நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப் பண்ணும்; விரும்பினது வரும் போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும். நீதிமொழிகள்: 13:12
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நாள் கிராம சேவகர் ஒருவர்
மரநடுகை தினத்தை முன்னிட்டு அக்கிராம மக்கள் அனைவரையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு மரக்கன்று ஒன்றை கொடுத்தார்.
நீங்கள் அதை வீட்டில் நட்டு தினமும் அதை பராமரிக்குமாறும் கூறினார். ராஜா என்பவரின் குடும்பத்திற்கும் ஒரு மாங்கன்று கொடுக்கப்பட்டது.
அதை அவர்கள் வீட்டிற்கு பின்னாலுள்ள தோட்டத்தில் கவனமாக நாட்டினார்கள். வாரம் ஒரு முறை உரம் போட்டார்கள். தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றினார்கள்.
காலை எழுந்தவுடன் அம்மரக்கன்று இலை விட்டுள்ளதா என தினமும் ஆராய்ச்சி செய்வார்கள்.
மாதங்கள் உருண்டோடின. செடியில் பெரிதான மாற்றங்கள் காணாததினால் மிகவும் விரக்தி அடைந்தார்கள்.
நாம் எவ்வளவு கவனமாக வளர்த்தோம் இதை நட்டு எவ்வளவு மாதமாகி விட்டது. ஆனால் இந்த மாமரம் காய்க்கவே இல்லையே, இனி நான் இதற்கு தண்ணீர் ஊற்றப் போவதுமில்லை, உரம் போடப்போவதுமில்லை என்று புலம்பினார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த கிராம சேவகர் இவர்கள் கவலையை அறிந்து விசாரித்தார். அவர்கள் தங்கள் நிலைமையை எடுத்துக் கூறினார்கள்.
அப்பொழுது, கிராம சேவகர் அவர்களை நோக்கி ‘மாமரம் காய் காய்க்க பத்திலிருந்து பன்னிரெண்டு வருடம் ஆகும்.ஆகவே, அதுவரை நாம் பொறுத்திருக்கத் தான் வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு’ என கூறினார்.
அப்பொழுது தான் அவர்களின் நிலை புரிந்தது.
நாமும் அநேக நேரங்களில் இவர்களைப் போலவே எந்த ஒரு காரியத்திற்கும் பொறுத்திருக்க முடியாமல் அவசரப்படுகிறோம்.
நான் ஒழுங்காக வேதம் வாசிக்கிறேன், ஆலயம் செல்கிறேன், கர்த்தருக்கு பிரியமான வாழ்வு வாழ்கிறேன், ஆனால் இன்னும் என் ஜெபத்திற்கு பதில் வரவில்லையே, என அநேக நேரங்களில் அங்கலாய்க்கிறோம்.
இனி நான் ஜெபிக்க போவதே இல்லை, என்று கூட விரக்தியில் சொல்லலாம். ஆனால் வேதம் என்ன சொல்லுகின்றதென்று பாருங்கள்,
‘நீதிமானுக்காக வெளிச்சமும், மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது’.
ஆம் தேவன் உங்களுக்குரிய நன்மைகளை முன்குறித்து விட்டார். அவற்றை நமக்கென்று விதைத்து விட்டார்.
அதை எவரும் தடை செய்ய முடியாது, ஆனால் அந்த மகிழ்ச்சி என்னும் விதை நமக்கு பலன் தரும் வரை நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.
வாக்குத்தத்தத்தின் பிள்ளையை பெற்றுக் கொள்ள வாக்குத்தத்தம் பெற்ற பிறகும், ஆபிரகாம் 25வருடம் பொறுமையோடு காத்திருக்கவில்லையா?
‘நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப் பண்ணும்; விரும்பினது வரும் போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்’
நீதிமொழிகள் 13:12 என்று வேதம் கூறுகிறது.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
சங்கீதம்: 31:24.
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டு போவதை நீ காண்பாய்.
சங்கீதம்: 37:34.
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
ஏசாயா: 30 :18.
பிரியமானவர்களே,
நான் எவ்வளவு காலம் காத்திருப்பது என சோர்ந்து போகாதீர்கள், உங்களது ஜெபத்திற்கும் கண்ணீருக்கும், கிரியைக்கும் ஏற்ற காலம் வரும் போது, அத்தனை பலனையும் காண்பீர்கள்.
தேவ சமுகத்தில் விட்ட ஒரு சொட்டு கண்ணீர் கூட வீணாக போகாது. அவை சர்வ வல்ல தேவனுடைய கணக்கில் இருக்கிறது.
ஆகவே இதுவரை நீதியாய் வாழ்ந்து என்ன பயன்? ஜெபித்து, கடவுளுக்கு பிரியமாய் வாழ்ந்து என்ன பயன்? என்று இருதயத்திலும் நினைக்காதீர்கள்.
நிச்சயமாகவே முடிவு உண்டு. உங்கள் நம்பிக்கை வீண் போகாது. ஆம், நீங்கள் நெடுங்காலமாய் காத்திருக்கிறீர்கள் என்பதை தேவன் நன்கு அறிவார்.
அதை அவர் ஏற்ற வேளையில் கொடுக்கும் போது நிச்சயமாகவே அது ஜீவ விருட்சத்தை போல நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும்.
அப்படி காத்திருக்கும் காலம் நமக்கு விலையேறப் பெற்ற காலமாகும். அதில் நாம் தேவன் மேல் வைத்துள்ள அன்பின் ஆழத்தை அவர் கண்டு கொள்ள ஏதுவாகும்.
காத்திருக்கும் நாட்களில் சாத்தானுக்கு இடம் கொடுத்தோமானால் அவன் இதைக் காரணம் காட்டியே தேவனை விட்டு பிரித்து விடுவான்.
ஆகவே இக்காலங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீங்களும் எதிர்காலத்திற்காக, நல்ல வாழ்க்கைக்காக, ஆரோக்கியத்திற்காக, உயர்வுக்காக காத்திருக்கிறீர்களா?
முதலில் கர்த்தருடைய பாதத்தில் காத்திருங்கள். உங்களுக்கான நன்மைகள் உங்களைத் தேடி வரும்.
ஆகவே நாமும் கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து பாக்கியவான்களாய் அவர் தருகிற ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.
ஆமென்.