The Lord is always with you.

The Lord is always with you

ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
ஏசாயா 11:1

==========================
எனக்கு அன்பானவர்களே!

ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒருவர் வீட்டு முதலாம் மாடியிலுள்ள ஜன்னலுக்கருகில் கிளைகளற்ற ஒரு காட்டு மரம் நேராக முளைத்தெழும்பியது. அதை எப்படி வெட்டி எறிவது என்று சிந்திக்கையில், ஒருநாள் திடீரென வீசிய பலத்த காற்றில் அது முறிந்து விழுந்தது.

ஆனால், சொற்ப நாட்களில் , அது மறுபடியும் பல கிளைகளுடன் ஆரவாரமாக செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது

அடியோடே முறிந்து விழுந்து போன மரமே செழித்து வளருமானால், முறிந்து போன நமது வாழ்வை குறித்து இறக்க செய்யாமல் இருப்பாரோ ? நமக்கு வாழ்வு கொடுக்கவே அவர் இளந்தளிராக துளிர்த்து விட்டார்.

வேதத்தில் பார்ப்போம்,
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்;
ஏசாயா 53 :2

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப் பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
எரேமியா 23:5.

மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.
ரோமர் 15:12

பிரியமானவர்களே,

வாக்குப்பண்ணப்பட்ட மேசியா தீர்க்கதரிசனப் பிரகாரமாக “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து [தாவீது ராஜாவின் தந்தையிலிருந்து] ஒரு துளிர் தோன்றி” மேலும் ‘ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேர்’ ( இயேசு ) என்று இரண்டு விதமாகவும் அழைக்கப்பட்டுள்ளார்.

தமது ஜனத்தைத் திருத்துவதற்காக கர்த்தர் தாமே அசீரியனை எழுப்பி விட்டார். அவனோ மேட்டிமை கொண்டு யூதாவை அடிமட்டம் மட்டும் அழித்துப் போட்டான்.

நம்பிக்கையெல்லாம் அற்றுப்போன நிலையிலே யூதா விழுந்தது. அந்த சமயத்திலே கர்த்தர் யூதாவுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். அசீரியனுடைய பெருமை, வல்லமை யாவையும் தாம் அழிப்பேன் என்கிறார் .
‘உன் தோளினின்று அவன் சுமையை நீக்குவேன்’ என்கிறார்.

அத்துடன் விட்டு விடவில்லை. இனி எழும்ப முடியாது என்று உன்னைக் குறித்து அசீரியன் நினைக்கலாம். ஆனால் அடிமட்டும் வெட்டப்பட்ட ஈசாய் (தாவீதின் தகப்பன்) என்னும் அடி மரத்திலிருந்து, ஒரு துளிர் தோன்றும், அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும் என்று வாக்குப் பண்ணினார்.

அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றும் என்று கூறுவதால் முற்றிலுமாக அந்த மரம் இல்லாமல் போய்விட்டது என்று எண்ணுமளவிற்க்கு அந்த மரம் இருக்கும்.ஆனால் காலம் வரும் போது புதிய துளிர் தோன்றி, கிளை எழும்பி செழிக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

தேவன்
அந்த வாக்குப்படியே மேசியாவான இயேசுகிறிஸ்து உலகில் வந்து பிறந்தார்.
நம்பிக்கை யாவும் அற்றுப் போனாலும், எதிர்பாராத விதத்தில் நமது வாழ்வில் துளிர் தோன்றப் பண்ணுகிறவர்.

கர்த்தர் கொடுத்த அனுமதியை பெருமையினாலே துர்ப்பிரயோகம் செய்த அசீரியா, பின்னர் பாபிலோனின் அதிகாரத்தினால் வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் அது எழும்பவேயில்லை. ஆனால், யூதா இன்றும் நிலைத்திருக்கிறது.

தேவபிள்ளையே, நீ தேவனுக்குப் பிள்ளையானால் உனக்கு ஏன் வீண் கலக்கம்? உன் அடிமரம் ஒருபோதும் அழிந்துபோக தேவன் அனுமதிக்கமாட்டார். வேதாகம வாக்குப்படி மேசியா வந்ததால் இன்றும் நமக்கு அந்த நம்பிக்கை உண்டு.

ஒரு நாளில் இராஜவம்சம் அடிமரமாக மாறிவிடும் என்று ஏசாயா கூறுகின்றார்.
ஏசாயாவின் காலத்திற்கு பின், ஏறக்குறைய கி.மு. 600-ஆம் ஆண்டில் பாபிலோனியர்கள் எருசலேமை மேற்கொண்டு,

ராஜவம்சத்தை சிதைத்திட்டபோது, இந்த மரம் அடியோடு சாய்ந்து இஸ்ரவேலர்களை பாபிலோனிய சிறையிருப்புக்கு நேரே கொண்டு சென்றது.

இது யூதர்களின் முதல் வெளியேறுதல் – இவர்களில் சிலர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர்.
தீர்க்கத்தரிசனத்தில் ஒட்டுமொத்த இராஜவம்சத்தின் வரிசையும் ஒரு முடிவுக்கு வந்து .

முழுவதுமாக அழிக்கப்பட்ட நிலையில்
வீழ்ந்து போயிருந்த இடத்திலிருந்து தான் ஒரு புதிய துவக்கத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே புதிய துளிராக தோன்றினார்.நமக்குபுதிய வாழ்வை அளிக்க வந்தார்.

இந்த நல்ல இயேசு கிறிஸ்து நமக்காக நம் வாழ்வை செழிக்கச் செய்யவும், புதிய துவக்கத்தை தரவும் நம்முடனே இருக்கிறார்.

எல்லாமே என் வாழ்க்கையில் முடிந்து போய்விட்டதே, எந்த ஒரு மகிழ்ச்சியும் இல்லாமல் மனம் கலங்கிய நிலையில் இருக்கிறீர்களா? பயப்படாதீர்கள் ஏனென்றால் நமக்காக கிறிஸ்து எனும் கிளை துளிர்த்து விட்டது .

தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.
சங்கீதம் 90:15. என்று குறிப்பிடுகிறார்.

ஆம் பிரியமானவர்களே,
நாம் துன்பத்தையும் துயரத்தையும் கண்ட வருஷங்கள் அநேகமாய் இருந்தாலும், அதற்கு பதிலாக பல மடங்கு சந்தோஷமும் மகிழ்ச்சியும் நமக்கு கொடுக்கும்படிக்கு நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஈசாயென்னும் அடி மரத்திலிருந்து முளைத்து வந்து விட்டார்.

நம் அன்பின் ஆண்டவரை விசுவாசிப்போம் இவ்வுலகில் மகிழ்ச்சியுடனும் வாழ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு உதவி செய்வாராக..

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *