கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும், கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். சங்:140:1
அன்பானவர்களே!
ஒரு மரத்தில் இரு அணில்கள் இங்கும் அங்கும் தாவி குதித்து சந்தோஷத்துடன் விளையாடிக் கொண்டிருந்தன.
அப்போது ஒரு அணில் மரக்கிளையிலிருந்து தவறி மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த ஒரு ஓநாயின் மீது விழுந்து விட்டது.
அணில் மேலே விழுந்ததும் விழித்தெழுந்த ஓநாய் அதைப் பிடித்துக் கொண்டது.
ஓநாய் தன்னைக் கொன்றுவிடும் என பயந்த அணில் ‘என்னை விட்டுவிடு ‘ என கெஞ்சியது.
அதற்கு ‘ நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொன்னால் உன்னை விட்டுவிடுகிறேன்’ என்றது ஓநாய்.
‘சரி’ என்று சொன்னது அணில்
‘அணில்களாகிய நீங்கள் எப்போதும் சந்தோஷத்துடன் இருக்கிறீர்கள் ,ஆனால் வலிமை மிகுந்த நாங்கள் எப்போதுமே சோகத்துடன் இருக்கிறோமே?’ஏன்” என்று கேட்டது ஓநாய்.
‘என்னை விடுவித்து மரத்தின் மீது ஏற அனுமதித்தால் உங்களின் கேள்விக்கு பதில் சொல்கிறேன்’ என்றது அணில்.
ஓநாயும் அணிலை விட்டு விட்டது. உடனே தாவிக்குதித்து மரமேறிய அணில் ‘நீங்கள் எப்போதும் என்னைப் போன்றவற்றிற்கு கொடுமையையே செய்கிறீர்கள்.
நீங்கள் செய்யும் கொடுமை செயல் உங்களை அரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் நீங்கள் எப்போதுமே சோகத்துடன் இருக்கிறீர்கள்.
ஆனால் நாங்கள் உணவுக்காக யாரையும் அழிப்பதில்லை.
மரங்களில் விளையும் கனிகளை மட்டுமே உண்கிறோம்.அதனால் நாங்கள் எப்போதுமே சந்தோஷமாக இருக்கிறோம் என்றது.
பிறருக்கு துன்பம் செய்யும் எவரும் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதை ஓநாய் உணர்ந்தது.
வேதத்தில் பார்ப்போம்,
கொடுமையுள்ளவன் மேல் பொறாமை கொள்ளாதே: அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
நீதி: 3:31
கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
நீதி: 16:29
எனக்கு அருமையானவர்களே!
இந்த உலகத்தை ஆண்டவர் படைத்த போது எல்லாவற்றையும் பார்த்தார். அவை நன்றாயிருந்தது. தீமை எதுவுமில்லை. எந்த எதிர்மறையான எண்ணங்களோ, உணர்ச்சிகளோ, செயல்பாடுகளோ எந்த உயிரினத்தினிடத்திலும் இல்லை.
இயற்கையும் மனிதனும் ஒன்றி வாழ்ந்தார்கள். இயற்கையால் மனிதனுக்கு சேதமில்லை, மனிதனால் இயற்கைக்கு சேதமில்லை. போட்டி இல்லை, பொறாமை இல்லை. யார் வாழ்வதற்காகவும் யாரையும் பட்சிக்கவில்லை. யாரும் எதற்கும் பயப்படவில்லை.
*அன்பு நிறைந்திருந்தது.*
இது தான் தேவனுடைய ராஜ்யம். தேவனுடைய ஆளுகை பூரணமாய் இந்த உலகத்தில் இருந்த காலம்.
ஆனால் *இந்த தேவனுடைய ராஜ்யம், மனிதனுடைய பாவத்தால் இந்த உலகில் இருந்து எல்லாம் அகன்று போனது. அதன் விளைவே இன்று நாம் பார்க்கின்ற தீமைகள்.*
இயற்கை மனிதனுக்கு எதிராக உள்ளது.
மிருகங்கள் மனிதனுக்கு எதிராக உள்ளது. ஒருவரை ஒருவர் பட்சித்துதான் வாழ வேண்டும் என்ற நிலைமை. மான் இறந்தால் தான் சிங்கம் வாழ முடியும். இதே போல மனிதனுக்கு மனிதன் எழும்பி ஒருவருக்கொருவர் தீங்கு செய்கின்றனர்.
எதிர்மறை எண்ணங்களால் கடவுளுக்கு விரோதமாக வாழ்ந்து ஆண்டவருடைய ராஜ்யமாய் இருந்த இந்த உலகத்தை பிசாசின் ராஜ்யத்தை நாட்டிக் கொண்டிருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் தீமை, கொடுமை, அக்கிரமம், அநியாயம் நிறைந்திருக்கிறது.
“என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” என்ற ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நிஜமாகும்.
கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலமாய் உங்களை ஆசீர்வதித்து, அவருடைய ராஜ்ஜியத்தின் பிள்ளைகளாய் வாழ உதவி செய்வாராக.
ஆமென்.