நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். யோவான்:10:11
எனக்கு அன்பானவர்களே!
தமது இரத்தத்தால் நம்மை மீட்டெடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஏதென்ஸ் நாட்டு மக்கள் தங்கள் மன்னரை உயிருக்குயிராக அன்பு செய்தனர்.
ஒருநாள் டோரியர் படையெடுத்து வந்து ஏதென்ஸைச் சுற்றி வளைத்தனர். ஒன்று ஏதென்ஸ் நாட்டைக் கைப்பற்ற வேண்டும் அல்லது அந்நாட்டு மன்னரை கொன்று விட வேண்டும் என்பது தான் டோரியப் படை வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை.
தங்கள் மன்னர் கொல்லப்படுவதை ஏதென்ஸ் நாட்டு மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? ஒரு நாள் இரவு ஏதென்ஸ் நாட்டுப் பாமரன் ஒருவன் வேண்டுமென்றே டோரியர் படைக்குள் சென்று சண்டையிடத் தொடங்கினான்.
சண்டை வலுத்தது .அந்த ஏழை விவசாயியை டோரியர் படை வீரர்கள் கொல்வதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. இச்செய்தி காட்டு தீ போல் பரவியது .
நடந்ததை அறிய ஏதென்ஸ் மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் டோரியப் படை ஏதென்ஸை விட்டு ஓடிவிட்டது . காரணம் என்ன? ஏழை பாமரன் போல் வந்து தன்னந்தனியாய் சண்டையிட்டுத் தன்னையே அழித்துக் கொண்டவன் வேறு யாருமில்லை ,
ஏதென்ஸ் மக்கள் உயிருக்குயிராய் அன்பு செய்த மன்னர் தான் மாறுவேடத்தில் வந்து மக்களை காப்பாற்றினார்.
தன் நாட்டு மக்களுக்காகத் தன்னையே அழிக்கத் துணிந்த அந்த மாமன்னரின் அன்புதான் என்னவென்று சொல்வது!
வேதத்தில் பார்ப்போம்,
நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
யோவான்:10:11
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
யோவான்:10:27
நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன், அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை.
யோவான்:10:28
பிரியமானவர்களே,
நம், அன்பு இரட்சகர் இயேசுவும் நமக்காக தன் ஜீவனையேத் தந்தார். “நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறார்” என்று இயேசு சொன்னார்.
ஒரு நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளை மிகவும் நேசிக்கிறான். ஒவ்வொரு ஆடுகளையும் அறிந்து வைத்திருக்கிறான்.
ஒரு ஆடு வழிதவறும் போது, தொலைந்த அந்த ஆட்டை தேடி கண்டுபிடித்து தன் மார்போடு அணைத்து எடுத்துச் செல்கிறான்.
ஆண்டவரும் நம்மை ஆடுகளோடு ஒப்பிடுகிறார். வேட்டையாடுகிற பொல்லாத மிருகங்களால் வரும் ஆபத்தை அறியாதிருக்கிறோம்.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியாது.
தனது மந்தையை பாதுகாத்து பராமரிப்பது மேய்ப்பனின் திறமையில் தான் உள்ளது.
நம் அருமை இரட்சகர் இயேசு தன் உயிரை கொடுத்து நம்மை பாதுக்காத்தார்.
இவ்வளவாய் நம்மில் அன்புகூர்ந்த ஆண்டரை நாமும் இன்னும் அதிகமாய் நேசிக்க வேண்டியது எவ்வளவு அவசியமாயிருக்கிறது.
இன்று அவருடைய குரலை நீங்கள் கேட்கிறீர்களா? அந்த சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறீர்களா?
ஏதென்ஸ் நாட்டு மன்னன் தன் நாட்டு மக்களை காப்பதற்காக தன் உயிரையே கொடுத்தார்.
ஆனால் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ உலகில் உள்ள அனைத்து மக்களையும் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க தன்னையே ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்தார்.
எந்த ஒரு நிபந்தனையுமில்லாமல் அவர் நம்மை நேசிக்கிறார்.
உங்களுடைய அன்பை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள்?.
நாம்
பாவத்துக்கு விலகி பரிசுத்த வாழ்க்கை வாழ்வதே, நம் அன்பின் இயேசு கிறிஸ்துவுக்கு நாம் செலுத்தும் அன்புக்கு அடையாளம் ஆகும்.
நம்மை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வருகிற கர்த்தருக்கு நம்முடைய நன்றிபலிகளை செலுத்தி அவருக்கு பிரியமுள்ள வாழ்க்கை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.