A gentle tongue is a tree of life
செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு?
யோபு 6 :25.
=========================எனக்கு அன்பானவர்களே!
இரட்சகரும், மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
தன்னுடைய சரீரத்தில் பலவிதமான குறைபாடுகளுடன் பிறந்தவள் மேரி. அவள் மூக்கு மற்றும் உதடுகளில் பல குறைபாடுகள் இருந்தன.
அவள் பெற்றோர் அவளை மிகவும் நேசித்து படிக்க வைத்தனர். ஆனால் மேரியுடன் படிக்கும் சக மாணவிகள் அவள் தோற்றத்தைப் பார்த்து, கிண்டல் செய்வது வழக்கமாக இருந்தது.
இதனால் மேரி வகுப்பறையில் மிகவும் சோகத்துடன் காணப்பட்டாள். அந்த வகுப்பறையில் அவளுடன் நட்புக் கொள்ள யாருமில்லை. அவளை நேசிக்கவும் யாரும் இல்லை.
இந்த நிலையில் திருமதி லியோனால் என்பவர் அவளின் வகுப்பு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இயேசு கிறிஸ்துவை அறிந்திருந்த இந்த ஆசிரியை, சில நாட்களிலேயே மேரியின் பிரச்சனையை உணர்ந்துக் கொண்டார்.
மேரிக்கு வேறு யாரும் அறியாத, மற்றொரு பிரச்சனையும் இருந்தது. அதாவது, மேரிக்கு ஒரு காது மட்டுமே கேட்கக் கூடியதாக இருந்தது. இந்த ஆசிரியை அதையும் புரிந்து கொண்டார்.
மாணவர்களிடம் கேள்வி கேட்கும் வேளையில், மேரியை வெட்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த அன்பான ஆசிரியை, மிகவும் பரிவாய் நடந்து கொண்டார்.
ஒருநாள் மேரியை உற்சாகப்படுத்தும் விதமாய், மாணவர்களிடம் நீங்கள் ஒவ்வொருவராக வந்து, உங்கள் கையால் ஒரு காதை மூடிக் கொள்ளுங்கள். நான் மறு காதில் ஒரு இரகசியம் சொல்லுவேன், நீங்கள் திரும்ப அதை என்னிடம் கூற வேண்டும் என்று கூறினார்.
ஒவ்வொரு மாணவிகளாக வரும்போது மேரியும் வந்தாள். மேரியின் கேட்காத காதை மூட சொன்ன ஆசிரியை மற்றொரு காதில், “மேரி நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீ என் மகளாக பிறந்து இருக்கக் கூடாதா?” என்றார்.
இதைக் கேட்ட மேரிக்கு அளவில்லாத மகிழ்ச்சி! தேவனுடைய அன்பை ஆசிரியை மூலம் உணர்ந்தாள். புன்னகை முகத்துடன் போய் தன் இருக்கையில் அமர்ந்தாள்.
ஆசிரியையின் அன்பான வார்த்தையால் நாளடைவில் அவளுடைய வாழ்க்கை மிகவும் மாறிற்று. அந்த வகுப்பறையிலேயே மிகச் சிறந்த மாணவியாக அவள் மாறினாள்.
எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே,
நாம் வாழும் பகுதிகளில், தன் வாழ்க்கையில் பல தோல்வியுற்று, மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு, அன்புக்காக ஏங்கும் மக்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள்.
யாராவது என்னிடம் பரிவாக பேச மாட்டார்களா? எனக்கு உதவி செய்ய மாட்டார்களா என்ற ஏக்கத்துடன், தாழ்வு மனப்பான்மையோடு அநேக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நம் அன்பான ஒரு வார்த்தை, நம் பரிவான ஒரு நற்செயல் அவர்களின் வாழ்க்கையையே மாற்றி விடும்!
வேதத்தில் பார்ப்போம்,
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக் கொள்ளுகிறவர்களைப் போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார்.
ஏசாயா 50:4.
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; .
நீதி 15:4
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
நீதி 25:11.
பிரியமானவர்களே,
ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு ஏறத்தாழ 45 சென்டிமீட்டர் நீளமுடையது. மரத்தின் கொப்புகளிலிருந்து இலைகளை லாவகமாக பறிப்பதற்கு ஏற்றதாயும் வலிமையுள்ளதாயும் இருக்கிறது. நீலத் திமிங்கலத்தின் நாக்கு ஒரு யானையின் எடைக்குச் சமம். நாக்கை அசைக்கவே அதற்கு எவ்வளவு பலம் தேவைப்படும்!
இதுபோன்ற விலங்குகளின் நாக்கோடு ஒப்பிடும்போது மனிதனுடைய நாவு அளவிலும் சரி, எடையிலும் சரி, பலத்திலும் சரி ஒன்றுமே இல்லை. ஆனாலும், அந்த விலங்குகளின் நாக்கைவிட மனிதனுடைய நாவு அதிக வலிமை வாய்ந்தது என வேதம் கூறுகிறது.
மனிதனின் உடலில் இருக்கும் இந்தச் சிறிய உறுப்பைப் பற்றி வேதம் இவ்வாறு சொல்கிறது
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;
நீதி 10:11 நீதிமானுடைய நாவின் பலன் ‘ஜீவவிருட்சம் என்று கூறுகின்றது
அதைப் போல் “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற் பழங்களுக்குச் சமானம்.”
—நீதிமொழி: 25:11. என்றும் வாசிக்கிறோம்.
நாவின் வலிமையால் உயிரை காக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். கனிவான, ஆறுதலான வார்த்தைகள் மனச்சோர்விலுள்ள மக்களை விடுவிக்கும்,
சிலரை தற்கொலை செய்வதிலிருந்து தடுத்திருக்கின்றன. நம்பகமான அறிவுரைகள், போதைப்பொருட்கள் பொருட்களுக்கு அடிமையாய் இருந்தவர்களையும் பயங்கர குற்றவாளிகளையும் மரணத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்திருக்கின்றன
தேவனை மகிமைப்படுத்தும் போதும், தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் போதும், வேதத்திலுள்ள அருமையான சத்தியங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கும் போதும் அன்பான, பணிவான, விசுவாச வார்த்தைகளை பேசி அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
அந்த ஆசிரியை மாணவியை உற்சாகப்படுத்தியது போன்று நாமும் பிறருக்கு அன்பான, விசுவாச வார்த்தைகளை பேசி விசுவாசத்திலும், அன்பிலும் பிறரை பலப்படுத்துவோம்.
சமயத்திற்கேற்ற வார்த்தையை கூறுவதே கல்விமானின் நாவு என்று வேதம் கூறுகிறது.
இத்தகைய கல்விமானின் நாவு போன்று நாமும் பிறருக்கு சமத்திற்கேற்ற நல்வார்த்தைகள் மூலமாய் பிறரை மகிழ்விக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்