கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்; மத்தேயு: 33:37.
கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்;
மத்தேயு: 33:37.
***********
எனக்கு அன்பானவர்களே!
பறந்து காக்கும் பட்சிகளை போல நம்மை காத்து வழிநடத்தி வருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
தாய் கோழி ஒன்று தன் குஞ்சுகளோடு, காட்டில் இரை மேய்ந்து கொண்டிருந்தது. திடீரென காட்டுத் தீ நான்கு பக்கமும் பரவியது. தாய் கோழி தீயிலிருந்து தப்ப எவ்வளவோ முயற்சித்தது, முடியவில்லை.
வேறு வழியில்லாமல், தாய் கோழி தன் இரண்டு சிறகுகளையும் உயர்த்தியது, குஞ்சுகள் அதன் செட்டையின் கீழ் அடைக்கலம் புகுந்தது. தாய் கோழி தன் சிறகினுள் குஞ்சுகளை வைத்து அப்படியே அமர்ந்து விட்டது.
சற்று நேரத்தில், தீயானது அப்படியே அந்த தாய் கோழியை எரித்துக் கொன்று போட்டது. திடீரென மழை பெய்யவே, அந்த காட்டு தீ அணைந்து போனது.
மறுநாள் வேடன் ஒருவன் அந்த வழியே வந்தான். கருகிய நிலையில் செத்து போயிருந்த தாய் கோழியை பார்த்தான், தன் கையிலிருந்த குச்சியால் அதைக் குத்தி அப்புறப்படுத்த முயன்ற போது, சிறகினுள் இருந்த குஞ்சுகள் துள்ளிக் குதித்து வெளியே மகிழ்ச்சியாய், வந்தன.
ஆம் பிரியமானவர்களே,
இயேசுவும் அப்படி தான். ஒரு தாய் கோழியைப் போல, நம்மை உயிரோடு பாதுகாக்கும் படி தன் இரண்டு கரத்தையும் ஒரு தாய் பறவையின் சிறகைப் போல உயர்த்தி காண்பித்து, சிலுவையிலே அவர் நமக்காக மரித்தார்.
அவருடைய சிறகின் கீழ் அடைக்கலம் புகுந்த நாமோ இன்றளவும் உயிரோடிருக்கிறோம். எத்தனை விதமான வியாதிகள், பலவிதமான போராட்டங்கள். நெருக்கங்கள், கவலை,கண்ணீர் இவைகள் மத்தியிலும் நாம் இன்று உயிரோடு இருப்பது அவரின் கிருபை மட்டுமே.
வேதத்தில் பார்ப்போம்,
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
சங்கீதம்: 91:4.
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக் கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
சங்கீதம் :57 :1.
தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
சங்கீதம்: 36 :7.
பிரியமானவர்களே,
ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நம் கஷ்ட காலத்திலும், துக்க சமயத்திலும், வியாதியின் மத்தியிலும், கடன் பிரச்சினைகளின் மத்தியிலும், நாம் துவண்டு போன சமயத்திலும், எல்லா சூழ்நிலைகளின் மத்தியிலும் நம் தேவனாகிய கர்த்தர் ஒரு தாய் தேற்றுவது போல நம்மை அரவணைத்து தேற்றுகிறார்.
அன்று மோசே இஸ்ரவேல் ஜனங்களை
ஒரு தாயைப் போல அவர்களை வழிநடத்தினார். அவர்கள் உணவுக்காகவும். அவர்கள் தாகத்தை தீர்ப்பதற்காகவும். எதிரிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் தன்னை வருத்தினார்.
அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்.
யாத்திராகமம் :17:8
அப்போது மோசேயினுடைய கைகள் உயர்த்தப்பட்ட போது ஜெயம் கிடைத்தது. ஆனால் நேரம் செல்ல, செல்ல அவனுடைய கைகள் தளர்ந்து போனது, அப்பொழுது அவனுடைய கைகள் கீழே இறங்கியது, தோல்வி ஏற்பட்டது, ஆகவே அவனுடைய கைகளை ஆரோனும், ஊரும் தாங்கி பிடித்தனர்.
மோசே தன் கைகளை உயர்த்திய போது அன்று ஒருநாள் மட்டுமே ஜெயம் கிடைத்தது.ஆனால் நமது அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, கல்வாரி சிலுவையில் தம்முடைய கரத்தை உயர்த்த வேண்டியதாயிற்று. சுமார் ஆறு மணி நேரம் சிலுவையில் கைகளை விரித்தபடி தொங்கினார்.
அந்த ஆறு மணி நேரமும் அவர் கரங்களை உயர்த்த வேண்டியிருந்தது. நிச்சயமாக கரங்கள் சோந்து போகும், ஆனால் அவருடனிருந்த சீஷர்கள் பயந்து அவரை தனிமையாய் விட்டு விட்டார்கள்.
அவருடைய கரத்தை தாங்கி பிடிக்க யாருமில்லை, எனவே சிலுவையிலே உயர்த்திய இரண்டு கரங்களும் சோர்ந்து கீழே இறங்காதபடி இருக்க தன் இரண்டு கரங்களையும் ஆணிகளால் அடித்து நிலை நிறுத்த ஒப்புக் கொடுத்தார்.
நம்மை பாதுகாக்கவே.
இன்றும் இயேசுவினுடைய பொற்கரத்தால் நமக்கு விடுதலை உண்டு. அவருடைய கரத்தை நாம் உண்மையான உள்ளத்தோடு பிடித்தால் இன்றைக்கும் நமக்கு ஜெயம் உண்டு.
ஆகவே அவரின் கரத்திற்குள்ளே அடைக்கலம் புகுவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரும்
பாதுகாப்பை பெற்று வளமாய் வாழுவோம்.
ஆமென்