Daily Manna 23

சிறுமைப் பட்டவர்களுடைய நம்பிக்கை ஒரு போதும் கெட்டுப் போவதில்லை. சங்கீதம்:9:18

எனக்கு அன்பானவர்களே!

நம்மை எப்போதும் வெற்றி சிறக்கப் பண்ணுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்

இந்த உலகம் உபத்திரவங்களும் போராட்டங்களும் நிறைந்தவை. ஒவ்வொரு நாளும் பலவிதமான பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம்.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக கோலியாத் எழும்பிய போது ஜனங்கள் அனைவரும் பயந்து கலங்கினர். ஆனால் சிறுவனான தாவீது பயப்படவேயில்லை. அவனுக்குள்ளே, ‘கர்த்தர் நிச்சயம் எனக்காக யுத்தம் பண்ணுவார்’ என்ற நம்பிக்கை தோன்றியது.

எனவே தைரியமாக கோலியாத்தை எதிர்கொண்டான். வெற்றியும் பெற்றான்.
அதுபோல உங்களுக்கு விரோதமாக சத்துரு பலவிதமான போராட்டங்களைக் கொண்டு வரலாம். ஆனால் மனம் கலங்காதிருங்கள்.

உலகத்தையும் பிசாசையும் ஜெயித்த கர்த்தர் நமக்காக யுத்தம் பண்ணி நமக்கு ஜெயத்தைக் கொண்டு வருவார். கர்த்தர் தாவீதின் வாழ்வில் வெற்றியைக் கொடுக்க காரணம் என்ன தெரியுமா?

அவனுக்குள் இருந்த வைராக்கியம்
‘ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் ’.
1சாமுவேல்:17:26 என்றார்.
கோலியாத் ஒவ்வொரு நாளும் இஸ்ரவேல் ஜனங்களையும், இஸ்ரவேலின் தேவனையும் நிந்தித்து வந்தான்.

இதைக் கேட்ட அனைத்து ஜனங்களும் பயந்தனர். ஆனால் தாவீதுக்குள்ளே ஒரு வைராக்கியம் உண்டானது. ஜீவனுள்ள தேவனையும், அவருடைய பிள்ளைகளையும் நிந்திப்பதற்கு இவன் யார்? என கோபத்துடன், வைராக்கியத்துடன் எழுந்தான்.

இன்று ஆண்டவர் நமக்காக யுத்தம் பண்ண வேண்டுமானால் நமக்குள்ளே தேவனைக் குறித்த வைராக்கியம் தேவை. நாம் எந்த அளவுக்கு வைராக்கியம் காட்டுகிறோமோ, அந்த அளவுக்கு மேலாக ஆண்டவர் நமக்காக வைராக்கியம் காட்டி நமக்காக பெரிய காரியம் செய்வார்.

வறுமை, கடன் பிரச்சினை, வியாதி, போராட்டங்கள் வரும் போது அதைக் கண்டு பயந்து போகாமல், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் வைராக்கியம் காட்டுவோம். கர்த்தர் பெரிய காரியங்களை நிச்சயம் செய்வார்.

தாவீதுக்குள் காணப்பட்ட மற்றொரு குணாதிசயம் என்ன தெரியுமா? ஆண்டவர் பேரில் வைத்த நம்பிக்கையே. தனக்கு முன்பாக பெரிய கோலியாத் நின்றாலும், தேவன் தன்னை தப்புவிக்க வல்லவர் என்று தேவனை உறுதியாய் விசுவாசித்தான்.

தன்னையோ, தன்னுடைய திறமைகளையோ, தன்னைப் பின் தொடர்கிற மனுஷர்களையோ தாவீது நம்பவில்லை. தன் முழு நம்பிக்கையையும் தேவன் பேரில் வைத்ததால் தான் தேவன் ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

வேதத்தில் பார்ப்போம்,

எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது, என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.
சங்கீதம்:27:3

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
சங்கீதம்:37:5

‘பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்’.
1.சாமுவேல்:17:37)

எனக்கு அன்பானவர்களே,

உங்களுக்கு முன்பாக இருக்கிற பெரிய பெரிய பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். உங்களுக்குள் இருக்கிற பெரிய தேவனை நோக்கிப்பாருங்கள்.

நமது நம்பிக்கை அவர் மேல் இருக்கட்டும். நம்முடைய அசைக்க முடியாத உறுதியான விசுவாசத்தைக் கண்டு பிரச்சனைகளே நம்மை விட்டு ஓடிப்போகும் . நம் தேவன் நமக்கு பெரிய வெற்றியைக் கட்டளையிடுவார்.

‘நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும் கேடயத்தோடும் என்னிடத்தில் வருகிறாய், நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய ராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்’.
1சாமுவேல்:17:45

தாவீது தேவனின் நாமத்தில் உள்ள வல்லமையை அறிந்திருந்த படியினால் அவருடைய நாமத்தில் கோலியாத்தோடு யுத்தம் பண்ணினான். பட்டயம், ஈட்டி, கேடயம் போன்ற ஆயுதங்களுக்கெல்லாம் மேலானது நம் இயேசுவின் நாமம்.

எவ்வளவு போராட்டங்களையும், உபத்திரவங்களையும் சாத்தான் கொண்டு வந்தாலும் இயேசுவின் நாமத்தினாலே அவைகளை நாம் மேற்கொள்ள முடியும். இன்றும் கூட அநேக ஊழியர்கள் இயேசுவின் நாமத்தினாலே பிசாசை கடிந்து கொள்ள, அசுத்த ஆவிகள் அலறி ஓடுகிறது.

வியாதிகள் குணமாகிறதை நாம் காண முடிகிறது. ஆகவே எல்லா நாமத்துக்கும் மேலான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை கொண்டு நாம் ஜெபிக்கும் போது கர்த்தர் எல்லா போராட்டங்களினின்றும் நமக்கு வெற்றியையும், விடுதலையையும், கட்டளையிடுவார்.

கர்த்தரையே நம்பியிருங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்து, எல்லா காரியங்களிலேயும் வெற்றியைக் கட்டளையிடுவாராக.
ஆமென்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *