Daily Manna 268

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை. அது என் மேல் விழுந்த கடமையாயிருக்கிறது 1 கொரி :9:16

எனக்கு அன்பானவர்களே!

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பிரேசில் நாட்டில் அன்டோனியோ கார்லோஸ் சில்வா என்ற மனிதன் மாடோ கிராசோ என்ற ஊருக்கு அவசரமாகப் போக எண்ணி ஒரு வாகனமும் கிடைக்காமல் காத்திருந்தார்.
கடைசியில் ஒரு லாரியை நிறுத்தி அதில் ஏறினார்.

அந்த லாரி ஓட்டுனர் ஒரு கிறிஸ்தவர். எப்படியெப்படியோ அன்டோனியோவைப் பேச்சுக்கிழுத்தும் அன்டோனியோ பேசாமல் கடைசி வரை மெளனமாகவே வந்தார்.

தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டார். அப்பொழுது அந்த லாரி ஓட்டுனர் ஒரு நிமிடம் அவரை நிற்கச் சொல்லி தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறு புதிய ஏற்பாட்டை எடுத்து “தயவு செய்து உமக்கு சமயம் வாய்க்கும் போது இதை வாசியும்” என்று சொல்லிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.

அன்டோனியாவும் வேண்டா வெறுப்பாய் அந்தப் புதிய ஏற்பாட்டை வாங்கித் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தன் அலுவலைப் பற்றிய ஆலோசனையிலேயே அமிழ்ந்து நடந்தார்.

அநேக மாதங்கள் கழித்து ஒரு நாள் அந்த லாரி ஓட்டுனர் ஆலயத்துக்கு போன பொழுது அங்கே அன்டோனியாவை பார்த்தார். கிட்ட போய் “எனக்கு உம்மைத் தெரியுமென்று நினைக்கிறேன்” என்றார்.

அதற்கு அன்டோனியோ: “தெரியுமாவா? அன்றொரு நாள் உமது லாரியில் மாடோ கிராசோ என்ற ஊருக்கு பிரயாணம் பண்ணினதை மறக்க முடியுமா? அப்பொழுது நீர் எனக்கு ஒரு புதிய ஏற்பாட்டைக் கொடுத்தீரே.

அன்று நான் ஒரு மனிதனை கொலை செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்தேன்.
ஆகையால் உம்மிடம் ஒன்றும் பேசவில்லை . உம்மை விட்டு சிறிது தூரம் சென்றவுடன் யாரோ என் சட்டையைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது;

பார்த்தால் ஒருவரையுங் காணோம். அவ்விடத்திலேயே உட்கார்ந்தேன். சற்று நேரம் கழித்து நீர் கொடுத்த அந்த புதிய ஏற்பாட்டை எடுத்து வாசிக்கத் துவங்கினேன்;

வாசித்து வாசித்துக் கடைசியில் அந்த மனிதனை நான் கொல்லக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இப்பொழுது நான் ஒரு மனந்திரும்பிய கிறிஸ்தவனாக இருக்கிறேன்” என்று புன்முறுவலோடு கூறினார்.

அன்று சவுலை பவுலாக மாற்றிய ஆண்டவர் இன்று நம் வாழ்வையும் மாற்ற நம்மோடு கூட இருக்கிறார்.

வேதத்தில் பார்ப்போம்,

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்.
ஏசாயா: 61:1.

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன், முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிற வனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
ரோமர்:1:16

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
1 கொரிந்தி:9:16

பிரியமானவர்களே,

சுவிசேஷமே ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மெய்யான நம்பிக்கையைக் கொடுக்கிறதாய் இருக்கிறது.

சுவிசேஷம் என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு கொடுக்கப்படுகிற இரட்சிப்பின் நம்பிக்கை. ஒரு பாவியான மனிதனை பரிசுத்தமாக மாற்றும் என்கிற நம்பிக்கை.

இந்த அநீதியான உலகத்தில் தேவனுக்கென்று வாழும்படியான ஒரு வாழ்க்கையின் மாற்றத்தைக் கொடுக்கிறது சுவிசேஷம் தான்.

அந்த லாரி ஓட்டுனர் கொடுத்த ஒரு புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தால் இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

ஒன்று அன்டோனியோ கொலை செய்யப் போன அந்த மனிதன்;
இரண்டாவது அன்டோனியோ.

அவர் பாவ பாதக செயலை செய்ய விடாமல், தடுத்து இயேசு கிறிஸ்துவில் நித்திய வாழ்வை சுதந்தரித்துக் கொள்ள செய்தது சுவிசேஷம்.

கர்த்தருடைய வார்த்தை வெறுமனே ஒருநாளும் திரும்பி வராது. அதைக் கேட்கிறவர்களுடைய இருதயத்தில் அது கிரியை செய்யும்.

கர்த்தருடைய நற்செய்தியைக் கூற வேண்டியது நமது கடமை; கிரியை செய்யும் செயலை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.

நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப் பாய்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச் செய்கிற தேவனாலே எல்லாமாகும்.

நம்முடைய வாழ்வில் ஒருவருக்காவது தேவனுடைய சுவிசேஷத்தை சொல்லி, பாவ வழியை விட்டு மனந்திரும்ப நம்மாலான முயற்சிகளை செய்து தேவ வசனத்தில் உறுதிப்படுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *