Daily Manna 144

உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும் படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். 1 யோவான்: 1 :4

எனக்கு அன்பானவர்களே!

நம் வாழ்வை சந்தோஷத்தால் நிரப்புகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

சந்தோஷம் என்றதும், நம் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை நாம் நினைக்கிறோம். உலகத்தில் சந்தோஷம் தருபவை எத்தனையோ இருக்கின்றன.

பூக்களை பார்க்கும் போது, சிறு குழந்தைகள் நடப்பதை, பேசுவதை பார்க்கும் போது, சூரிய உதயத்தையும், முழு நிலாவையும், பார்க்கும் போது,நம் மனம் பூரிப்படைகிறது.

நம் பிள்ளைகள் நல்ல மார்க் வாங்கி வரும் போது ஒரு சந்தோஷம். நாம் செய்த ஒரு காரியத்தை மற்றவர்கள் பாராட்டும் போது ஒரு சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்… ஆனால் எதுவும் நிரந்தரமானது இல்லை.

இத்தனை சந்தோஷங்கள் இருந்தும் வாழ்க்கை சில வேளைகளில் நமக்கு தருவது, வெறுமையும், விரக்தியும், கவலையும், கண்ணீரும் தான். உலகத்திலேயே எப்போதும் சந்தோஷமாயிருக்கிற மனிதன் இருக்கிறானா? ஒருவரும் இல்லை. ஒரு வேளை மனநிலை சரியில்லாதிருந்தால் அவன் அந்த நிலைமையில் இருக்கக் கூடும்.

வேதத்திலும் நாம் சந்தோஷத்தைக் குறித்து அநேக வார்த்தைகள் இருப்பதைக் காணலாம். மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம், களிகூருதல் என்று நான்கு வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்’ என்று
சங்கீதம் 68:3 கூறுகிறது.

நீதிமான்கள் தான் இந்த நான்கு வகையான சந்தோஷமும் அடைவார்கள் என்று வேதம் கூறுகிறது.

ஆனால் அப்போஸ்தலகிய பவுல் கூறுகிறார்
‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்’ பிலிப்பியர் 4:4 என்று கூறுகிறார்.

அவர் எந்த நிலையிலிருந்து அப்படி கூறுகிறார் என்றால் எல்லாம் நன்றாக, மனரம்மியமாக இருந்தபோதல்ல, சிறையில் இருந்துக் கொண்டு தான் இந்த கடிதத்தை அவர் எழுதினார்.

அவர் சிறையில் இருந்த போதும், அவர் மனம் சோர்ந்து போய் உட்கார்ந்து விடவில்லை, ‘பாருங்கள் நான் கர்த்தருக்காக பாடுகள் பட்டுக் கொண்டிருக்கிறேன். சிறையில் வாடிக் கொண்டிருக்கிறேன்’ என்று முறுமுறுத்துக் கொண்டு கடிதத்தை எழுதவில்லை.

மாறாக வெளியில் இருக்கும் மற்றவர்களுக்கு சிறையில் இருந்துக் கொண்டே
உற்சாகப்படுத்தினார்
கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.

ஆம், ஒரு கிறிஸ்தவன் எல்லா சூழ்நிலைகளிலும் சந்தோஷத்தோடு இருப்பது சாத்தியம் என பவுலினுடைய வார்த்தைகள் நமக்குப் போதிக்கிறது. அது தான் கிறிஸ்துவினுடைய சிந்தை.

வேதத்தில் பார்ப்போம்,

அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங் கூட ஆனந்தக் களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்து வேன்.
எரேமியா: 31 :13.

உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன் பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.
செப்பனியா: 3 :17.

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
ரோமர்:12 :13.

பிரியமானவர்களே,

நாம் எல்லா வித சௌகரியமாய் வாழ்ந்து கொண்டுயிருந்தாலும், சின்ன சின்ன சிரமத்திற்கும் குறை சொல்லும் கிறிஸ்தவர்களுக்கு, பவுல் ஒரு அருமையான மாதிரியாய் இருக்கிறார்.

சிறிய கஷ்டத்தை எதிர்கொள்ளும் போது அல்லது ஒரு சிறிய சோதனையின் வழியே கடந்து செல்லும் போது மற்றவர்களுடைய அனுதாபத்தைப் பெற முயற்சிக்கும் மக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.

ஆனால் பவுல் தன்னுடைய துக்கங்களுக்காக அவர் கண்ணீர் விடவில்லை. யாரிடத்திலும் எந்த ஒரு அனுதாபத்தையும் அவர் விரும்பவில்லை. தன்னுடைய பாடுகளைக் குறித்து ஒரு வார்த்தையும் இங்கே குறிப்பிடவில்லை .

மாறாக, “நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம் பண்ணி, நான் உங்களை நினைக்கிற பொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.( பிலி 1:4, 6) என்று கூறுகின்றார்.

பவுல் இந்தக் கடிதத்தை எழுதிய போது
அப்28:16,30,31 -ல் வெறும் வீட்டுக்காவலில் (house arrest) இருந்தாரோ அல்லது உண்மையான ரோம சிறைச்சாலையில் இருந்தாரோ என்பது நமக்குத் தெரியாது.

அந்த நாட்களில் ரோம சிறைச்சாலைகளானது எலிகளினாலும், கொசுக்களினாலும், ஊரும் பூச்சிகளினாலும் நிறைந்த இருண்ட நிலவறைகளாய் (dark dungeons) இருந்தது. இங்கே கைதிகள் தரையிலே உறங்க வேண்டும்.

அவர்களுக்கு மிகவும் குறைவான உணவே கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு இடங்களில் எந்த இடத்தில் பவுல் இருந்தாலும், சூழ்நிலைகள் மோசமாகத் தான் இருந்திருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் கூட பவுல் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தார்.

தன்னை குளிரிலிருந்து பாதுகாப்பதற்கு அவருக்கு சூடு தருகின்ற ஆடைகளும் இல்லாமல் இருந்திருக்கலாம்.
இந்த நிலையிலும், அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள் என்று வேதம் கூறுகிறது.

அப்படியென்றால் ஆவியானவர் கொடுக்கிற, எந்த சூழ்நிலையிலும் மாறாத சந்தோஷத்தினால் நிறைந்தவர்களாக அவர்கள் உள்ளம் நிறைந்திருந்தபடியால் அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள்.

நம்மைப் போல பாடுகளுள்ள மனிதனாக இருந்த பவுலினால் பயங்கரமான சூழ்நிலையிலும் சந்தோஷமாயிருக்க முடியுமென்றால், அவருக்குள் இருந்த ஆவியானவர் அவரை தேற்றி, திடப்படுத்தி, சந்தோஷத்தினால் நிறைத்திருந்தார்.

நாமும் நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள், போராட்டங்களில் சோர்ந்துப் போகாமல், சந்தோஷமாய் அவற்றை சந்தித்து, கர்த்தருக்குள் களிகூருவோமா! ஆவியின் இரண்டாம் சுளையாகிய சந்தோஷத்தினால் நாம் எப்போதும் நிரம்பியிருப்போமா? ‘நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்’.

நாமும் நமது வாழ்வை பரலோக சந்தோஷத்தினால் நிறைத்து கர்த்தருக்குள்ளாக ஒவ்வொரு நாளும் மனமகிழ்வுடன் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *