Daily Manna 176

கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் யோசுவா: 1:9.

கலங்காதே,
நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர்
உன்னோடே இருக்கிறார்
யோசுவா: 1:9.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே!

பயங்களை மாற்றி நம்மை பெலப்படுத்துகிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பேய்வீடு என்று கருதப்பட்ட ஒரு வீட்டை ஒரு சிறுவன் தினமும் வேலை முடிந்து இரவு வேளையில் அந்த வீட்டை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அவன் பயப்பட்டான். அவனது பயத்தைப் போக்கப் பலர் பல யோசனைகள் சொன்னார்கள்.

ஒருவன் மந்திரித்த தாயத்தை கையில் கட்டிவிட்டான். வேறொருவன் வீட்டின் அருகில் ஒரு விளக்கை வைத்தான். இன்னொருவன், “பயம் என்பது பாவம். கடவுளை நம்பு” என்றான். இது நல்ல ஆலோசனை தான். ஆனால் சிறுவனுக்கு இது பயன்படவில்லை.

கடைசியாக ஒருவன் வந்து, ‘பயம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். நீ வா. அந்த வீட்டை நீ கடக்கும் வரை உனக்குத் துணையாக உன்னுடன் வருகிறேன்’ என்றான். இதைக் கேட்டதும் அந்தச் சிறுவனின் பயம் முற்றிலும் நீங்கி விட்டது.

தேவன் யோசுவாவுக்கு இதைத் தான் செய்தார். யோசுவா நாடோடிகள் போன்ற, போர் பயிற்சி இல்லாத ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு போருக்கு போனான்.

போர் பயிற்சி பெற்ற இராணுவீரர்ளை எதிர்த்து யுத்தத்துக்குப் போக வேண்டியதிருந்தது. இது எந்த வீரனையும் நடுங்கச் செய்யும்.

ஆனால், தேவன்
யோசுவாவுக்கு ஒரு போர்த் திட்டம் வழங்கினார். “நீ போகுமிடமெல்லாம் நான் உன்னோடு இருப்பேன்” என்று தைரியம் கூறியிருந்தார்.

பயங்கரமான சூழ்நிலைகளில் மட்டும் அல்ல, எல்லா விதமான சூழ்நிலையிலும் நான் உன்னோடு இருப்பேன் என்று ஆண்டவர் வாக்குறுதி கொடுக்கிறார்.

இதே வார்த்தையை தேவன் இன்றைய நாளில் நமக்கும் தருகிறார். ஆம், நாம் போகிற எவ்விடத்திலும் தேவனின் பிரசன்னத்தை நம்மால் உணர முடியும்.

வேதத்தில் பார்ப்போம்,

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
யோசுவா :1:5

நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர் தாமே உன்னோடே கூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
உபாகமம் :31:6.

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
யோசுவா :1:9

பிரியமானவர்களே,

ஆசீர்வாதத்திலேல்லாம் மிகப் பெரும் ஆசீர்வதம் எது? என்றால் கர்த்தர் நம்மோடு இருப்பதே!

உலகத்தின் தெரிந்து கொள்ளுதலுக்கும் தேவனின் தெரிந்து கொள்ளுதலுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. சிறந்த மனிதர்களை தெரிந்தெடுத்து பணியில் அமர்த்துவது உலக இயல்பு.

ஆனால் ஒன்றுக்கும் உதவாத குறைவுள்ள மனிதர்களையும் தெரிந்தெடுத்து அவர்களுக்கு போதித்து மகத்தான காரியங்களை செய்ய வைப்பது தான் தேவனின் மகத்தான செயல்.

தேவன் யோசுவாவைப் பார்த்து ‘திகையாதே கலங்காதே’ என்று சொன்னதைப் போல, இன்றும் கர்த்தர் நம்மைப் பார்த்து திகையாதே கலங்காதே என்று சொல்லுகிறார்.

நம்முடைய பெலவீனங்களை நன்கு அறிந்தவர் நம் தேவன். மனிதர்களாகிய நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியாது ஆனால் நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்து நம்மோடு இருக்கும் போது எல்லாவற்றையும் செய்ய நமக்கு பெலன் தருகிறார்.

நம்முடைய சூழ்நிலைகள் எவ்வளவு எதிர்மாறாகக் காணப்பட்டாலும் சரி, அதினால் நம் உள்ளத்தில் பயமானது காணப்பட்டாலும் சரி, நீங்கள் ஒன்றை மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள், கர்த்தர் என்னோடே இருக்கிறார்.எந்த சூழ்நிலையிலும் எனக்கு பெலத்தைக் கொடுத்து, அந்த சூழ்நிலையை மேற்கொள்ள எனக்கு உதவி செய்வார் என்று விசுவாசியுங்கள்.

வேதம் சொல்லுகிறது, ‘நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்’
உபாகமம்:20:1.என்று கூறுவதை பார்க்கிறோம்.

அநேக சூழ்நிலைகளில் நாம் திகைக்கும் பொழுதும், கலங்கும் பொழுதும் அடுத்து நாம் என்ன செய்வது என்று தடுமாறி நிற்கும் போதும், கர்த்தர் சொல்லுகிறார். அவைகளைக் கண்டு நீ பயப்படாதே என்று .

ஏனென்றால் உன்னை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சித்த கர்த்தர் அவர். அவர் என்னை ஒருக்காலும் கைவிடார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிரியமானவர்களே,
இப்படியாக யோசுவாவுக்கு வாக்குப்பண்ணின கர்த்தர்,அதை அவருடைய வாழ்க்கையில் நிறைவேறப் பண்ணினார்.

அதேப் போலவே இந்த நாளிலே இந்த வாக்குத்தத்ததை நமக்கு கொடுத்திருக்கும் கர்த்தர் நமது வாழ்விலும் தடைப்பட்ட எல்லாவற்றையும் நிறைவேறப் பண்ணுவார்.

நாம் எல்லாவற்றிலும் மேன்மையாக இருப்போம். கர்த்தர் நம்மை உயர்த்துவார் என்று விசுவாசித்து ஜெபியுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்‌

யோசுவாவோடு இருந்த தேவன் தாமே நம்மோடும் கூடவே இருந்து இவ்வுலகில் பயமின்றி வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *