ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; பிரசங்கி: 6 :9.
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு பணக்காரர்,
தன் வீட்டிற்கு அருகில் இருந்த தனக்கு சொந்தமான காலி மனையை விற்பதற்கு,”இந்த நிலத்தை,வாழ்வில் முழுமையான திருப்தி அடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும்”
என்று எழுதி வைத்தார்.
அந்தப் பக்கம் வந்த ஒருவர்,அவரை அணுகி,”அய்யா
என்னிடம் எல்லா செல்வங்களும் தேவைக்கு இருக்கின்றன.
அதனால் நீங்கள் சொன்ன தகுதி எனக்கு தான் உள்ளது.எனவே இந்த நிலத்தை எனக்கே தாருங்கள்,”என்றார்.
செல்வந்தர் கேட்டார்,”உண்மையிலேயே நீங்கள் வாழ்வில் திருப்தியுடன் இருக்கிறீர்களா?”
என்றார்.
‘உடனே வந்தவர்,
”உண்மையிலேயே நான் திருப்தியுடன் தான் இருக்கிறேன். எனக்குத் தேவையானது அனைத்தும் இருப்பதால் எனக்கு வாழ்வில் முழு திருப்தியே,”என்றார்.
செல்வந்தர் சொன்னார்,”நண்பரே,நீங்கள் உண்மையிலேயே முழு திருப்தியுடன் இருந்தால் இந்தக் காலி மனையை அடைய ஏன் ஆசைப்படுகிறீர்கள்?
என்று கேட்டார் ” வந்தவர் தலை குனிந்து அங்கிருந்து சென்றார் .
பிரியமானவர்களே,
நாம் நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமல், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைப்போம்
வேதத்தில் பார்ப்போம்,
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்து போம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
1 யோவான்: 2 :17.
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
1 யோவான்: 2:16.
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
கலாத்தியர்: 5 :24.
பிரியமானவர்களே,
உலகத்தில் பிறந்த எந்த மனிதனுக்கும் ஆசைகள் உண்டு. உலகத்தில் ஆசையே இல்லை என்று சொல்லும் மனிதர்களை பார்க்க முடியாது.
ஆசை நோவுக்கு அவிழ்தம் ஏது! ஆசைக்கு அளவில்லை! என்பது தமிழ் பழமொழிகள்.
மனிதனின் ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்து- கிறதுமாயிருக்கிறது என பிரசங்கி கூறுகிறார்.
மனிதனின் ஆசைகள் அவனை பாவம் செய்ய தூண்டுகிறது. பாவத்தின் சம்பளம் மரணம். மனிதனின் அளவுக்கதிகமான ஆசைகள் விசுவாசத்தை விட்டு வழுவி பாவத்திற்கு உட்படுத்தி நித்திய அழிவுக்கு நேராய் வழிநடத்துகிறது.
இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்கள் அநேகர் மண்ணாசையில் மயங்கி சொத்துக்களுக்காக சொந்த சகோதரரோடு சண்டையிட்டு பகைத்துக் கொள்ளுவதும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதும் இயற்கையாகி போனது.
மண்ணாசையினால் ஆகாப் ராஜா தேவ கோபத்திற்கு உட்பட்டு தன் குமாரருக்கு பொல்லாப்பை வரப் பண்ணினான்.
பிரியமானவர்களே,
வேதம் கூறுகிறது “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; என்று
ஏனெனில் ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.தேவன் மட்டுமே நமக்கு நித்திய ஜீவனை அளிப்பவர்.
வேதம் கூறுகிறது போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம்.
நாம் உலகத்தின் மீது பற்றுக் கொண்டு வாழ்வதை விட்டு தேவனிடத்தில் உண்மையாய் அன்புகூர்ந்து அவரை பற்றி வாழ கற்றுக் கொள்ளுவோம்.
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.
ஆம், கர்த்தர் நமக்கென்று நன்மைகளை ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்ற நம்பிக்கையில் உலகத்தில் உள்ளவைகளை அல்ல. பரலோக நன்மைகளை நாடுவோம்.
கர்த்தர் தாமே இத்தகைய ஆசீர்வாதங்களை தந்து நம்மை வழிநடத்துவாராக.
ஆமென்