இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள். மத்தேயு:5:7
எனக்கு அன்பானவர்களே!
இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு போதகரிடம் ஒரு வாலிபன் வந்து, “ஐயா, நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். யாரும் எனக்கு எந்த உதவியும் செய்வதில்லை.
யாரும் என்னிடத்தில் அன்பு பாராட்டவில்லை. யாரும் என்னை கைத்தாங்கி உயர்த்தி விட முன் வரவில்லை” என்று துக்கத்தோடு சொன்னான்.
அந்த போதகர் அவன் மேல் மிகவும் இரக்கம் பாராட்டி, “தம்பி, உன்னை யாரும் நேசிப்பதில்லை, எல்லாரும் உன்னை உதாசீனப்படுத்தி விட்டார்கள் என்று சொன்னாய்.
சரி,நீ யார் யாருக்கெல்லாம் என்னென்ன இரக்கம் செய்தாய். அதை எனக்குக் கொஞ்சம் விவரிப்பாயா?” என்று கேட்டார். அதற்கு அவனால் எந்த பதிலும் சொல்ல முடியாமல்
தலைக்குனிந்து இருந்தான்.
பாருங்கள்,
நம்மில் அநேகம் பேர் இப்படித் தான் இருக்கிறோம்.
யாருக்கும் இரக்கம் பாராட்ட முன் வருவதில்லை. யாருக்கும் உதவி செய்யவும், அன்பு பாராட்டவும் முன் வருவதில்லை.
ஆனால் பிறர் மீது மட்டும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள் என் மீது யாரும் அன்பு காட்டவில்லை.அது செய்யவில்லை. இது செய்யவில்லை என்று குறை கூறிக் கொண்டே இருப்பார்கள்.
வேதம் கூறுகின்றது விதைக்காத இடத்தில் ஒரு நாளும் அறுவடை செய்ய முடியாது என்று.
ஆம் இரக்கமுள்ளவனுக்கு
தான் இரக்கம் கிடைக்கும். மற்றவர்கள் தான் எனக்கு இரக்கம் பாராட்ட வேண்டுமென்று சொல்லி, ஏதாவது ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருப்பீர்களேயானால் ஒரு நாளும் உங்களுக்கு இரக்கம் கிடைப்பதில்லை.
நீங்கள் இரக்கமுள்ளவர்களாயிருந்தால், மனிதரிடமிருந்தும், ஆண்டவரிடமிருந்தும் நிச்சயமாகவே இரக்கம் பெறுவீர்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
ஏனென்றால், இரக்கஞ் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும். நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும்.
யாக்கோபு:2:13.
அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கு முள்ளது.
லூக்கா: 1:50.
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும், அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள், நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
லூக்கா :6:38
பிரியமானவர்களே,
நம்முடைய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் பாவத்தில் மரித்து போயிருந்த நம்மை தம்முடைய சொந்த இரத்தத்தினால் மீட்டு தம்முடைய சொந்த பிள்ளைகளாய் நம்மை மாற்றினார்.
இதை உணர்ந்தவர்களாய் நாமும் பிறருக்கு இரக்கம் காண்பிக்க வேண்டும். தேவன் நம் பாவத்தை மன்னித்தார்.அதே போல நாமும் நம் சத்துருக்களையும் பகைஞரையும் மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
தேவன் நமக்கு பாராட்டின இரக்கத்தை நாமும் காண்பிப்போம். நாம் அநேக நேரங்களில் பிறர் நமக்கு செய்த தீமையை மனதில் வைத்துக் கொண்டே வாயினால் மன்னிப்பு என்று சொல்லுகிறோம்.
கிறிஸ்துவின் அன்பை உணர்ந்தவர்களாய் இரக்கம் காண்பிப்போம். அது மட்டுமல்லாமல் ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். நாம் மற்றவர்களுக்கு இரங்கும் போது தேவன் நமக்கும் இரக்கம் காண்பிக்கிறார்.
நீங்கள் இரக்கமுள்ளவர்களாயிராவிட்டால் நியாயத்தீர்ப்பின் நாளிலே உங்களுடைய நிலைமை மிகவும் பரிதாபமாயிருக்கும். வேதம் சொல்லுகிறது: “இரக்கஞ் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத் தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத் தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும்.
அதனால் தான் குற்றம் செய்த நம் சகோதரனை ஒரு தடவை அல்ல ஏழெழுபது மட்டும் மன்னிக்க வேண்டுமென்று கர்த்தர் ஆலோசனைக் கொடுக்கிறார்
மத்தேயு:18:22.
எனக்கு அருமையானவர்களே
கசப்பையும்,
வைராக்கியதையும் உங்களை விட்டு எடுத்துப் போட்டு விடுங்கள்.
மனப்பூர்வமாய் மன்னித்து மறந்து விடுங்கள்.
“தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்து கொள்ளுகிறான்;
நாம் மற்றவர்களுக்கு செய்யும் நன்மைகள் நமக்கும், நம் சந்ததிகளுக்கும் பல நன்மையான ஆசீர்வாதத்தை நிச்சயம் கொண்டு வரும்.
கர்த்தரிடத்தில் இருந்து நமக்கு இரக்கம் கிடைக்கும்படிக்கு , நாமும் மற்றவர்களிடத்தில் இரக்கமுள்ளவர்களாய் ஜீவிப்போம்.
கர்த்தர் தாமே இத்தகைய நல்ல குணத்தை நம் யாவருக்கும் தந்து வழிநடத்துவாராக.
ஆமென்.