Do Not Be Jealous Of Wicked Men; You Don't Want To Be With Them.
பொல்லாத மனுஷர் மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
நீதிமொழிகள்: 24 :1
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அவரிடம் மற்ற எல்லா கெட்ட குணங்களும் நிறைந்து இருக்கும்.
அது போலவே பொறாமை குணம் உள்ள ஒருவரிடம் மற்ற எல்லா தீய குணங்களும் ஒன்று சேர்ந்து குடி கொண்டிருக்கும்.
பொறாமைப் படுபவர்கள், தாம் பொறாமை கொள்ளும் மனிதர்கள் மீது முதலில் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.
வெறுப்பின் காரணமாக அவர்களின் மீது காரணமின்றி கோபம் கொள்கிறார்கள்.
இன்னும், தாங்கள் பொறாமை கொள்ளும் மனிதர்களைப் பற்றி வதந்தி மற்றும் அவதூறுகளைப் பரப்பி அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கு தம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வர்.
இன்னும் யார் ஒருவர் மீது பொறாமை ஏற்படுகிறதோ அவர் மீதே முழு கவனமும் செலுத்துவர். அது மட்டுமல்ல அவரை குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் உற்று நோக்குவர்.
தங்களுக்கு நல்லது நடந்தால் அடையும் சந்தோஷத்தை விட அவர்களுக்கு துன்பம் நேரும் பொழுது அதிக மகிழ்ச்சி கொள்வர்.
எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணம் நம்மிடம் காணப்படும் என்றால், நாம் ஆண்டரின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவர் அருளைப் பெறுவதிலும் நம்மை நாமே தடுத்துக் கொள்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
வேதத்தில் பார்ப்போம்,
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
கலாத்தியர்: 5:22.
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
யோபு: 5 :2.
வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருக்கக்கடவோம்.
கலாத்தியர்:5 :26.
பிரியமானவர்களே,
மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் அவன் படைக்கப்பட்ட காலத்திருந்த தீய குணங்கள் இன்று வரை மாறாமல் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது .
அதிலேயும் மிகுந்த நாசத்தை விளைவிக்கக் கூடிய ஒரு பண்பு தான் பொறாமை. இது தொன்று தொட்டு நமது முன்னோர்களிடமிருந்து வந்து கொண்டு தான் இருக்கிறது.
இதற்கு மதங்கள், மொழிகள், காலங்கள் வேறுபாடு கிடையாது.
அடுத்தவர் மகிழ்ச்சியாய் வாழ்ந்தால்,
அடுத்தவர் நல்ல உடை உடுத்தினால்,
அடுத்தவர் நல்ல முறையில் தன் குடும்பத்தை நடத்தினால்
அடுத்தவர் கணவர் பொருத்தமாய் இருந்தால்,
அடுத்த வீட்டு பெண் வசதியாய் {சாதுரியமாக}இருந்தைப் பார்த்தால்
பொறாமை தானாய் வந்து விடுகிறது.
காயீன் , தன் சகோதரன் ஆபேலின் மேல் பொறாமை கொண்டதால் கொலை நிகழ்ந்தது. இன்றளவும் காயீன் குணத்தோடு பணத்திற்காக, பதவிக்காக,குடும்ப பெருமைக்காக, பொறாமை கொள்ளும் காயீனின் வாரிசுகள் அமைதியான உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.
பெரும்பாலும் இந்த பொறாமை தனக்கு நிகரான ஒருவர் மீதே எற்படுகிறது. பிச்சைக்காரன் ஒருவன் பில்கேட்ஸைப் பார்த்து, ‘அவ்வளவு செல்வம் நம்மிடம் இல்லையே!’ என்று பொறாமைப்படுவதில்லை.
அதே நேரம், தன்னுடன் ஒரே மரத்தடியில் படுத்து உறங்கும் சக பிச்சைக்காரனுக்கு, தன்னை விட அதிகம் பிச்சை கிடைத்து விட்டால், அவன் மேல் பொறாமை வருகிறது.
பொறாமையின் ஆணி வேர் வெறுப்பு, பிறரை பழிக்கவும், பழிவாங்கவும், அழிக்கவும் உள்ள எண்ணம் பொறாமை குணத்திற்கு உண்டு.
மனிதர்களுக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதம் பொறாமை. அதே ஆயுதம் எங்கு இருக்கிறதோ அங்கு அழிவு நிச்சயம். அங்கு
எந்த நன்மையையும் உணரவும் அனுபவிக்கவும் விடாமலும் தடுத்து விடும்.
பொறாமை கொள்பவன் எத்தகைய உயரத்திலிருந்தாலும், அவனின் தீய குணத்தால், அவன் கீழ் நோக்கி விழுவது நிச்சயம். எனவே பொறாமை என்னும் தீய குணத்தில் இருந்து நம்மைக் நாமே விலக்கி காத்து கொள்ள வேண்டும்.
நமது நல்ல குணங்களால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அருளை நாம் பெற்றுக் கொள்ள ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வோம்.
நம்மிடம் உள்ள தீய குணத்தை மாற்றி, தேவ சாயலாய், பரனோடு நிதம் வாழ்ந்து சுகிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென் .