கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக் கடவர். எண்ணாகமம்: 6:24
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக் கடவர்.
எண்ணாகமம்: 6:24
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எனக்கு அன்பானவர்களே!
சமாதானத்தின் காரணராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
1979 ஆம் ஆண்டு, முனைவர். காபிரியேல் பார்க்கேயும் அவருடைய குழுவினரும், பழைய எருசலேம் பட்டணத்தின் புறம்பேயுள்ள கல்லறைத் தோட்டத்தில், இரண்டு வெள்ளிச் சுருள்களைக் கண்டெடுத்தனர்.
அதனை இருபத்தைந்து ஆண்டுகள் கவனமாக ஆய்வு செய்து, 2004 ஆம் ஆண்டு அது பழைய வேதாகமத்தின் வார்த்தைகள் என்பதைக் கண்டுபிடித்தனர். கி.மு.600 ஆம் ஆண்டில் புதையுண்ட அச்சுருள் இன்னமும் அழியாதிருக்கின்றது.
அந்தச் சுருளில் தேவன், ஆசாரியரைப் போன்று, அவருடைய ஜனங்களை ஆசீர்வதிக்கும் வாசகத்தைப் பார்க்கிறோம். “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரகாசிக்கப் பண்ணி, உன் மேல் கிருபையாயிருக்கக் கடவர், கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்” எண்ணாக:. 6:24-26. என்பதே.
இந்த ஆசீர்வாதத்தைக் கூறும் போது, தேவன் ஆரோனுக்கும் அவனுடைய குமாரருக்கும், தேவனுடைய சார்பாக, ஜனங்களை எப்படி ஆசீர்வதிக்க வேண்டுமெனக் காண்பிக்கின்றார்.
சபை போதகர்கள் இவ்வாக்கியங்களை, அப்படியே மனனம் செய்து கொண்டு, தேவன் விரும்புகிற படி, மக்களிடம் கூற வேண்டும். இந்த வார்த்தைகள், தேவன் ஒருவரே ஆசீர்வதிப்பவர் என்பதைக் காட்டுகிறது,
ஏனெனில் மூன்று முறை “கர்த்தர்” என்ற வார்த்தையும், ஆறு முறை “உன்” என்ற வார்த்தையும் வருகிறது. இதனைப் பார்க்கும் போது, தேவன் எவ்வளவாய் தனது ஜனங்கள், தன்னுடைய அன்பையும், ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றார் என்பதைக் காட்டுகிறது.
ஒரு கணம் சிந்திப்போமாகில், அழியாமலிருந்த பழைய வேதாகமத்தின் அந்த ஒரு பகுதி, தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகின்றார் என்பதைக் காட்டுகிறது.
தேவன் நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பினையும், அவர் நம்மோடு உறவை பலப்படுத்தி கொள்ள விருப்புகின்றார் என்பதையும் இது நமக்கு நினைப்பூட்டுகிறது.
நீ தேவனை விட்டு வெகு தொலைவிலிருப்பதாகக் கருதுவாயாயின், இந்த வார்த்தைகளை உறுதியாகப் பற்றிக் கொள். தேவன் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
வேதத்தில் பார்ப்போம்,
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்ல வேண்டியதாவது:
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். எண்ணாகமம்: 6:23,24.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரகாசிக்கப் பண்ணி, உன் மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
எண்ணாகமம்:6:25.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர் மேல் கூறக் கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.
எண்ணாகமம்: 6:26,27
பிரியமானவர்களே,
இயேசு கிறிஸ்து “சமாதான பிரபு” என்று வேதம் கூறுகிறது. “கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரசன்னமாக்கி, உனக்கு சமாதானம் கட்டளையிடக்கடவர்.” (எண் 6:26) என்று பார்க்கிறோம்.
நமது தேவன் அருளுகிற ஆசீர்வாதங்களில் மிக மிக முக்கியமானது சமாதானம் ஆகும். இந்த சமாதானத்தைத் தேடி இன்று கோடிக்கணக்கான மக்கள் பல வழிகளை நாடுகிறார்கள்.உலக இன்பங்களான, போதை பொருள், மதுப்பழக்கம், ஒழுக்கக் கேடான காரியங்கள், பண ஆசை போன்ற அழிந்து போகிற விஷயங்களில் சமாதானத்தை நாடி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் உண்மையான, நிரந்தரமான சமாதானத்தை அருளுகிறவர் நம் அருமை ஆண்டவராகிய இயேசு மட்டும் தான். . மீகா 5:5 சொல்லுகிறது, ‘கர்த்தர் சமாதான காரணர்’. மேலும் ஏசாயா 53:5 சொல்லுகிறது, ‘சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது’ என்று பார்க்கிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக ‘என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக’ என யோவான் :14:27 -ல் வாசிக்கிறோம்.
எனவே சமாதானத்தை அருளுகிற நம் அருமை ஆண்டவரை விசுவாசத்தோடு நோக்கிப் பாருங்கள். கூப்பிடுங்கள் ‘நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று என்று அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும் படி உள்ளே போனார்’.
லூக்கா 24:29
அன்றைக்கு எம்மாவூருக்குப் போன சீடர்கள் இயேசுவை வருந்திக் கூப்பிட்ட போது அவர்கள் வீட்டில் தங்கும்படி இயேசு உள்ளே போனார். அப்போது அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து அவர்களுக்குக் கொடுக்கையில் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு இயேசுவை அறிந்தார்கள் என லூக்கா 24:29-31 வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.
அன்பானவர்களே,
“அவரை நோக்கிக் கூப்பிடுதல்” என்பது ஜெபத்தைக் குறிக்கிறது. உங்கள் வீட்டில் ஒரு சிலராய் இருந்தாலும் நீங்கள் கூடி தேவனை நோக்கிப் பாருங்கள். மத்தேயு 18:19,20-ன் படி ‘அவர் உங்கள் நடுவில் வருவார், ஆச்சரியமான சமாதானத்தைக் காண்பீர்கள்’. ஆகவே உங்கள் வீட்டை ஜெபத்தினால் கட்டி எழுப்புங்கள்.
‘இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்’.
வெளிப்பாடு:3:20 என்று வாக்கு கொடுக்கிறார்.
எனவே நமது அருமை ஆண்டவர் உங்கள் இதயக் கதவைத் தட்டும்போது அவருடைய சத்தத்திற்கு செவி கொடுத்து உங்கள் இருதயத்தில் அவருக்கு இடங்கொடுங்கள். அப்போது அவர் உங்களுக்குள்ளே பிரவேசிப்பார்.
அன்றைக்கு மரியாள் தேவ சத்தத்திற்கு செவி கொடுத்து தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கைப் பெற்றாள். அவள் சகோதரியாகிய மார்த்தாளும் அதே வீட்டுக்குள்ளே இருந்தாலும் சமாதானமின்றி தவித்தாள். காரணம், ஆண்டவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்காதது தான்.
இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் தேவ சத்தத்திற்கு செவி கொடுக்க உங்களை அர்ப்பணியுங்கள். நிச்சயம் உங்கள் இருதயத்தை தேவ சமாதானத்தினால் நிரம்புவார்.
இத்தகைய சமாதானத்தை பரம தேவன் தாமே நமக்கு அருள் செய்வாராக.
ஆமென்