அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத் தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு. மாற்கு :5 :36.
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு அன்பான போதகர் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருக்கையிலே ஒரு பெண் ஓடி வந்து, தன் குழந்தை உடல் நலமின்றி இருப்பதாகவும் நீங்கள் வந்து என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.
அப்போது போதகர் அவளது வீட்டிற்கு வந்து குழந்தையைக் குணப்படுத்த ஆண்டவரை நோக்கி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
உடனே அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது.ஒருவன் ஓடி வந்து போதகரிடம் கேட்டான்,’மருந்தால் குணமாகாத குழந்தை உன் பிரார்த்தனையால் குணமாகி விடுமா? என்று கேட்டான்.
‘போதகர் அவனிடம்,”உனக்கு ஒன்றும் தெரியாது. நீ ஒரு பக்தியற்றவன்.” என்றார். அவன் அந்த ஊரில் ஒரு பெரிய மனிதர் என்று பெயர் பெற்றவர். எல்லோருக்கும் முன்னால் போதகர் தன்னை இப்படி சொன்னவுடன் அவனுக்கு அவமானமாகப் போய் விட்டது.
அவன் கோபத்துடன் திட்டிக் கொண்டே அவரை அடிக்கப் போனான். போதகர் பொறுமையுடன் அவனை நோக்கி வந்து,”அப்பா,நான் சொன்ன சொல் உனக்கு இத்தனை கோபத்தை வரவழைக்க முடியும் என்றால்,ஏன்? என் பிரார்த்தனை இக்குழந்தையைக் காப்பாற்றக் முடியாது?”என்று கேட்டார்.அவன் வெட்க முகத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான்.
பிரியமானவர்களே,
வேதத்திலும் இதைப் போன்ற ஒரு காட்சியை நாம் காண முடியும். ஜெப ஆலயத் தலைவனுடைய மகள் மரித்த நிலையில் இருந்த போது இயேசு கிறிஸ்து அவ்வீட்டிலே வந்து அங்கு அழுது புலம்பிக் கொண்டிருந்த மக்களைப் பார்த்து நீங்கள் சந்தடி பண்ணி அழுகிறதென்ன?
மாற்று 5: 38-&40 பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். பரிகாசம் பண்ணினார்கள் என்று பார்க்கிறோம்.
இது யவீருக்கும் மட்டுமல்ல, இன்றும் நம்மை சுற்றிலும் ஒரு கூட்ட மக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
நம் மீது பரிதாபம் கொள்ளவும், கேள்வி எழுப்பவும், ஆராய்ச்சி செய்யவும், நம்முடைய விசுவாசத்தில் தளர்ச்சி ஏற்படும் வண்ணம் அவர்களுடைய வார்த்தைகளும், செயல்களும் இருக்குமானால், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்டவரை மட்டுமே நோக்கி பாருங்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
ஏசாயா :41 :13.
இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
லூக்கா :8:50.
நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.
புலம்பல் :3 :57.
பிரியமானவர்களே,
யவீரு என்பவன் ஜெப ஆலயத் தலைவர்களில் ஒருவன். வியாதியினால் மரண அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த தன் மகள் மீது இயேசு வந்து கைகளை வைக்க வேண்டுமென்று இயேசுவிடம் அவன் வேண்டிக் கொண்டான்.
இயேசுவும் புறப்பட்டுப் போனார். வழியில் சிறு தடங்கல் ஏற்பட்டு நின்ற அந்த வேளையிலே, அவள் மரித்து விட்டாள் என்ற செய்தி வந்தது. தடுமாறி விட்ட அவனைப் பார்த்து, இயேசு “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” என்று திடப்படுத்தி, அவனுடைய வீட்டிற்குச் சென்று, சிறு பெண்ணை உயிரோடே எழுப்பி விட்டார்.
இந்த யவீருவைப் போல, நம்மில் பலரும் ஜெபக் கூட்டங்களை நடத்துபவராக, ஆலயக் காரியங்களில் பங்கெடுக்கிறவர்களாக, போதகர்களாக, ஊழியராக இருக்கலாம். ஆனால், நமது பிள்ளைகளோ, கணவனோ, மனைவியோ, சகோதரரோ வியாதிப்பட்டால் நாம் உண்மையாகவே கலங்கிப் போகிறோம்.
வியாதி மாத்திரமல்ல, நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலை ஒன்று உருவாகி விட்டதை உணர்ந்தாலே தடுமாறி விடுகிறோம். நாம் ஜெபிக்கிறோம், இயேசு ஏதாவது செய்வார் என்று நம்புகிறோம்.
ஆனால், நிலைமை மோசமடைவதைப் பார்க்க நேர்ந்தால், யவீருவைப் போல நம்பிக்கையிழந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுப் போகிறோம்.
இப்படிப்பட்ட நிலையில் இன்று யாராவது இருந்தால் கர்த்தர் இன்று உங்களுடன் தான் இடைபடுகிறார். யவீரு இயேசுவை அணுகிய போது, மகள் மரிக்கவில்லை; வழியில் தாமதமாகி நின்ற வேளையில் அவள் மரித்துப் போனாள் என்று கேள்விப்படும் போது, சாதாரணமாக நாமும் என்ன சொல்லுவோம்?
“நான் கூப்பிட்ட நேரமே வந்திருந்தால் இப்படி நடந்திராதே” என்று சொல்ல மாட்டோமா! வியாதி தாக்கும் போது மாத்திரமல்ல, வாழ்வில் நிலை குலைந்து செல்லுகின்ற, நமக்கு அருமையானவர்கள் விஷயத்திலும் நாம் இப்படித் தான் சோர்ந்து போகிறோம்.
நாம் ஜெபித்துக் கொண்டிருக்கும் போதே, நமது கண்களுக்கு முன்பாக நமது பிள்ளைகள் தேவனை விட்டு அதிகமாக விலகிப் போவதைக் காண நேர்ந்தால் நாம் எவ்வளவாகத் தவிக்கிறோம்.
ஆனால், சோர்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை. மரணச் செய்தி வந்த பின்பும், “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” என்று சொன்ன நமது அருமை ஆண்டவர் நமக்கும் அதையே தான் கூறுகிறார்.
நாம் ஜெபிக்கிறோம் என்பதற்காக நாம் நினைத்தபடி நினைத்த நேரத்தில் பதில் வரவேண்டும் என்று இல்லை! நமது ஆண்டவர் முந்துகிறவரும் அல்ல, பிந்துகிறவரும் அல்ல. சரியான நேரத்தில் நமக்கு ஆச்சரியமான பதில் தருபவர்.
வியாதிப்பட்டவள் சுகமடைந்தாள் என்பதா? மரித்தவள் எழுந்தாள் என்பதா? எது தேவனுக்கு அதிக மகிமை கொண்டு வரும்?
ஆம், நம் ஜெபம் ஒரு வேளை காலத்தாமதம் ஆகலாம். அதற்காக என் ஜெபம் எல்லாம் வீண் என்ற நோக்கில் இருக்க கூடாது. கர்த்தருடைய நாமத்திற்கு மகிமைக்கானவை என் வாழ்வில் நடக்கும் என்ற நம்பிக்கை உறுதியில் முன்னேறிச் செல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
இந்த நம்பிக்கை உறுதியில் நாமும் ஒவ்வொரு நாளும் முன்னேறிச் சென்று பரம கானானை கண்டடைய இறைமகன் இயேசு கிறிஸ்து தாமே நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.