கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல் இருப்பார்கள். சங்கீதம்:125:1
கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல் இருப்பார்கள்.
சங்கீதம்:125:1
எனக்கு அன்பானவர்களே!
நம்பிக்கையின் நங்கூரமாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கை இல்லாமல் நாம் எந்த ஒரு செயலையும் செய்யவோ, அல்லது பெற்றுக் கொள்ளவோ முடியாது.
ஒரு நாள் கடலிலே மீன் பிடிக்கச் சென்ற ஒரு மனிதரின் படகு ஒரு சுழலில் சிக்குண்டதில் அவன் மரித்து போனான். அவரது மகனும் மீன் பிடிக்க சென்ற போது விஷ மீன் தாக்கி அவனும் மரித்து போனான்.
இப்பொழுது பேரன் மீன் பிடிக்க செல்ல வலைகளை வாங்கி படகை ஆயத்தப்படுத்தி கொண்டிருந்தான்.
இதைக் கண்ட ஒருவர், ‘உன் தாத்தாவும் அப்பாவும் கடலுக்குள் சென்று இறந்து போனார்களே.நீயும் அதே கடலுக்குச் செல்கிறாயே, உனக்கு உயிர் மேல் ஆசையில்லையா?’ என்று கேட்டார்.
இவர்கள் இருவரது சம்பாஷணை கேட்டு கொண்டிருந்த ஒரு பெரியவர், அவரிடம், ‘ உன் தாத்தா எப்பொழுது இறந்தார்?’ என்று கேட்டார். அதற்கு அவர், என் தாத்தா தூங்கும் போது இறந்தார்’ என்றார்.
‘ஆம், உன் அப்பாவும் தூங்கும் போது தானே இறந்தார். ஆகவே நீயும் அதையே நினைத்து தினமும் தூங்காமல் இருக்கிறாயா?’ என்று கேட்டார். பதிலே பேசவில்லை .
‘அவன் மீன் பிடிக்க செல்கிறான் என்றால் திரும்பி வருவேன் என்ற ஆண்டவரின் மீதுயுள்ள நம்பிக்கையில் தான் செல்கிறான்’ என்றார்.
இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் வாழ்கின்றனர். சிலர் தங்களிடமுள்ள சொத்து, பதவி, குடும்பத்தின் மேல் நம்பிக்கை வைக்கின்றனர்.
இன்னும் சிலர் மூட நம்பிக்கை மீது தங்கள் நம்பிக்கையை வைத்து பயந்து பயந்து வாழ்கின்றனர். இப்படி விதவிதமாய் மனிதன் ஒவ்வொன்றின் மீதும் தன் நம்பிக்கை வைத்து ஏமாற்றத்தையும்,
தோல்வியையும் அடைகிறான்.
ஆனால் நமது நம்பிக்கையை கன்மலையாம் கிறிஸ்து மேல் வைக்கும் போது, எந்த சூழ்நிலையிலும் நாம் அசைக்கப்பட மாட்டோம்.
வேதத்தில் பார்ப்போம்,
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.
சங்கீதம் :37:5.
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு: அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
நீதிமொழிகள்: 14:26.
கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரேமியா: 17:7.
பிரியமானவர்களே,
உங்கள் நம்பிக்கை எதன் மேல் உள்ளது? வயதான பின் என் பிள்ளைகள் என்னை கவனித்துக் கொள்வார்கள் என்று அவர்களை நம்புகிறீர்களோ?
அல்லது நான் வேலை பார்க்கும் கம்பெனி ஒரு பிரச்சனையும் இல்லாதது, ஆகவே எனக்கு எந்த பணக் கஷ்டமும் வராது என்று உங்கள் கம்பெனியை நம்புகிறீர்களோ?
நான் என் உடலுக்கு கேடு விளைவிக்காத உணவையே
உண்கிறேன், நல்ல உடற்பயிற்சி செய்கிறேன், என் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் வராது என்று உங்கள் பெலனை நம்புகிறீர்களோ?
இன்னும் எது எதையோ நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?
நாம் நம்பியிருக்கிற எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டு விலகி போகலாம், கைவிட்டு விடலாம்.
ஆனால் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் உறுதியுடன் இருப்பார்கள்.
நாம் கர்த்தர் மேல் நம்பிக்கையை வைக்கும் போது, சீயோன் பர்வதத்தை போல எத்தனை பிரச்சனை வந்தாலும் இந்த உலகில் எந்த பயமுமின்றி வாழ முடியும்.
கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான். ஆனால் மனுஷனை நம்புகிறவனோ சபிக்கப்பட்டவன் என்று வேதம் கூறுகிறது.
கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் என்று பார்க்கிறோம்.நாமும் கர்த்தர் மேல் நம் நம்பிக்கையை வைப்போம். எந்த விதமான அச்சமும், பயமும் இல்லாமல் வாழ்வோம்.
நம்முடைய நம்பிக்கையை கர்த்தர் மேல் வைத்து முன்னேறிச் செல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு உதவி செய்வாராக.
ஆமென்.