உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.
சங்கீதம் 119 :92.
எனக்கு அன்பானவர்களே!
ஜீவனுள்ள வேத வசனத்தின் மூலமாக நம்மை போதித்து வழிநடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
1947 ஆம் வருடம் அர்ஜைண்டினா நாட்டில் பால்டாடோனா என்ற ஒரு மனிதரை தேவனுடைய வார்த்தை தன்னை எப்படி மாற்றியது என்பதைக் குறித்து தான் பழகியவரிடம் கூறுகிறார்.
நான் இளைஞனாக இருந்தபோது அவருடைய பொலிவியன் கிராமத்துக்கு 1905 ஆம் ஆண்டு வேதாகமங்களையும், புதிய ஏற்பாடுகளையும் ஒரு மனிதர் விற்பனை செய்யக் கொண்டு வந்திருக்கின்றார்.
அதில் புதிய ஏற்பாட்டுடன் சங்கீதங்களும் சேர்ந்த ஒரு கையடக்கமான பாக்கெட் அளவு புதிய ஏற்பாட்டை பால்டாடோனா விலை கொடுத்து வாங்கினார். அதை அவர் வாசிக்காதபடி ஒரு உயரமான துணிமணிகளை வைக்கும் மர அலமாரியில் வைத்து விட்டார்.
சில ஆண்டுகளாக அது அங்கேயே இருந்தது. இதற்கிடையில் பால்டாடோனா புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார்.
ஒரு நாள் அவர் வீட்டிற்கு வந்த போது சிகரெட் பேப்பர் அவர் வசம் இல்லாது போயிற்று. என்ன செய்வதென்றே அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. எப்படியும் சிகரெட் பிடித்தாக வேண்டுமென்ற வெறி அவருக்கு தலைக்கு மேல் ஏறி நின்றது.
திடீரென சில ஆண்டுகளுக்கு முன்பாக அலமாரியில் வைத்த சிறிய புதிய ஏற்பாட்டின் ஞாபகம் அவருக்கு வந்தது. உடனே அவர் அதை எடுத்து தூசி தட்டி அதின் ஒரு பேப்பரைக் கிழித்து அதற்குள் புகையிலையை வைத்து சுருட்டி ஒரு சிகரெட்டை உருவாக்கி விட்டார்.
அந்தத் தாளானது சிகரெட் சுற்ற மிகவும் பொருத்தமாக இருந்தது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. பின்வந்த நாட்களில் அந்த புதிய ஏற்பாட்டின் தாட்களே அவருக்கு சிகரெட் சுற்ற பயன்பட்டு வந்தது. ஒவ்வொரு நாளும் அதைக் கிழித்துப் பயன்படுத்தி வந்தார்.
ஒரு நாள் வழக்கம் போல சிகரெட் சுற்ற ஒரு தாளை அவர் கிழித்தார். கிழித்த தாளை தனக்கு முன்பாக வைத்திருந்த போது அந்த தாளில் எழுதப்பட்டிருந்த “மனுஷ குமாரன் இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே வந்தார்” என்ற வார்த்தை அவருடைய கண்களில் பட்டது.
பால்டாடோனா தனது கரத்திலிருந்த புகையிலையை ஒரு பக்கம் வைத்துவிட்டு அந்த தாள் முழுவதையும் வாசிக்க ஆரம்பித்தார். அதை வாசித்து முடித்தவுடன் அலமாரியிலிருந்து கிழிக்கப்பட்ட புதிய ஏற்பாட்டை எடுத்து மீதமுள்ள தாட்களை எல்லாம் வாசிக்கத் தொடங்கினார்.
மாலைப் பொழுதாகி இரவு வந்துவிட்டதால் 2 மெழுகுவர்த்திகளைக் கொழுத்தி தனது வாசிப்பைத் தொடர்ந்தார். அந்த மெழுகுவர்த்திகள் எரிந்து முடிந்து வேறு மெழுகுவர்த்திகள் மாற்றப்பட வேண்டியதானது.
இரவு முழுவதும் அவர் அந்தப் புதிய ஏற்பாட்டை வாசித்துக் கொண்டே இருந்தார். கடைசியாக கீழ்த்திசையில் காலைச் சூரியன் தனது பொற் கிரணங்களை மேகக் கூட்டங்களின் ஊடாக வீசி வெளி வரும் காலையில் தனது நாற்காலியிலிருந்து பால்டாடோனா எழும்பி தனது முழங்கால்களில் வீழ்ந்து தனது இரு கரங்களுக்குள்ளும் தனது முகத்தைப் புதைத்து அன்பின் ஆண்டவர் இயேசுவை தனது இருதயத்துக்குள்ளாக வரும் படியாகவும், தனது பாவங்களை எல்லாம் மன்னிக்கும்படியாகவும் கெஞ்சிக் கதறி அழுதார்.
