You see that faith is made perfect by works
விசுவாசம் அவனுடைய கிரியைகளோடே கூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.
யாக்கோபு 2 :22.
=========================
எனக்கு அன்பானவர்களே!
நம் முயற்சிகளை வாய்க்க செய்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒருநாள் விவசாயி ஒருவன் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி, மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழுந்து, வண்டி சாய்ந்து விட்டது. “கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்யும்!” என்று அவன் மனம் உருக வேண்டினான்.
கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.
கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது.
அப்போது தான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் “மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ எனக்கு செய்து விட்டாய்!” என்றான்.
“கடவுளே! உதவி செய்!” என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால் தான், கடவுள் உனக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவி செய்வார். இப்பொழுது என்னைக் கொண்டு உதவி செய்தது போல..அதற்கு நீ தான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!” என்று கூறி விட்டு அந்த வழிப்போக்கன் தன் வழியே நடந்தான்.
வேதத்தில் பார்ப்போம்,
விசுவாசம் அவனுடைய கிரியைகளோடே கூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.
யாக்கோபு 2 :22.
சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சி பண்ணு.
1 தீமோ4 :7.
சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
1 தீமோ 4 :8.
பிரியமானவர்களே,
முயற்சி திருவினையாக்கும்” அதிலும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை” கொண்டு வரும் என்பார்கள்.
எல்லாம் எடுத்துரைப்பது ஒன்றை மட்டும் தான். முயற்சி, விடாமுயற்சி இவற்றிற்குள்ள வேறுபாடு நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.
முயற்சி இல்லையேல் வெற்றி இல்லை. எந்தவொரு காரியமானாலும் கடினமோ, எளிதோ அந்த காரியத்தை முயற்சி செய்து பார்க்கும் போது ஏதாகிலும் ஒரு வழி நிச்சயம் பிறக்கும்.
எப்படியெனில் எளிதான காரியத்திற்கு முயற்சியும், கடினமான காரியங்களுக்கு விடாமுயற்சியும் இருக்குமாயின் சாதித்து விடலாம்.
வேதாகமத்தில் இஸ்ரவேலரின் முதலாம் ராஜாவாகிய சவுல் தன் தகப்பன் கழுதைகள் தொலைந்துபோன செய்தியை கேள்விப்பட்டதும் அவன் தரித்திராமல் கழுதைகளை தேட முயற்சி செய்து புறப்பட்டான்.
எனவே தேவன் அவனுக்கு உதவி செய்து அந்த திசையில் சென்றால் தொலைந்த கழுதைகள் கிடைக்கும் என்று கூறினார். எளிதில் தன் தகப்பன் கழுதைகளை கூட்டிக் கொண்டு தன் வீட்டை அடைந்தான்.
அதே போலவே யாக்கோபு ஒரு இரவு முழுவதும் விடாமுயற்சியுடன் தேவனை விடாமல் பற்றிக் கொண்டு இஸ்ரவேல் என்கிற ஆசீர்வாதத்தை சுதந்தரித்தான்.
வெறுமனே இருந்து கொண்டு தேவன் எனக்கு எல்லாம் தருவார் நான் எல்லா ஆசீர்வாதத்தையும் சுதந்தரிப்பேன் என்று வீம்பு பேசுவதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை.
தேவன் உதவுவது யாருக்கென்றால் தனக்கென்றோ, தன் குடும்பத்திற்கென்றோ பிழைப்பிற்கென்றோ எந்த ரீதியும் இல்லாதவர்களுக்கு தான் தேவன் உதவுவாரே ஒழிய மற்றபடி எல்லா சவுகரியங்களும் இருந்தும் முயற்சி செய்யாமல் இருப்பவர்களுக்கு தேவன் உதவுவது இல்லை.
அது போலவே தான் ஊழியத்திலும், “தேவனே எனக்கு கொள்ளை பொருளாய் ஆத்துமாக்களை தாரும்”என்று பல மணிநேரம் போராடி ஜெபிப்பார்கள். ஜெபித்துவிட்டு அப்படியே விட்டு விடுவார்கள். களத்தில் சென்று சுவிஷேசத்தை அறிவிக்கவோ, தேவனுடைய வார்த்தையை பகிரவோ செய்யாமல் நான் ஜெபித்து விட்டேன் தேவன் பார்த்துக் கொள்வார் என்று முயற்சி செய்யாமல் விட்டு விடுவார்கள்.
அதன் பலன் அவர்கள் பல மணிநேரம் ஜெபித்த ஜெபம் விருதாவாய் மாறிவிடும். நாம் முயற்சி செய்யும் பட்சத்தில் தேவன் நமக்கு அனுகூலமான வழிகளை திறந்து எளிதில் வெற்றியடைய செய்வார்.
வேதம் சொல்கிறது,
சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
1 தீமோ 4:8
எனவே சரீர முயற்சி மாத்திரமல்ல தேவ பக்தியும் அவசியம். தேவ பக்தியோடு சரீர முயற்சி செய்தால் மட்டுமே காரியத்தை ஜெயமாய் மாற்ற முடியும். எனவே நம்மால் இயன்ற மட்டும் தேவ பக்தியோடு சரீர பெலத்தையும் உபயோகிப்போம். ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.
நம் முயற்சிகளை வாய்க்க செய்கிற தேவன் நம்மோடு இருக்கும் போது நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை. அவரே நம் கையின் பிரயாசங்களை வாய்க்க செய்கிற தேவன்.
நாம் செய்கிற எல்லா காரியத்திலும் தேவன் கைகூடி வரச்செய்து நம்மை அவர் வழியில் நடத்தி அவரின் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவாராக.
ஆமென்