Daily Manna 243

உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக. சங்கீதம் :70 :4

எனக்கு அன்பானவர்களே!

மனமகிழ்ச்சியை தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு தொழிற்சாலை ஒன்றை நிறுவினார், ஒரு சில வருடங்களில் பெரிய செல்வந்தனாகி விட்டார். ஆனால் அவருடைய உள்ளத்தில் சந்தோஷமில்லை.

எப்பொழுதும் பதட்டமும், தன்னை மற்றவர்கள் ஏமாற்றி விடுவார்களோ என்கிற பயமும் அவரை வாட்டி வதைத்தன. தொழிற்சாலையின் நெருக்கடிகள் அவருடைய இருதயத்தில் சமாதானத்தை இழக்கச் செய்தன.

ஒரு நாள் அவர் ஒரு தேவனுடைய ஊழியரோடு தனிமையிலே சற்று நேரத்தை செலவழிக்க விரும்பினார். அந்த ஊழியரைப் பார்த்து, “ஐயா, கிறிஸ்தவர்களுடைய முகமெல்லாம் சந்தோஷமாய் இருக்கிறதைக் கண்டிருக்கிறேன்.

அந்த சந்தோஷத்தின் வழி என்ன என்று எனக்குச் சொல்லித் தருவதுடன் அந்த சந்தோஷத்திற்குள் என்னை வழி நடத்துவீர்களா?” என்று கேட்டார்.

அந்த ஊழியர் அவரை அன்போடு கல்வாரி சிலுவையண்டை வழி நடத்தினார். மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் குறித்துப் பேசினார்.

அந்த செல்வந்தன் தன்னைத் தாழ்த்தி ஒப்புக் கொடுத்து, தன்னுடைய அனைத்து பாவங்களையும் அறிக்கை செய்த போது, அவருடைய உள்ளத்தில் பெரிய சந்தோஷம் வந்து விட்டது.

சந்தோஷத்தில், மிகப் பெரிய சந்தோஷமும் இரட்சிப்பினாலே உண்டாகும் சந்தோஷமேயாகும். ஒருவன் இரட்சிக்கப்படும் போது, முதலாவது அவனுக்கு பெரிய சந்தோஷம் வருகிறது.

தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டதினால் மனசாட்சி மிருதுவாகிறது. பாவ பார சுமை விலகி விடுவதினால் சந்தோஷம் உண்டாகிறது. இரட்சிப்பின் அதிபதியாகிய இயேசு கிறிஸ்து உள்ளே வந்து வாசம் செய்வதினால் அவனுக்கு இன்னும் அதிகமான சந்தோஷம் உண்டாகிறது.

அப்போது அவர் அங்கேயிருந்த பல பூக்களைப் பார்த்தார். ‘எவ்வளவு அழகான பூக்கள்’ என்று சந்தோஷப்பட்டு களிகூர்ந்தார். ஆறுகளைப் பார்த்தார். ‘என் ஆண்டவர் எனக்காக உண்டாக்கின ஆறுகள் அல்லவா’ என்று சொல்லி களிகூர்ந்தார்.

மலைகளைப் பார்த்து, ‘மலைகள் இவ்வளவு அழகாய் இருந்தால் அதை உருவாக்கிய என் தேவன் எவ்வளவு அழகாய் இருப்பார்’ என்று சொல்லி களிகூர்ந்தார். ஏற்கெனவே அங்கே பூக்கள், ஆறுகள், மலைகள் இருந்தது உண்மை தான்.

ஆனால் அதைப் பார்த்து அவர் களிகூர்ந்ததில்லை. இரட்சிக்கப்பட்ட பின்போ எதைப் பார்த்தாலும் அவருக்கு களிகூருதலும், மகிழ்ச்சியும் உண்டாயின. காரணம், இயேசு உள்ளத்தில் வாசம் செய்கிறதினாலே வருகிற சந்தோஷம்.

வேதத்தில் பார்ப்போம்,

உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
சங்கீதம்: 40 :16.

நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய .
லூக்கா: 6 :23.

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
பிலிப்பியர் :4:4

பிரியமானவர்களே

இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் உலக சந்தோஷத்திற்கும், இவ்வுலகில் ஆண்டவர் நமக்கு கொடுக்கும் சந்தோஷத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.

அது என்னவென்றால், ஆண்டவர் கொடுக்கும் சந்தோஷம் நிரந்தரமானது. உலகம் கொடுக்கும் சந்தோஷம் நிரந்தரமற்றது. அது மாத்திரமல்ல ஆரம்பம் ஆரவாரமாக இருந்தாலும் அதன் முடிவு சஞ்சலமாக இருக்கும்.

உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்வில் தேவனுடைய பரிபூரண சந்தோஷத்தை பெற்று அனுபவிப்பது தான் தேவனுடைய சித்தம் என்பதை மறந்து போகாதீர்கள்

நம்மில் இருக்க வேண்டிய சந்தோஷம் கிறிஸ்து தரும் சந்தோஷம் மட்டுமே. அது உலக பிரகாரமான காரியங்களில் முயன்று கிடைக்கும் அற்ப சந்தோஷமல்ல.

கிறிஸ்துவில் நிலைத்திருப்பதினால் நம்மில் உருவாகும் நிலையான சந்தோஷம். ஏனெனில் அது கிறிஸ்துவின் சந்தோஷம்; வேறு எங்கும் அது கிடைப்பதில்லை.

அது நமது பக்தி முயற்சிகளினாலும் நமக்குக் கிடைத்து விடுவதில்லை. இந்த சந்தோஷம் ஒரு கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம். அது ஆவியின் கனி மட்டுமல்ல; அவர் தரும் ஈவு.

சந்தோஷம் என்பதற்கான கிரேக்க மூல வார்த்தை ’chara’ என்பது அந்த மொழியில் கிருபை என்னும் வார்த்தைக்கான ’charis’ என்னும் வார்த்தையை ஒட்டியே வருகிறது.

அன்பானவர்களே,
நீங்கள் இரட்சிக்கப்பட்டால் சந்தோஷப்படுவதற்கு இன்னும் அதிகமான காரியங்கள் உண்டு. உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படுகின்றன.

நீங்கள் தேவனை “அப்பா, பிதாவே” என்று அழைக்கக்கூடிய புத்திர சுவிகார ஆவியைப் பெறுகிறீர்கள். கிறிஸ்துவின் அன்பின் குடும்பத்திற்குள் அவருடைய எல்லா சுதந்திரங்களையும் பெற்றுக் கொள்ள உரிமையாளராகி விடுகிறீர்கள்.

“கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக் களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்” என்ற வாக்குத்தத்தம் நம் வாழ்விலும் நிறைவேறும்.

இப்படிப்பட்ட மனமகிழ்ச்சியான வாழ்வை இம்மையிலும் மறுமையிலும் பெற்று கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *