You will be measured by the measure by which you measure
எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.
மாற்கு 4 :24.
~~~~~~~~~எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஸ்பெயினின் பார்சிலோனா ( Barcelona ) நகரிலிருந்து, ஜெர்மனின் டுசெல்டார்ப் ( Düsseldorf ) நகருக்கு 150 பயணிகளுடன் சென்ற, ஜெர்மன் விங்ஸ் (A320 German Wings) என்ற விமானம், பிரான்ஸ் நாட்டின் (Digne) மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
ஜெர்மனியின் ஹால்டர்ன் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், 2 ஆசிரியர்களுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஜெர்மனி திரும்பும் போது அனைவரும் விபத்தில் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில் சுற்றுலா சென்ற மாணவி எலெனா பிளெஸ் என்பவர் விமானம் புறப்படுவதற்கு முன் தனது தோழியான பிலிப்பியா- வுக்கு Whatsapp மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘வீட்டிற்கு வருவதை நினைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், தாமதம் இல்லாமல் விரைவில் வீட்டிற்கே சென்று விடுவேன்’ என அனுப்பி இருந்தார். ஆனால், வீடு திரும்பாமலே, அவ்விபத்தில், உலகத்தை விட்டே போய்விட்டார்.
வேதம் சொல்கிறது “நாட்கள் பொல்லாதவைகள் என்று. குறிப்பாக இது காலத்தை மட்டும் பற்றியதல்ல.. இக்காலங்களில் மனிதருக்குள் இருக்கும் கொடிய சிந்தையும் பொல்லாத நாட்கள் தான்.
துணை விமானியின் பொல்லாத தனிமைச் சிந்தையே , அவ்விபத்துக்குக் காரணம் என அறிய நேர்ந்துள்ளது . அது மற்ற 149 பேரின் மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
நமது குணநலன்கள் பிறரை பாதிக்கின்றன. பிறரின் குணங்கள் நம்மைப் பாதிக்கின்றன. இதில் தேவ சித்தம் உணர்ந்த பிள்ளைகள் மட்டுமே தம்மையும், பிறரையும் நற்செயல்களால் காப்பாற்றுகின்றனர்!
வேதத்தில் பார்ப்போம்
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்;
மத்தேயு 7 :2.
நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.
லூக்கா 6 : 38.
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்;
லூக்கா 6:37.
பிரியமானவர்களே,
ஒரு மனிதன் பாவத்திற்கு செல்வதற்கு முதல் காரணமாக அமைவது அவனுடைய உள்ளமும், அதில் தோன்றும் கெட்ட எண்ணங்களும் தான். தீய எண்ணங்களை பற்றி தெளிவுபடுத்தும் ஆண்டவர் அதை விட்டு நாம் விலகிவிடும் படி நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.
பசி, தூக்கம், தாகம், போன்ற உடலியல் சார்ந்த உணர்ச்சிகள் மனிதனுக்குள் இருப்பதைப் போல் கோபம், புன்னகை, சந்தோஷம், அமைதி, அழுகை, பொறாமை, வெறுப்பு போன்ற உளவியல் சார்ந்த குணங்களும் மனிதனின் பிறவியிலேயே அவனுடன் ஒட்டி இருக்கத் தான் செய்கிறது.
மனித வாழ்க்கையில் பலவிதமான இன்னல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் காரணம் மனிதனின் தீய குணங்களே.
பல விதமான பிரச்சனைகளுக்கு மூலக் காரணமாக இருப்பது அவனுடைய உளவியல் தொடர்பான தீய குணங்களே
அடுத்தவர்கள் மேல் கோபம், பொறாமை, சந்தேகம் என்று அனைத்தும் சேர்ந்து பலவிதமான சிக்கல்களையும் வாழ்வில் ஏற்படுத்துவதை நாம் உணர முடிகிறது.
மனிதனின் தீய குணங்களை நாம் பட்டியல் போட்டுப் பார்த்தால் அல்லது அந்த தீய குணங்களில் மிகவும் பெரிய தாக்கங்களை உண்டு பண்ணக் கூடிய பிரச்சினை எது என்பதை நாம் தேடிப் பார்த்தால்
அது ஒருவர் மற்றொரு மனிதன் மீது கொள்ளும் குரோதமாகத் தான் இருக்க முடியும்.
இந்தக் குரோத மனப்பான்மையின் காரணமாக தனது நிம்மதியையும் கெடுத்து கொள்ளுகிறார்கள் . அதனுடன் மற்றவர்களின் நிம்மதியையும் பாழாக்கி விடுகிறார்கள்.
அடுத்தவர்கள் நன்றாக வாழக் கூடாது. தன்னை விட உயர்ந்த இடத்தில் யாரும் இருக்கக் கூடாது. தான் மாத்திரம் தான் எப்போதும் வசதி வாய்ப்புகள் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அடுத்தவர்களிடத்தில் இருக்கும் அனைத்தும் தனக்கு சொந்தமானதாக மாற வேண்டும் போன்ற கெட்ட குணங்களை இந்த குரோத மனம்பான்மை தான் தோற்றுவிக்கிறது.
இவைகளை மாற்றுவது மிகவும் கடினம் தான்.ஆனால் நம் தீய குணங்களை மாற்றும் படி கர்த்தரிடம் கேட்கும் போது நம்மிடம் உள்ள தீய குணங்களை மாற்றி கர்த்தருடைய சந்தோஷமும் சமாதானமும் நிறைவாக நம்மிடம் கிடைக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
நாம் நம்மிடம் உள்ள தீய குணங்களை மாற்றி புது வாழ்வு பெற்று பரிசுத்தமாய் வாழ கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் நமக்கு துணை புரிவாராக.
ஆமென்