கர்த்தர் அவருடைய பாவங்களை மன்னித்து உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் அவருக்குக் கிருபையாக அளித்தார்.
பின்னர் காலையில் தனது கைவசமிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பக்கத்திலுள்ள ஒரு பெரிய கிராமத்திற்கு கால் நடையாக நடந்து சென்று, தான் புகையிலை வைத்துப் புகைத்துத் தள்ளிய புதிய ஏற்பாட்டின் மத்தேயு,மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷத்தில் 18 ஆதிகாரங்களையும் படித்து முடிப்பதற்காக ஒரு புதிய ஏற்பாட்டை விலை கொடுத்து வாங்கி வந்து வாசித்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
சங்கீதம் 37:31.
என் ஜனங்களே எனக்குச் செவி கொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன்.
ஏசாயா 51 :4.
நான் பிழைத்திருக்கும் படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
சங்கீதம் 119 :77.
பிரியமானவர்களே,
தேவனுடைய வேத புத்தகம் மனுஷரின் வாழ்க்கைகளை மாற்றியமைக்கும் அற்புத வல்லமையை எப்படி வர்ணிக்க முடியும்!
அந்த பரலோக வார்த்தைகளின் வல்லமையை என்னவென்று சொல்லுவது? உலகத்திலுள்ள அனைத்துப் புத்தகங்களிலிருந்தும் தேவனுடைய பரிசுத்த வேத புத்தகம் மாத்திரம் ஏன் இத்தனை ஆச்சரிய அற்புத ஜீவனுள்ள மாற்றத்துடன் காணப்படுகின்றது?
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
ரோமர் 10 :11.
தேவனுடைய பரிசுத்த வேதாகமத்துக்கு ஒப்பான ஒரு புத்தகம் இந்த உலகத்தில் எழுதப்படவில்லை.
இயேசு இரட்சகரைப் போல பரலோகக் காரியங்களை அத்தனை அற்புதமாகக் கையாண்டவர் எவருமில்லர். அவருடைய பாவமற்ற பரிபூரண பரிசுத்த வாழ்க்கையைப் போல பிறிதொரு ஜீவிய சரித்திரம் மனுக்குலத்தின் சரித்திரத்திலேயே எழுதப்படவில்லை.
தேவனால் மீட்கப்பட்ட அவருடைய மக்களின் சரித்திரங்களைக் குறித்து எழுதப்படும் புத்தகங்களை இந்த உலகத்தின் எந்த ஒரு புத்தகசாலையும் தங்கள் வசம் கொள்ள இயலாது. ஆம், அவைகள் அத்தனை திரள், திரளானவைகள்
ஆண்டவருடைய ஜீவனுள்ள வார்த்தைகளின் மேல் பால்டாடோனாவுக்கு கட்டுக்கடங்கா ஆவல் ஏற்பட்டது. பின்னர் அவர் முழு வேதாகமத்தையும் வாங்கி வாசித்தார்.
அதற்கு பின் அவர் மக்களுக்குத் தனது அனுபவ சாட்சியைக் கூறி தேவனுடைய வார்த்தைகளை அவர்களுக்கு உபதேசித்தார். பால்டாடோனாவின் சாட்சி ஒரு ஆச்சரியமான ஜீவனுள்ள சாட்சியாகும்.
தேவனுடைய வார்த்தைகளை நேசித்து வாசிப்பதற்கு நீ எப்பொழுதாவது தீர்மானம் எடுத்திருக்கின்றாயா? தேவனுடைய வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் பேராவலுடன் வாசிப்பதற்கு இப்பொழுதே தீர்மானம் எடுப்போம். அது உன்னோடு பேசும், உன் வியாதிகளை குணமாக்கும். உன்னை புதிய வாழ்வுக்கு நேராக அழைத்துச் செல்லும்.
காலங்கள் விரைந்து ஓடிக் கொண்டிருக்கின்றது. உனது சரீரத்தைப் போஷிக்க நீ எத்தனை அக்கறையும், கவலையும் எடுக்கின்றாயோ அதைப் போல உனது ஆத்துமாவை தேவனுடைய வார்த்தைகளால் போஷிக்கக் கருத்தாயிரு.
தேவன் உன்னை மறுரூபமாக்குவார்.நீ பாக்கியவானாயிருப்பாய்.
இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்