உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு அடிக்கடி அவன் வீட்டில் கால் வைக்காதே. நீதிமொழி: 25:17
எனக்கு அன்பானவர்களே!
நல்ல நண்பராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்
ஒரு வயதானவர் தனிமையாக வாழ்ந்து கொண்டு வந்தார். அவரின் அன்பான உறவினர் ஒருவர் தன் இல்லத்துக்கு வரும்படி அன்பாய் அழைத்தார்.
அப்பொழுது அவர் தன்னை விட வயது முதிர்ந்த ஒருவரிடம் ஆலோசனை கேட்டார் .. , ஐயா நான் என் நெருங்கிய உறவினரின் வீட்டு விருந்துக்குச் செல்கிறேன். எத்தனை நாட்கள் தங்கி நான் வரவேண்டும் என்று கேட்டான்.
அதற்கு பெரியவர் புன்னகையோடு உனக்கு அளிக்கப்படும் சாப்பாட்டில் எப்போது உன் முகம் தெரிகிறதோ, அப்போது அங்கிருந்து வந்து விடு, இல்லை என்றால், உன் கண்ணுக்கும், உன் நெஞ்சுக்கும் அனேக நாட்கள் வேதனைகளை கொடுப்பாய் என்றார்.
இவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஐயா! உணவில் எப்படி முகம் தெரியும். என்று தயங்கினார்.” நீ போ உனக்கே தெரியும்” என்றார் அவர். தன்னால் இயன்றதை எல்லாம் வாங்கிக் கொண்டு குழப்பமுடன் விருந்துக்குச் சென்றார் இவர்.
முதல் நாள் விருந்து தடபுடலாக நடந்தது. இரண்டாம் நாள் வேகம் குறைந்திருந்தது.
மூன்றாம் நாள் காலையில் சாப்பிட அமர்ந்ததும், தண்ணீர் ஊற்றின பழைய சோறு வைக்கப்பட்டிருந்தது. குனிந்து பார்த்த போது, தண்ணீரில் முகம் தெரிந்தது. இப்போது தான் பெரியவர் சொன்னது நினைவிற்கு வந்தது.
இதை உணர்ந்தவர், உண்மை தான் என்ற படியே உடனே வீடு திரும்பினார்!
நட்புறவு பெலப்படுவதற்கு உங்கள் நண்பர்கள், உறவுகள், உங்களை சலித்து வெறுத்து தள்ளாதபடிக்கு அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி நீங்கள் செல்லக் கூடாது.
உங்கள் நண்பர் உங்கள் ஐக்கியத்தை விரும்பி அவர்களே உங்களை கூப்பிடத்தக்கதாக நீங்கள் இருக்க வேண்டுமே தவிர எப்பொழுதுமே அவரை காண சென்று கொண்டிருப்பீர்களானால் உங்களுடைய உறவு சலித்து விடும்.
எப்போதுமே உறவையும்,
உப்பையும் அளவாய் பயன்படுத்தினால், எப்பொழுதும் ருசியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இதைப் புரிந்து கொள்ளாத சிலர். தானும் கஷ்டப்பட்டு, மற்றவர்களையும் கஷ்டப்படுத்துவார்கள்.
தேவன் நமக்கு கொடுத்த நேரத்துக்கும், பணத்துக்கும் நாம் ஆண்டவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இதை புரிந்து கொண்டு வாழ்ந்தால் சிறப்பு.
வேதத்தில் பார்ப்போம்,
தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தை விட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.
நீதிமொழி: 27 :8.
உன் ஆபத்துக் காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி.
நீதிமொழி:27 :10.
என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்பு கூரக்கடவோம்.
1 யோவான் 3 :18.
பிரியமானவர்களே,
நம் முன்னோர்கள் இப்படி சொல்வார்கள்.
“விருந்தும் மருந்தும் மூன்று நாட்களே” எனக் கூறுவது உண்டு.
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியானது விருந்தினரை மட்டும் குறிப்பது அல்ல.. எல்லாவித விஷயத்திலும் நமக்கென ஒரு எல்லை வேண்டும் எனக் குறிப்பிடவே.. விருந்தை மட்டுமா மருந்தையும் தானே கூறியுள்ளனர்.
அவசியம் இல்லாமல் நண்பர்களை சந்தித்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் நட்பையும் இழக்காதீர்கள்.
அன்பானவர்களே,
உண்மையுள்ள சிநேகித உறவு எக்காலத்திலும், எல்லா நிலைபரத்திலும் ஒருவனைத் தாங்குமேயன்றி, தாக்க மாட்டாது;
ஒருவரையொருவர் புரிந்துணர செய்யுமேயன்றி புறங்கூறித் திரியாது; ஒருவரையொருவர் அணைக்கச் செய்யுமேயன்றி, அடிக்காது.
உண்மையான சிநேகித உறவு ஒருவரையொருவர் எல்லாக் காலங்களிலும் தாங்குவதுபோல, தவறுகள் விடும்போது ஒருவரையொருவர் நல் வழிப்படுத்துவதாகவும் அமைய வேண்டும்.
இப்படியான சிநேகித உறவையே இயேசுகிறிஸ்து தமது சீஷர்களோடு வைத்திருந்தார்
யோவான் 15:15.
“மறைவான சிநேகிதத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்து கொள்ளுதல் நல்லது. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள். சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்”
நீதி. 27:5-6. என்று பார்க்கிறோம்.
யாராக இருந்தாலும் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வது கடைசியில் பிரச்சனைகளையே ஏற்படுத்தும். கடைசி காலங்களில் மனிதருக்கு சுபாவ அன்பில்லாமற் போகும் என்று வேதத்தில் பார்க்கிறோம்.
அங்கே விருந்தோம்பலை எதிர்பார்ப்பது சரியாகவும் இராது! அயலான் சலித்து வெறுப்பது இன்று சகஜமே! ஆண்டவர் மட்டுமே நம்மை என்றும் நேசிப்பவர்!
அவரது வீடாகிய பிரசன்னத்துக்கு அடிக்கடி அல்ல எப்போதும் செல்லலாம். நம்மை வரவேற்கவும், வார்த்தையாகிய ஜீவபோஜனம் அருளவும்,
நமக்காக காத்திருக்கிறார்.
நமக்கு ஜீவத் தண்ணீரைக் கொடுத்து நம்மை திருப்தியாகவும் ,
நல்ல வழியில் நடத்தவும், நம் தேவன் தம்முடைய தூதர்களோடு நமக்காக காத்திருக்கிறார்.
ஆகவே நாம் உலக அன்பிற்காக அல்ல. தேவ அன்பிற்காக காத்திருப்போம். அவரே நமக்கு உற்ற துணையும், ஏற்ற நண்பருமாய் நம்மோடு பேச, பழக, உறவாட, உதவி செய்ய நமக்காக ஆவலோடு காத்திருக்கிறார்.
அவருடைய அளவில்லாத பூரண அன்பில் திளைத்து மகிழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.