Daily Manna 16

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். லூக்கா:10 :41

எனக்கு அன்பானவர்களே!

சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தையும், துயரத்துக்கு பதிலாக ஆறுதலையும் தருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

சில வீடுகளுக்கு முன் செடிகளை அழகாக வெட்டி, மலர்கள் பூத்து குலுங்குவதை பார்க்கும் போது, வியக்கும் வண்ணம் அருமையாக வளர்த்திருப்பார்கள்.

மத்திய கிழக்கு நாடுகள் வனாந்தரமாக இருப்பதால், செடிகள் அந்த மண்ணில் வளருவது கடினம். Conocarpus என்னும் ஒரு வகை செடி, அதற்கு தண்ணீரோ, குளிர்ந்த இடமோ தேவையில்லை.

அந்த செடி இந்த வனாந்திரமான இடங்களில் கடுமையான வெட்பத்திலும் செழிப்பாக வளருகிற படியால், எல்லா இடங்களிலும் அவற்றை நட்டு வைத்து, வளர்த்து, ஒவ்வொரு விதமான மிருகங்கள் போல, பறவைகள் போல வெட்டி, அழகுபடுத்தி, சாலைகளின் ஓரங்களில் வரிசையாக வைத்திருக்கிறார்கள்.

யாராவது இந்த நாடுகளுக்கு வருபவர்கள், இது வனாந்தரமா என்று நினைக்குமளவு இந்த மரங்களை அத்தனை பசுமையாக காட்சி தருமளவு அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுத்து தங்கள் நாடுகளை அழகு படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் சில இடங்களில் இவைகள் வெட்டப்படாமல், ஒரு வடிவம் இல்லாமல் வளர்ந்து, முள் புதரை போல காட்சியளிக்கும். வனாந்தர இடமாக இருப்பதால் வனாந்தரத்தில் காணப்படுகிற தேள்கள், மற்ற விஷ பூச்சிகள் இதற்குள் ஓடி ஒளிய வாய்ப்புண்டு.

அந்த செடிகளை ஒழுங்காக கத்திரித்து விடாதபடியால், கன்னாபின்னாவென்று வளர்ந்து பார்க்கவே அலங்கோலமாய் காணப்படுகிறது. மாத்திரமல்ல அந்த
செடிகளோடு கூட களைகளும் வளர்ந்து, செடிகளுடைய ஆகாரத்தை உண்டு, செடிகள் சரியாக வளராதபடி இவை வேகமாய் வளர்ந்து, செடியை மூடிக் கொள்கின்றன.

கவலையும் அதைப் போலத் தான், அந்த களைகளைப் போல, அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், அது வேர் படர்ந்து, பெரிய கிளையாகி, ஆளையே விழுங்கி விடக்கூடியதாக உள்ளது.

கவலைப்படுகிறவர்களின் உடலில் சாப்பிடுவது கூட ஒட்டாது. அதனால் தான் இயேசுகிறிஸ்து கூறினார், கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
மத்தேயு 6:27என்று.

சிலருக்கு கவலைப்படாவிட்டால், அவர்களுக்கு தூக்கம் வராது. இது நடந்து விடுமோ, அது நடந்து விடுமோ என்று தேவையில்லாத கவலைகளோடு எப்போதும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

வேதத்தில் பார்ப்போம்,

ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
மத்தேயு: 6:34

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பிலிப்பியர்:4 :6

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்.
1 பேதுரு:5 :7

பிரியமானவர்களே,

உங்கள் மனதை பிரச்சினைகள் மீது வைக்காமல், ஆண்டவர் மீது வைத்து விடுங்கள். அவர் உங்களுக்கு விடுதலை அளிக்க காத்திருக்கிறார்.

தங்கள் உணவுக்காக தேவனையே நோக்கி பார்த்திருக்கும் பறவைகளைப் போல வாழக் கற்றுக் கொள்ளுங்கள். சிறிய அடைக்கலான் குருவிகளையும் நினைவில் வைத்திருக்கிற தேவன் உங்களை எப்படி மறப்பார்?

வேதவசனங்களின்படி, நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவர்மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென்பதே அன்பின் ஆண்டவருடைய விருப்பம்.

தாவரங்களும், விலங்கினங்களும் தங்களுடைய உணவு மற்றும் உடையைப் பற்றி கவலைப்படாதது போல, நீங்களும் கவலையின்றி வாழுங்கள்.

நீங்கள் தேவசாயலில் உருவாக்கப்பட்டுள்ளீர்கள் ஆதியாகமம் 1:27 உங்கள் கவலைகளை அவர்மீது வைத்து விடுங்கள்
1 பேதுரு 5:7.
உங்கள் எதிர்காலம், கல்வி மற்றும் குடும்பத்தை குறித்த சுமைகளை அவர்மீது வைத்துவிடுங்கள்.

அவர் உங்கள் விண்ணப்பத்திற்கு செவிகொடுக்கிறவர் சங்கீதம் 65:2.
நீங்கள் அவரை நோக்கி கூப்பிடும்போது, அவர் தமது முகத்தை உங்களுக்கு ஒருபோதும் மறைக்க மாட்டார்.
சங்கீதம் 22:24.
அவர் உங்கள் ஜெபத்தை கேட்டு உங்களுக்கு செவிகொடுப்பார்.

ஆம், அந்த நல்ல கர்த்தர் தாமே நம்முடைய கவலைகளை மாற்றி இவ்வுலகில் நாம் மனமகிழ்ச்சியாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு உதவி செய்வாராக .
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *