இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான்: 14 :6.
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு போதகர் இவ்வாறாக கூறுகின்றார். அருமையான ஒரு மகனை அறிவேன். அவர் பக்தி நிறைந்த மகனாகவும், திடகாத்திரமான சரீரத்தோடும், பார்ப்பதற்கு அழகிய தோற்றத்தோடும் இருப்பார்.
அவர் நலமான படிப்பைப் படித்து நல்ல ஒரு அரசாங்க உத்தியோகத்தில் பணியாற்றுகிறவராய் இருந்தார். கை நிறைய சம்பளம். நிம்மதியான வாழ்க்கை.
ஆனால் அவர் தன்னுடைய வாழ்க்கையில் உலக சிற்றின்பத்திற்கும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாய் மாறினார்.
எத்தனையோ பேர் நல்ல வழிகளை காண்பித்தும், அவைகளில் நடவாமல் தன் இஷ்டப்படி வாழ்ந்தார்.
திருமணம் ஆகியும் குழந்தை இல்லாத ஒரு வேதனையான வாழ்க்கை.
அவருடைய வாழ்க்கையானது ஓய்வு பெறுவதற்கு முன்னதாக முடிந்து போனது. அவருடைய குடும்பமானது ஒன்றுமில்லாததாய் மாறியது. அவருடைய மனைவியானவள் பரிதபிக்கப்பட்டவளாக மாறினாள்.
எனக்கு அருமையானவர்களே
இன்றைக்கும் அநேகர் தேவன் கிருபையாய் தந்த வாழ்க்கையை வீணடித்துப் போடுகிறார்கள்.
அவர்கள் கடந்து வந்த பாதையில் எல்லாம் கர்த்தரின் கரம் கூடவே இருந்து, அவர்களை இந்த உயர்வான இடத்தில் கொண்டு வைத்த ஆண்டவரை எண்ணிப் பார்க்காமல் போகிறார்கள்.
அவர்கள் தவறான பாதையிலே செல்வதற்குத் தங்கள் சரீரத்தையும், உள்ளத்தையும், எண்ணத்தையும் செலவழித்து , தேவ ஆசீர்வாதத்தை இழந்து, சாபத்தின் மக்களாய் மாறுகிறதைப் பார்க்கிறோம்.
இயேசு கிறிஸ்து நமக்கு வழியாயிருக்கிறார். அவர் வழியில் நாம் நடக்கும் போது மெய்யான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நமக்கு சகலவிதமான கிருபைகளையும்,
சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறார்.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
சங்கீதம் :25 :4.
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
யோபு: 34 :21.
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
புலம்பல் :3 :40.
பிரியமானவர்களே,
இரண்டு விதமான வழிகளைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறினார். ஒன்று கேட்டுக்குச் செல்கிற வழி விசாலமாயிருக்கிறது. ஆனால் கர்த்தருடைய வழியிலே நடப்பது என்று சொன்னால் அது இடுக்கமான வாசல்.
அந்த இடுக்கமான வாசல் வழியாய் நாம் பிரவேசிக்க பிரயாசப்பட வேண்டும். ஏனென்றால்,நானே வழி என்று சொன்ன இயேசுவின் வழியானது ஜீவனுக்குப் போகிற ஒரு வாசலாய் இருக்கிறது.
அது இடுக்கமும் அந்த வழியானது நெருக்கமுமாய் இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் என்று மத்தேயு 7:14ல் பார்க்கிறோம்.
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள் என்று இயேசு கிறிஸ்து தெளிவாய்ப் போதித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் கேட்டுக்குப் போகிற வழியோ விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது.
அதின் வழியாய்ப் பிரவேசிப்பவர்கள் அநேகர் என்று மத்தேயு 7:13ல் பார்க்க முடிகிறது.
இயேசு கிறிஸ்து காட்டுகிற வழியாய் யாரெல்லாம் நடக்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கைப் போராட்டத்தைப் போல காணப்படலாம்.
ஆனால் அந்த வழியிலே நடக்கிற ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அதிசயமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கும்.
ஆகவே உலகம் காட்டுகிற வழியில் நடவாது, நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்து காட்டும் வழியில் சென்று, பரலோக வாழ்வை சுதந்தரித்துக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.