Daily Manna 185

ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். ஏசாயா: 66 :13.

ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
ஏசாயா: 66 :13.

எனக்கு அன்பானவர்களே!

தாயினும் மேலாய் அரவணைப்பவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பதினெட்டு வயது நிரம்பிய வாலிபன் தன் வீட்டின் அருகில் நடந்த தீ
விபத்திற்குட்பட்டான். உடையில் தீ பற்றியவுடன் அவன் தன் மேல் சட்டையைக் கழற்றி எறிந்தான்.

ஆனால், அவன் அணிந்திருந்த இறுக்கமான காலாடையை கழற்றி ஏறிய முடியவில்லை. அது அவன் காலோடு ஒட்டிக் கொண்டது.

இதற்குள் பற்றி எரிந்த நெருப்பு அவன் உடலை பெருமளவில் பாதித்து விட்டது. தாங்க முடியாத வேதனையுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். மருத்துவர்கள் அவன் உயிரைக் காக்க போராடிக் கொண்டிருந்தனர்.

இறுதியில் அவர்கள், அவன் உடலுக்குப் பொருத்தமான மனித தோல் கிடைத்தால் மட்டுமே அவன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று கூறி விட்டர்கள். அங்கு கூடி நின்ற அவனது நண்பர்களும், உறவினர்களும் மாறி மாறி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழித்தார்களே தவிர, தோல் கொடுக்க யாரும் முன் வரவில்லை.

அப்பொழுது அங்கு நெஞ்சம் பதறியபடி துடிதுடிக்க ஓடி வந்தாள் அவன் தாயார். மருத்துவர்களின் தேவையை அறிந்த அவர்கள், ஐயா! எவ்வளவு தோல் வேண்டுமோ அதை என் உடம்பிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

என்னைப் பற்றிக் கவலையில்லை. என் மகனை காப்பாற்றுங்கள் ஐயா, என் மகன் பிழைத்தால் மட்டும் போதும் என்று கெஞ்சினார்கள்.

தாயின் தோலால் அவன் வெகு விரைவில் குணமடைந்தான். ஆனால், அவன் தாயாரோ வெகுநாள் குணமடையாமல் வேதனையால் ஒவ்வொரு நிமிடமும் துடிதுடித்துக் கொண்டு இருந்தாள்.

தாயன்பு எவ்வளவு சிறந்தது! ஆனால் இன்று அனேகரால் அந்த உண்மையான அன்பை புரிந்து கொள்ள முடியவில்லை.

வேதத்தில் பார்ப்போம்,

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
ஏசாயா :49 :15.

கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.
உபாகமம் :31:8.

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா :41 :10.

பிரியமானவர்களே,

இந்த பூமிக்குரிய தாய் தன் குழந்தையின் மீது இவ்வளவு அக்கறை காட்ட முடியுமானால், நம்முடைய பரலோகத் தகப்பன் நம்மீது எவ்வளவு அக்கறையுள்ளவராக இருப்பார்.

தேவனுடைய கண்கள் எப்போதும் நம்மை நோக்கிக் கொண்டிருக்கிறது. நாம் அவருக்கு எவ்வளவு நெருக்கமாகவும், அன்பாகவும் இருக்கிறோம் என்பதை அவர் நமக்கு காண்பிப்பார். அவருடைய கரங்களிலிருந்து உங்களை ஒருவரும் பறித்துக் கொள்ள முடியாது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்வதைப் பாருங்கள், “நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை.
அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக் கொள்ள ஒருவனாலும் கூடாது” யோவான் 10:28,29.

ஆம், உங்கள் மதில்கள் எப்போதும் அவருக்கு முன்பாக இருக்கிறது.
தேவ ஜனங்களின் மீது அவர் கொண்டிருக்கும் இரக்கமும், பராமரிப்பும் பாதுகாப்பும் அற்புதமானது. அவர் உங்களைச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருக்கிறார்
சகரியா 2:5. இன்றைக்கும் அவர் உங்களை அற்புதமாய் பாதுகாகிறார்.

அவர் அற்புதம் செய்கிற தேவன். அவரால் செய்ய கூடாதது ஒன்றுமில்லை. வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய தேவ கரங்கள் ஒரு போதும் உங்களை விட்டு விலகுவதில்லை. ஆகவே உற்சாகமாயிருங்கள்!

தேவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்மைக் கட்டித் தழுவும் தாயின் கரங்களே!அதில் பாசமும் உண்டு! ஒப்பற்ற பாதுகாப்பும் உண்டு! எவரும் காட்டவியலாத இரக்கமும் உண்டு!

இந்த தேவ அன்பிலே ஒவ்வொரு நாளும் நாம் நிலைத்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *