பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன். நீதிமொழிகள்: 16:32.
எனக்கு அன்பானவர்களே!
நீடிய சாந்தமுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ரஷ்யாவில் செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் என்றொரு நகரம் இருக்கிறது. அதில் ஐசக் என்ற கம்பீரமான பேராலத்திற்கு முன்னால் நாற்சந்தியில் ஒரு அழகான சிலை ஒன்று இருக்கிறது. அது மகா பீட்டரின் சிலை.
அது தன் வலது கையை கிழக்கு நோக்கி, உயர தூக்கி சுட்டிக் காட்டுகிற வண்ணமாக அந்த சிலையை அமைத்திருந்தார்கள்.
அன்று நவீன ரசியாவை வடிவமைத்தவர் தான் இந்த மகா பீட்டர்.
தேசத்தின் முன்னேற்றத்திற்காக அவர் பல பாடுகளையும் நன்மைகளை செய்திருக்கிறார். அவரை “மகா பீட்டர்” என்று அழைப்பது எல்லா வகையிலும் பொருத்தமானதாக தான் இருந்தது.
ஆனால், அவர் அத்தனை மகிமையை பொருந்தியவராக இருந்த போதிலும், அவரால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று அவரிடம் இருந்த கோபம். அந்தக் கோபத்தால் தன் சொந்த மகனையே கொலை செய்யும் அளவுக்கு அவரிடம் கோபம் குடி கொண்டு இருந்தது.
தன்னுடைய கடைசி காலத்தில் பீட்டர் தன்னுடைய நண்பனிடம் பின்வருமாறு கூறினார்: “நான் ராஜ்யத்தை வென்றேன். ஆனால் என்னை நான் வெல்லவில்லை. குடும்பத்தையும் இழந்து விட்டேன்” என்று.
தன்னை அடக்குதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.தன்னை அடக்காமல் நாம் செய்கிற செயல்களால் வரும் பாதிப்புகள் ஏராளம், ஏராளம். அது நம்மை மட்டுமல்ல ; நம்மை சேர்ந்த பலரையும் அது பாதிக்கிறது என்று கூறினார்.
ஆனால் இன்றைக்கு இந்த சமுதாயத்தில் நீடிய பொறுமை, நீடிய சாந்தமுள்ள மனிதனை ஒரு ஏமாளியாக, பெலனற்றவனாக எண்ணப்படுகிறான், பார்க்கப்படுகிறான்.
சின்ன சின்ன காரியங்களுக்கு எல்லாம் அதிகமாக கோபப்படுகிறவன் பலவீனன் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவனால் அவனுடைய சொந்தத் தன்மையை, மேற்கொள்ள முடியாதவனாக தன்னுடைய கட்டுபாட்டை இழக்கக்கூடியவனாககோபப்படுகிறவன் இருக்கிறான்.
ஆனால் நீடிய சாந்தமுள்ளவனோ தன்னுடைய சுபாவத்தை அடக்கக் கூடியவனாக இருக்கிறான். அதுமட்டுமல்ல, அந்த சூழ்நிலையை தன் கட்டுப்பாட்டிற்குள்ளாக வைத்துக் கொள்ளக் கூடியவனாகவும் இருக்கிறான்.
வேதத்தில் பார்ப்போம்,
உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர்.
ஏசாயா: 26 :3.
பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
நீதிமொழி: 16 :32
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1 தீமோ 6 :6.
பிரியமானவர்களே,
மனதில் ஆசைகள் அதிகமாக அதிகமாக மன அமைதி குறையும்.மனதில் அமைதி அதிகமாக அதிகமாக ஆசைகள் குறையும்.
ஒழுக்கநெறியும் ஜெபமும் தவமும் உடையவர்கள் மன அமைதியுடன் வாழ்கிறார்கள்.
தன்னை சார்ந்தவர்களையும்
சஞ்சலப்படுத்தாமல் பாதுகாப்பார்கள்.
ஒரு முறை பில்லிசண்டே என்னும் ஒரு போதகரிடம் ஒரு பெண்மணி வந்த,”ஐயா
நான் முன்கோபி தான். கோபத்தால் கத்துவேன். ஆனால் நான் எல்லாவற்றையும் பிறகு மறந்து விடுவேன்” என்றாள்.
அப்பொழுது போதகர்,”ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு முறை தான் குண்டை வெளியேற்றும். ஆனால் அந்தக் குண்டு என்னவெல்லாம் சேதத்தை உண்டாக்க முடியும்?” என்று கேட்டார்.
பிரியமானவர்களே,
நினைத்தெல்லாம் நான் பேசுவேன் என்று சொல்லக் கூடாது. நம் வார்த்தைகள் நிச்சயம் மற்றவர்களைப் பாதிக்கத் தான் செய்கின்றன. மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன? அவர்கள் எப்படி பாதிக்கப்பட்டால் என்ன? நான் இப்படித் தான் கோபப்படுவேன் என்று சொல்லுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
உங்களோடு இருப்பவர்கள் உங்களோடு இருப்பதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும்.
கோபப்படுகிறவர்கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டு, வாயைத் திறக்கிறார்கள். தங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறதா? என்பதை கூட பார்ப்பது இல்லை.
வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெருப்பாக வந்து விழுந்து, எதிரே இருக்கிற நபரைக் காயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உயிரோடு எரிக்கும் அக்கினியும் அதுவே.
வேதம் கூறுகிறது.உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
யாக்கோபு 1:26.
நீடிய சாந்தத்தை பலவீனமாக எண்ணாதே. அது ஒரு மனிதனை வல்லமை மிக்கவனாக காட்டும் ஆயுதமாக இருக்கிறது. நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்
நீதிமொழி: 15:18. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை அமர்த்துகிற வல்லமை அதற்கு உண்டு.
வீட்டில் கணவன், மனைவி உறவாக இருக்கலாம் , அல்லது மற்றவர்களோடு உள்ள உறவாக இருக்கலாம். எந்தவிதமான உறவாக இருந்தாலும் நீடிய சாந்தம் என்ற ஆயுதத்தை உபயோகப்படுத்துவதைக் காட்டிலும் இவ்வுலகில் வேறு எதுவும் சூழ்நிலையை அமர்த்த முடியாது.
ஆகவே கர்த்தரின் பிள்ளைகளாகிய நாம் ஆவியின் கனிகளில் ஒன்றாகிய நீடிய சாந்தத்தை தரித்து தேவனுக்கு பிரியமுள்ளவர்களாக வாழ்ந்து அவரின் சித்தத்தை செய்ய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.