உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் யோவான்:16:20
எனக்கு அன்பானவர்களே!
ஆறுதலை தருகிற தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் இருளான சில நேரங்களை நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
அப்படிப்பட்ட நேரங்களில் இரவும், பகலும் கண்ணீர் வடித்து கலங்குகிறீர்களா??
நீங்கள் கர்த்தர் மீது வைத்திருக்கிற உங்கள் நம்பிக்கையை விட்டு விடாதிருங்கள்! கர்த்தர் நம் கண்ணீரை கண்ணோக்கி பார்த்து, நம் பிரச்சினைகள் யாவற்றினின்றும் நம்மை விடுவிப்பார். இனி அழுது கொண்டிருப்பதில்லை. “உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்” யோவான்:16:20.
சர்வ வல்லமையுள்ள தேவன் நீதியுள்ளவர். அவர் அன்பும், மனதுருக்கமும் நிறைந்த தேவன். அவர் நம்மைக் காண்கிறவர். நம்முடைய கண்ணீரையெல்லாம் அவரது துருத்தியில் வைத்திருக்கிறார்.
அதில் ஒரு துளியாகிலும் தரையில் விழுந்து போவதில்லை. “என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?” என்று
சங்கீதம் 56:8 -ல் வேதம் மிகத் தெளிவாய் கூறுகிறது.
ஆகவே, கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் நினைவில் வைத்திருக்கிறபடியால் அவர் நம் பிரச்சினைகள் யாவற்றிலிருந்து நம்மை நிச்சயமாகவே விடுவிப்பார்.
வேதத்தில் பார்ப்போம்,
அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார், கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார், கர்த்தரே இதைச் சொன்னார்.
ஏசாயா 25 :8.
என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர், என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
சங்கீதம் 56: 8.
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்..
ஏசாயா 38 :5
பிரியமானவர்களே,
கர்த்தரிடம் நாம் மன்றாடி வடிக்கும் கண்ணீர் ஒருபோதும் வீண்போகாது. அவர் நம்முடைய கண்ணீரை தம்முடைய கணக்கில் வைத்திருக்கிறார். லாசரு மரித்தபோது, இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அந்த கண்ணீரின் வல்லமை அவனை உயிரோடே எழுப்பியது யோவான்:11:35-36 என்று வாசிக்கிறோம்.
இயேசு அவர்களை மிகவும் நேசித்தார்.
அவர் அந்த குடும்பத்தை நேசித்தபடியால் அவர்களை கண்ணீரிலிருந்து விடுவிக்கும்படியாக அவர்களுக்கு ஒரு அற்புதம் செய்தார்.லாசருவை உயிரோடே எழுப்பினார்.
அதே அன்பின் ஆண்டவர் , இன்றைக்கும் அற்புதங்களை செய்ய வல்லவர்.உங்களது வாழ்விலும் உயிர்த்தெழுந்த தேவனுடைய வல்லமையை நீங்கள் ருசிப்பீர்கள்.ஆகவே, நீங்கள் கவலைக் கொள்ளாதீர்கள்.
அவர் உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
சங்கீதம் 22:24
நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக நீங்கள் சிந்துகிற கண்ணீரை அவர் ஒரு போதும் அலட்சியம் பண்ணுகிற தெய்வமல்ல.மாறாக உங்களுக்காக மனதுருக்கம் கொள்ளுகிற தெய்வம் இயேசு கிறிஸ்து.
அவர் உங்களை விடுவிப்பார்; பாதுகாப்பார். நிச்சயமாகவே உங்கள் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றுவார்.
அந்த பரம தகப்பனாகிய இயேசு கிறிஸ்து நம் வாழ்வின் துன்பங்களை மாற்றி ஆறுதலை அளித்து காத்து வழிநடத்துவாராக.
ஆமென்.