏசாயா 55 :6.

தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
லூக்கா 12 :31.

பிரியமானவர்களே,

இந்நாளில்
நாம் யாருக்கு முதலிடம் தருகிறோம்? ஆண்டவருக்கா? அல்லது நம் குடும்பத்திற்கா? அல்லது தேவையில்லாத மற்ற காரியங்களுக்கா? ஆட்களுக்கா? ஆடம்பரத்திற்கா?

நாம் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்கும்போது, நம் வாழ்வில் எல்லாவிதமான சந்தோஷமும், சமாதானமும், மனநிறைவும் நம் தேவைகளும் சந்திக்கப்படும்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் என்று வேத வசனம் சொல்கிறது.

நம்மில் சிலர்; கர்த்தரை தேடாதபடி, அவருடைய ராஜ்ஜியத்திற்குரிய காரியங்களை தேடாதபடி, எப்படியாவது நம் வாழ்வில் ஆசீர்வாதம் வேண்டும், நம் வாழ்வு செழிக்க வேண்டும் என்று எத்தனையோ பிரயத்தனம் பண்ணுகிறோம்.

அதற்காக “ஓவர்டைம்” வேலை என்று இரவும் பகலும் ஓயாமல் உழைத்து ஓடாய் தேய்ந்து போகிறோம். சிலர் சற்றும் ஓய்வெடுக்காதபடி தொடர்ந்து எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று உழைக்கிறார்கள்.

கடைசியில் வியாதி வந்து படுக்கையில் இருக்கும்போது, அவர்கள் சம்பாதித்த சம்பாத்தியம் மற்றவர்கள் தான் அனுபவிப்பார்களே தவிர அவர்களால் அனுபவிக்க முடியாமற் போய் விடுகிறது.

“ஆரோக்கியமே சிறந்த சொத்து” என்கிற பழமொழி உண்டு. ஆரோக்கியம் இருந்தால் எல்லாமே உண்டு. ஆரோக்கியம் இல்லாவிட்டால், எல்லாவற்றையுமே இழந்ததை போலத்தான்.

கர்த்தருடைய ஆசீர்வாதம் இல்லாமல் நாம் பாடுபட்டு, சம்பாதிக்கிற எல்லாமே வீண் தான். கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்.அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் நீதிமொழிகள் 10:22. என்று வேதம் கூறுகிறது.

முதலாவது அவருடைய ராஜ்ஜியத்தையும், நீதியையும் தேடும்போது, நமக்கு வேண்டிய வேதனையில்லாத ஆசீர்வாதங்களை நமக்கு நிறைவாய் கொடுப்பார்.

மற்றபடி நாம் படும் பாடுகளும், பிரயத்தனங்களும் எல்லாமே வீணாக போய் விடும். ஆகவே நாம் கர்த்தரை தேடுவோம், அவருக்கே நம் வாழ்வில் முதலிடம் கொடுப்போம். மற்றவற்றை அவர் பார்த்து கொள்வார்.

கர்த்தருடைய ஆசீர்வாதம் நம் யாரோடும் இருப்பதாக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *