Daily Manna 198

நாளையத் தினத்தைக் குறித்துப் பெருமை பாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே. நீதிமொழிகள் 27:1

நாளையத் தினத்தைக் குறித்துப் பெருமை பாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
நீதிமொழிகள் 27:1
——————–
எனக்கு அன்பானவர்களே,

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் கொத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், ஒரு மின்னல் அந்த மரத்தைத் தாக்க, அந்த மரம் கீழே சாய்ந்தது.

மரங்கொத்திப் பறவைக்குப் பெருமை தாங்கவில்லை. “நான் கொத்தியதால் தான், இந்த மரம் விழுந்தது என் அலகு எவ்வளவு பெலன் வாய்ந்தது” என்று பெருமை கொண்டது.

அதுமட்டுமல்ல, இன்னும் பெரிய மரங்களையும் நான் வீழ்த்திக் காட்டுகிறேன் பாருங்கள், என்று சவால் விட்டு போய், தன் அலகை முறித்துக் கொண்டது.

இன்று நம்மில் அநேகர் இப்படித்தான் பரிசுத்தாவியானவர் அவர்கள் வாழ்க்கையிலும், ஊழியங்களிலும் கிரியை செய்திருக்க, கர்த்தருக்கு மகிமை செலுத்தி தங்களை மறைத்து ஜீவிக்காமல், என் ஊழியத்தில் இத்தனை பேர் ஒப்புக் கொடுத்தார்கள், இரட்சிக்கப்பட்டார்கள் என்று “டமாரம்” அடித்து கடைசியில் விழுந்து போய் விடுகிறார்கள்.

ஒருவரிடம் பணிவு இல்லாத போது அந்த இடத்தை தற்பெருமை ஆக்கிரமித்து விடுகிறது. தற்பெருமை உள்ளவனிடம் உப்புக்குக் கூட பணிவை எதிர்பார்க்க முடியாது. ஒன்று இருந்தால் மற்றொன்று விலகி போய் விடும்.

வேதத்தில் பார்ப்போம்,

துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
சங்கீதம் :10 :2.

இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப் போடுவார்.
சங்கீதம்: 12:3.

ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத் தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவீர்கள்.
பிலிப்பியர்: 2 :3.

பிரியமானவர்களே,

தேவ ஊழியர்
D.L, மூடியிடம் ஒருவர் கேட்டார். உங்கள் மூலம் இதுவரை கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்தவர்கள் சுமார் எத்தனை பேர் இருப்பார்கள்? என்று தேவ மனிதர் மூடியிடம் கேட்ட போது,அவர் தாழ்மையாக சொன்னார்:- “நான் கணக்குப் பார்க்க ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புத்தகம் என்னிடத்தில் இல்லை. நான் அப்பிரயோஜன மற்ற ஊழியக்காரன்” என்றாராம்!!

பணிவு’ என்பது நல்லோர்கள், பெரியோர்கள் ஆகியோரின் குணமாகும். ‘தற்பெருமை’ என்பது சாத்தானின் தனிப்பெரும் நடவடிக்கையும், சர்வாதிகாரிகளின் போக்கும் ஆகும்.

இறை நம்பிக்கையாளர்கள் பணிவை வெளிப்படுத்துவார்கள். தற்பெருமையை தூக்கி எறிந்து விடுவார்கள். இறை நம்பிக்கை குடியிருக்கும் உள்ளத்தில் பணிவு இருக்கும். அது வெளிப்பட வேண்டிய விதத்தில் வெளிப்படும்.

அதே வேளையில் இறை நம்பிக்கையும், தற்பெருமையும் ஒன்று சேர வாய்ப்பில்லை.
பணிவு என்பது அடிமையாக இருப்பதோ, சுயமரியாதையை விட்டுக் கொடுப்பதோ, காக்காய் பிடிப்பதோ, அல்ல.

எதற்கெடுத்தாலும் ‘ஆமாம்’ என்று கூறுவதோ, தலையை ஆட்டிக் கொண்டிருப்பதோ, உடலை கூனிக் குறுகி வளைப்பதோ அல்ல என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கர்த்தர் D.L மூடி பிரசங்கியாரை கடைசிவரையும் வல்லமையாக உபயோகப்படுத்தினதின் இரகசியம் இதுதான். தேவஜனமே, உங்களைத் தாழ்த்தி, கிறிஸ்துவில் மறைந்து ஊழியஞ் செய்யுங்கள். அப்பொழுது பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.

நமது வாழ்வில் நமக்குள்ள பெருமைகள், ஆவணங்கள், அகந்தைகள் யாவற்றையும் நம்மை விட்டு முற்றிலுமாய் நீக்கி, பவுல் அப்போஸ்தலனைப் போல் யாவற்றையும் கிறிஸ்துவுக்காக நஷ்டமும், குப்பையும் என்று எண்ணுகிறேன் என கூறுவோம்.

கிறிஸ்துவின் அன்பை முன்னிட்டு அவரின் சாயலாய் பரனோடு நிதம் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *