Daily Manna 181

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர். சங்கீதம் :46 :1

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.
சங்கீதம் :46 :1
=========================
எனக்கு அன்பானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

1908ம் ஆண்டு, திபெத்திற்கு (Tibet) 19 வயதுள்ள இளைஞனாய் ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) அவர்கள். திபெத்தில் புத்த மதமே பிரதானமாக இருந்ததால், அம் மதம் நலிந்து போய் விடக் கூடாது என்பதற்காக பிற மத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது என்று கடுமையான சட்டமிருந்தது.

இருப்பினும் துணிந்து அங்கு சென்றார்.
ஒரு முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையே சுவிஷேசத்திற்கு வரவேற்பு இருக்கவில்லை. அவர்கள் சுந்தரை பிடித்து, அவ்வூர் பிரதமர் லாமாவிடம் கொண்டு வந்தனர்.

அனுமதியின்றி ஊருக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு மதத்தை பிரசங்கித்த குற்றத்திற்காகவும், லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார். மரண தண்டனை கொடுக்கும் முறைப்படி, சுந்தர் ஒரு கிணற்றுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டார்.

அவரது உடைகளை உரிந்து விட்டு, எலும்பும், குப்பையும் நிறைந்த இருண்ட கிணற்றிற்குள் தூக்கி எறிந்தார்கள். விழுந்த வேகத்தில் வலது கை தோள் பட்டையில் அடிபட்டு மயக்கமுற்றார். மயக்கம் தெளிந்து எழுந்த போது, எங்கும் இருளாகவே இருந்தது.

இவருக்கு முன் இந்த கிணற்றில் எறியப்பட்ட பலரது உடலும், அழுகிய மாம்சமும், எலும்புகளும் எங்கும் நிறைந்து கிடந்தது. தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது.
கை வைத்த இடமெல்லாம், அழுகிய மாம்சமும், எலும்புகளுமிருந்தன.

தோளில் அடிபட்ட இடம் தாங்க முடியாத வலியை கொடுத்தது. அப்பொழுது இயேசு இரட்சகர் வேதனையடைந்து உச்சரித்த வார்த்தைகளை தான் அவர் நாவிலும் வந்தன. ”என் தேவனே , என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்?”என்று. துர்நாற்றம், பசி, தாகம், வேதனை ,இருள் இவைகளின் மத்தியில் தூக்கம் வரவில்லை.

முன்றாம் நாள் இரவில்
ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார். திடீரென கிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. பேராவலோடு அண்ணாந்து பார்த்தார்.

மேலேயிருந்த மனிதர் ”கீழே விடப்படும் கயிற்றை உன் இடுப்பில் கட்டிக் கொள்” என்றார். அதன் படி செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தரை தூக்கி கிணற்றிற்கு வெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து, கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வேளையில், மறுபடியும் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது.

தனக்கு உதவிய நண்பருக்கு நன்றி செலுத்தும் படி திரும்பினார், என்ன ஆச்சரியம்! அங்கு யாருமில்லை. அவருடைய தோள்பட்டை வலியும் மறைந்து போனது.

அப்போது தான் தெரிந்தது தன்னை காப்பாற்றயது கர்த்தர் என அறிந்து தேவனுக்கு நன்றி செலுத்தினார்.

நாமும் நமது ஆபத்து சூழ்நிலையில் யாரென்று தெரியாதவர்கள் கூட உதவி செய்திருக்க கூடும்.ஆனால் அது நம் கர்த்தரால் நமக்கு கிடைத்த உதவி.

வேதத்தில் பார்ப்போம்,

ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
சங்கீதம் :50 :15.

என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
2 சாமுவேல் :22: 19.

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.
சங்கீதம் :46 :1.

பிரியமானவர்களே,

நாம் ஆராதிக்கின்ற தேவன் சர்வ வல்லமையுள்ளவர். தம்மை நம்புகிறவர்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதத்தை செய்து அவர்களை விடுவிக்க வல்லவர்.

தமக்காக வைராக்கியம் பாராட்டுகிறவர்களுக்காக வைராக்கியம் பாராட்டும் தேவன் நம் தேவன்.

தேவனுக்காக வைராக்கியம் பாராட்டின தானியேலை காப்பாற்ற சிங்கங்களின் வாயை கட்டிய வல்ல தேவன் நம் தேவன்! மூன்று எபிரேய வாலிபர்கள் நேபுகாத்நேச்சார் செய்து வைத்த சிலையை வணங்காதபடி வைராக்கியம் பாராட்டியதால்
அவர்களை ஏழு மடங்கு எரியும் சூளையில் தூக்கி எறிந்த போது, தேவன் அவர்களுக்காக வைராக்கியம் பாராட்டி, நான்காவது ஆளாக, அவரே இறங்கி வந்து அவர்கள் நடுவில் உலாவினார்.

நெருப்பின் வாசனையும் அவர்கள் மீது வீசாமல், அவர்களை வெளியே கொண்டு வந்த தேவன் நம் தேவன்!

ஆம், நாம் ஆராதிக்கும் தேவன் சர்வ வல்லமையுள்ள தேவன். நமக்காக யுத்தம் செய்கிறவர். ஆம், அவராலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமே இல்லை. அவரை ஆராதிக்கிற நாம் நிச்சயமாக பாக்கியவான்கள் தான்.

தேவன் சோதிக்கப்படுகிற நமக்கு உதவி செய்ய வல்லவர். உங்களுடைய வாழ்கையில் சோதனைகளை நீங்கள் சந்திக்கும் போது அதை எப்படி மேற்கொள்வது என்றும், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்

உங்கள் வாழ்க்கையில் சோதனையின் நாட்களில் நீங்கள் மிகவும் நெருக்கப்படும் போது என்ன செய்வது என்று அறியாத நேரங்களில் தேவ சமுகத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனைக்கு காத்திருங்கள். அவர் உங்களை தப்புவிக்க வல்லவர். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குவார்.
(1கொரி 10:13).

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அவர்களின் வாழ்கையில் அவர்களை தப்புவிக்க வல்லவராய் அவர்களோடு அக்கினி சூளையில் நடந்தார். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்.

அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக:
ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நாலு பேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை. நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
(தானி 3:23-25).

ஆம், மூன்று வாலிபர்களை கட்டுண்டவர்களாய் ஏழு மடங்கு அதிகமான அக்கினி சூளையிலே போட்ட போது அக்கினி அவர்களை ஒன்றும் செய்யாது அவர்களது கட்டுகளை மாத்திரம் எரித்தது.அவர்கள் விடுதலையோடு உலாவினர் என்று வேதத்தில் பார்க்கிறோம்.

நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின் படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சாட்சியாக என்றென்றுமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *