ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். மத்தேயு: 6 :34.
எனக்கு அன்பானவர்களே!
ஒவ்வொரு நாளும் அதியமாய் நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒருவர்
பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள மேல்அதிகாரிக்கு இவரை பிடிக்கவே பிடிக்காது, எனவே எப்போதுமே இவர் செய்யும் வேலையை குறை கூறிக் கொண்டே ஏதோ சொல்லி வேதனைப்படுத்திக் கொண்டே இருப்பார்.
இதன் காரணமாக வேதனையோடு இவர் கட்டடத்தின் வெளிப்புறத்தில் சென்றார். அங்கு வேதனையோடு இருக்கும் பொழுது ஒரு காட்சியை கண்டார்.
அது என்னவென்றால் அங்கு கான்கிரீட் தள ஓடுகளில் ஏற்பட்ட சிறிய பிளவில் மிக அழகிய மலர் வளர்ந்திருப்பதைப் பார்த்து அதிசயித்தார்.
அது வளருவதற்கு ஏற்ற சூழல் அங்கு இல்லாதிருந்த போதிலும் அந்தச் செடி தனக்கு ஒரு சிறிய பிடிமானம் கிடைத்ததைக் கொண்டு அந்த வறண்ட குறுகிய திறப்பில் எந்த விதமானப பிடியும் இல்லாமல் செழித்து வளர்ந்துள்ளதைப் பார்த்தார்.
இதைப் பார்த்ததும் அந்த மனிதருக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. இந்த செடியை பாதுகாக்கும் தேவன் என்னையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை பிறந்தது.
அந்த செடிக்கு மேல் பகுதியிலுள்ள குளிரூட்டியிலிருந்து (AC) நாள் முழுவதும் தண்ணீர் வழிந்து கொண்டிருந்ததை பின்னர் கவனித்தார்.
அந்தச் சுற்றுப்புறத்தில் வளருவதற்கு ஏற்ற சூழலில்லாத போதும், அந்த செடியானது தனக்குத் தேவையான உணவை மேலிருந்து வழிந்த நீரிலிருந்து பெற்றுக் கொண்டு மிகச் செழிப்புடன் நின்றது.
இந்த செடியை இயேசு கிறிஸ்து மத்தேயு: 6:38 -ல் கூறுகிறார். “காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்;அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறது மில்லை;
என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
சாலொமோனின் திட்ட அமைப்பாளர்களும், தொழில் வல்லுநர்களும் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருந்த போதிலும் இயற்கையான சுற்றுப்புறச் சூழலில் பொருத்தமாக அமையப் பெற்ற “காட்டுப் புஷ்பங்களின்” ஒத்திசைவுக்கு, வண்ண மாதிரிகளுக்கு, வர்ணங்களின் ஒருங்கிணைப்புக்கு அவர்களால் நிகராக செய்ய முடியவில்லை.
ஐசுவரியம் நிறைந்த அரசனாகிய சாலொமோனுங்கூட, இந்தக் காட்டுப் பூக்களைப் பார்க்கிலும் அதிக அழகாக உடுத்தியிருக்கவில்லை என்று பார்க்கிறோம்.
அவைகளை காட்டிலும் நாம் விசேஷமானவர்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
உடைக்காகவும் நீங்கள் கவலைப் படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறது மில்லை;
மத்தேயு :6 :28.
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.
மத்தேயு: 6 :34.
அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள்.
1 பேதுரு: 5 :7.
பிரியமானவர்களே,
கிறிஸ்தவ வாழ்வில் வளர்வது சில வேளைகளில் நமக்கு கடினமாகத் தோன்றலாம். ஆனால் நாம் தேவனோடு இணைத்துக் கொண்டோமேயாகில் தடைகளையெல்லாம் நம்மால் மேற்கொள்ள முடியும்.
நம்முடைய சூழ்நிலை, ஒருவேளை நமக்கு சாதகமற்ற சோர்வடையச் செய்யும் தடைகளாகத் தோன்றலாம். ஆனால் நாம் நம் தேவனோடுள்ள உறவில் வளரும் போது அந்த செடியைப் போன்று நாமும் செழித்திருக்கலாம்.
தேவனுடைய பிள்ளைகள் ஒருபோதும் அஞ்ஞானிகளை போல இருக்கக் கூடாது.
நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் தேவன் அறிந்து இருக்கிறார்.
அவரிடத்தில் நாம் கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியும்.
நாம் ஏன் உணவுக்காகவும் உடைக்காவும் கவலைப்பட வேண்டும்.
மத்தேயு: 6:26-ல் ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
மேலும்
மத்தேயு :6:30-ல் அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
தேவன் நம்மை எப்படி பிழைப்பூட்டுவார் என்ற கேள்வி நமக்கு இருக்கும் என்றால் இயேசு கிறிஸ்து காகங்களை கவனிக்கும்படி சொல்லுகிறார்.
காகங்கள் உணவுக்காக விதைப்பதும் அறுப்பதும் களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை, அவைகள் நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படுவதும் இல்லை. ஆனால் அந்த காகங்களையும் தேவன் போஷிக்கிறார்.
அடுப்பில் போடப்படும் புல்லை தேவன் அழகாக உடுத்தி வைத்து இருக்கும் போது, மாம்சத்தையும் ஜீவனையும் நமக்கு கொடுத்த தேவன் நமக்கு உண்ணவும், உடுக்கவும் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
ஆகவே நாம் நாளைக்காக கவலைப்படாமல், எல்லாவற்றையும் என் தேவன் பார்த்துக் கொள்வார் என்ற விசுவாசத்தோடு ஒவ்வொரு நாளையும் மனமகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழுவோம்.
இத்தகைய மனநிறைவுள்ள வாழ்க்கை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் யாவருக்கும் அருள் புரிவாராக
ஆமென்