Daily Manna 199

இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது 1 பேதுரு 3 : 4

இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது
1 பேதுரு 3 : 4
*************
எனக்கு அன்பானவர்களே!

நம்மை நற்குணங்களால் அலங்கரிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு மனுஷன் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு பழைய சாக்கு மூட்டையில் களிமண்ணால் செய்யப்பட்ட உருண்டைகள் இருந்தன.

யாரோ களிமண் உருண்டைகளை செய்து, அவற்றை வெயிலில் காய வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தவனாக, அந்தச் சாக்குப் பையை வெளியே எடுத்துக் கொண்டு போய் , ஒவ்வொன்றாக எடுத்து தன் கையினால் எவ்வளவு தூரம் எறிய முடியுமோ அவ்வளவு தூரம் கடலுக்குள் எறிய ஆரம்பித்தான் .

ஒரு உருண்டை அங்கிருந்த கல்லில் பட்டு, உடைந்தது. என்ன அதிசயம்? அதற்குள் இருந்த விலையேறப்பெற்ற ஒளிவீசும் கல் தெரிய ஆரம்பித்தது. அதை கண்ட உடனே அவன் ஒவ்வொரு கல்லாக வேகவேகமாக அந்த கல்லின் மேல் போட்டு உடைக்க ஆரம்பித்தான்.
ஒவ்வொன்றிலும் ஒரு விலையுயர்ந்த கல் காணப்பட்டது.

ஐயோ, மற்ற கற்களையும் நான் தூக்கி எறியாமல் இருந்திருந்தால், எத்தனையோ விலைமதிக்க முடியாத கற்களை கொண்டு சென்றிருக்கலாமே என்று வருத்தப்பட்டான்.
இதை போல தான் நாம் காண்கின்ற மக்களின் புற உருவத்தைப் பார்த்து மதிப்பிடுகிறோம்.

ஒரு அழகற்ற மனிதனையோ மனுஷியையோ நாம் பார்க்கும்போது, அவர்களை விட அழகுள்ள, நன்கு உடையணிந்த மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, இது முக்கியமில்லாதது என்று கணித்து ஒதுக்கி விடுகிறோம். அவர்களுடைய உள்ளான அழகை கவனிக்க தவறி விடுகிறோம். அவர்களை உதாசினம் செய்கிறோம்.

ஆண்டவர் படைத்த நம் ஒவ்வொருவருக்குள்ளும் அநேக நற்குணங்களும் திறமைகளும் அடங்கியுள்ளது. நாம் ஒருவரை அவர்களின் வெளித் தோற்றத்தை மட்டும் பார்த்து அவர்களை புறந்தள்ள வேண்டாம். நாம் வெளிதோற்றத்தை பார்க்கிறோம். நம் ஆண்டவரோ நம் உள்ளத்தை பார்க்கிறார்.

வேதத்தில் பார்ப்போம்,

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது
1 பேதுரு 3 : 4

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
மத்தேயு 5 :8.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
லூக்கா 8 :15.

பிரியமானவர்களே,

தாவீதுக்கு வாட்டசாட்டமான பெலசாலிகளான ஏழு சகோதரர்களையும் ஆண்டவர் இஸ்ரவேலின் ராஜாவாக தெரிந்து கொள்ளவில்லை, ஆனால், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீதை தெரிந்துக் கொண்டார்.

ஏனெனில் தாவீதின் இருதயம் தேவனையே நோக்கி கொண்டிருந்தது.
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால். நான் அசைக்கப் படுவதில்லை. என்று சங்16:8.தைரியமாக சொல்ல முடிந்தது.

அதனால் தான் தேவன் என் இருதயத்திற்கு ஏற்ற வனாக கண்டேன் என்று
தாவீதை குறித்து சாட்சி சொல்ல முடிந்தது.

தாவீது ஆட்டிடையன் தானே என்று தேவன் புறந்தள்ளி விடவில்லை. தாவீதை தெரிந்து கொண்டதால் தான் அவனுக்குள் இருந்த விலையேறப் பெற்ற. முத்துக்களாகிய சங்கீதங்களை நாம் இன்றும் வாசித்து களிகூர முடிகிறது.

ஒருவேளை நம்மோடு வேலை செய்கிறவர்கள் மிகவும் எளிமையான தோற்றத்தோடு இருக்கலாம். நாம் அவர்களை ஒருபோதும் அசட்டை பண்ணாமல் , யாராகயிருந்தாலும் அவர்களை நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்

ஆண்டவருக்கு பயப்படாதபடி, அழகு மாத்திரம் இருந்து எந்த பயனும் இல்லை.
சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
நீதிமொழிகள் 31:30 என்று பார்க்கிறோம். நாம் வெளித் தோற்றத்தை வைத்து எவரையும் நிதானிக்காதபடிக்கு ஆண்டவரின் பிள்ளைகளாக வாழுவோம்.

நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காண்கிற வண்ணமாக நாமும் மனிதர்களை காணும்போது,
அனைத்து மனிதர்களுக்குள்ளும் விலை மதிக்க முடியாத பொக்கிஷம் மறைந்திருக்கும். ஒவ்வொருவருடைய செயல்களும் சிறந்ததாக இருக்கும்.

கர்த்தராகிய இயேசு ஒருவரையும் புறந்தள்ளுவதுமில்லை. அவர்களை அற்பமாக எண்ணுவதுமில்லை.அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை தேடிச் சென்று அவர்கள் தேவைகளை சந்திக்கிறார்.

இயேசுவின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட நாமும் அவரைப் போல ஒருவரையும் அற்பமாக எண்ணாமல், மற்றவர்களை நேசித்து உதவி செய்வோம்.
மகிழ்ச்சியாய் வாழ்வோம்.

ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *