The God of Jacob is our fortress
இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான்.
மத்தேயு 1:23
=========================எனக்கு அன்பானவர்களே!
இம்மானுவேலராய் நம்மோடு இருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவமனையில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆறு வயது பெண் பிள்ளை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தாள். அவளுக்கு ஒவ்வொரு உறுப்புகளாக செத்துக் கொண்டே வந்தது.
அவளுக்கு இருதயம் மட்டும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, இரண்டு நாளில் அவள் மரித்து விடுவாள் என்று அங்கிருந்த செவிலியர்கள் சொன்னார்கள்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அந்த பிள்ளை கேட்டுக் கொண்டிருந்தாள். உடனே அவளுக்கு மரணபயம் வந்து விட்டது. எங்க அப்பா என்கூட இருந்தா நான் தைரியமாக இருப்பேன் என்று அப்பாவைக் கூப்பிட்டு, “அப்பா, எனக்கு தனியாக சாக பயமா இருக்கு. என்கூட வருவீங்களா?” என்று கேட்டாள்.
அவளுக்கு என்ன பதில் சொல்ல முடியும். “உனக்கு ஒன்றும் நேரிடாது, நீ பயப்படாதே! நான் உனக்குச் சாக்லேட் வாங்கிட்டு வருகிறேன்” என்று சொல்லி வெளியே போய் விட்டார்.
அந்த பிள்ளை, “அம்மா என்னை அதிகமாக நேசிக்கிறாங்க! கண்டிப்பாக என் கூடவே வருவார்கள்” என்று சொல்லி, “அம்மா எனக்குத் தனியாக சாக பயமா இருக்கு. என்கூட வருவீங்களா?” என்று கேட்டது.
அந்த அம்மா ஓ! என்று அழுது அந்த மருத்துவமனையில் இருந்த ஆலய வாசலில் போய், இயேசு யார் என்று தெரியாவிட்டாலும் ஆண்டவரே! என்று அங்கே போய் கதறி அழுதார்கள். அவர்கள் திரும்பி வரும் போது இந்தப் பிள்ளை ரொம்ப உற்சாகமாக இருந்தது.
இந்தப் பிள்ளை அம்மாவைப் பார்த்து, “அம்மா, கவலைப்படாதீங்க. நீங்க வரவேண்டாம், அப்பாவும் வர வேண்டாம். எனக்கு பயம் போய் விட்டது. என்கூட இயேசு வருவார் என்றாள்”.
மேலும் அவள் சொன்னது: “நீங்க எல்லாரும் போயிட்டீங்க. அப்போது ஒரு வெள்ளை உடுப்பு அணிந்திருந்தவர் நான் தான் இயேசு.
நான் இந்த மரணத்தின் வழியாக கடந்து போயிருக்கிறேன். மரண பயத்தில் இருப்பவர்களை விடுவிக்கும்படி நான் வந்திருக்கிறேன்.
பயப்படாதே, நீ சாகும் பொழுது நான் உன்கூட இருந்து உன்னைக் கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொன்னார்” என்றாள்.
உன் தகப்பனும் உன் தாயும் உன்னை கைவிட்டாலும் இம்மானுவேலராய் வாழ்வில் மட்டுமல்ல மரண வேளையிலும் கூட நம்மோடு கூட இருக்கிறவர் தான் நம் அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
எத்தனையோ பரிசுத்தவான்கள் அவர்கள் மரணத்தின்போது, அவர்கள் சந்தோஷமாய் மரிக்கக் காரணம் இயேசு அவர்களோடு இருப்பதை உணர்ந்ததினால் தான்.
நமக்கு மரண பயத்தை நீக்கிப் போடவே, அவர் இம்மானுவேலராய் நம்மோடு இருக்கிறார்
தாவீது ஆண்டவரோடு நெருங்கி இருந்தான். எப்பொழுதும் தேவனிடத்தில் விசாரித்துக் கேட்பான். சங்கீதம்:23-ம் அதிகாரம் 4-ம் வசனத்திலே இப்படிச் சொன்னான்: “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்”.என்றார்.
தாவீதுக்கு இருந்த விசுவாசம் மரண இருளின் பள்ளத்தாக்கிலும் தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர், ஆகையால் நான் மரணத்திற்கு பயப்பட மாட்டேன்.
எபிரெயர் 2-ம் அதிகாரம் 15-ம் வசனத்தைப் பாருங்கள், “ஜீவ காலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத் தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும் படிக்கும் அப்படியானார்”.
எப்படியென்றால் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவராய் பூமியிலே பிறந்தார். தாவீது அதை அறிந்திருந்தபடியால்தான் அவன் சொல்லுகிறான், மரண இருளின் பள்ளத் தாக்கிலே நான் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் ஏனென்றால் இயேசு இம்மானுவேலராய் என்னோடு கூட இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டான்.
வேதத்தில் பார்ப்போம்,
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஏசாயா 7: 14.
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
மத்தேயு 1:23
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.
சங்கீதம் 46 :11.
பிரியமானவர்களே
பிசாசின் சோதனைகள் பயங்கரமாய் வரும் போது அநேக நேரத்தில் நம்மை அழிக்கிறது போலவே வரும். நம்மால் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலைகள் கூட நேரிடலாம்.
அந்த நேரங்களில் தேவன் இம்மானுவேலராய் நம்மோடு இருக்கிறார். அவர் தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினால், சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதை நம் வாயினால் அறிக்கை செய்தால் தேவனுடைய பிரசன்னம் நம்மோடு இருக்கும்.
நான் பாவத்தில் விழ மாட்டேன் என்கிற ஒரு விசுவாசம் நமக்குள் பெலப்படும் பொழுது நாம் அந்த சோதனையில் தப்பித்துக் கொள்வோம். ஒருவேளை பொருளாசை என்ற சோதனையாகக் கூட இருக்கலாம் அல்லது லஞ்சம் வாங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் நேரிடலாம்.
யாரிடத்திலாவது அதிகமாக ஒன்றைப் பெற்றுக் கொள்ள நமக்கு திடீரென்று ஒரு வாய்ப்பு வரலாம். இந்தமாதிரி நேரங்களில் இயேசு இம்மானுவேலராய் நம்மோடு இருப்பதை நாம் உணர்ந்து கொண்டால், நாம் எளிதில் பாவம் செய்ய மாட்டோம்.
ஆகவே, அவர் இம்மானுவேலாய் நம்மோடு இருப்பது பாவ சோதனைகளில் நாம் ஜெயம் எடுப்பதற்காக நம்மோடு கூட இருக்கிறார். கர்த்தர் யோசேப்போடு இருந்தார். யோசேப்பு சொன்னார், இத்தனை பெரிய பொல்லாப்புக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாய் நான் பாவம் செய்வது எப்படி? அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
இப்படிப்பட்ட உணர்வோடு நம் வாழ இம்மானுவேலராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்.