Daily Manna 280

நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்த படியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான். லூக்கா:19:17.

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு வாலிபன் ஒருநாள் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்படி அவன் போகும் போது, நிறைய நட்சத்திர மீன்கள் கரையோரத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதை கண்டான்.

அவைகள் துடிதுடித்துக் கொண்டு இருந்தன. அவன் அவைகள் மேல் பரிதாபம் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து கடலில் தூக்கி போட ஆரம்பித்தான்.
ஏனெனில் அவைகள் மணலில் கிடந்தால், வெயில் பட்டு மரித்து விடுமே என்று எண்ணினவனாக, ஒவ்வொன்றாக எடுத்து கடலில் தூக்கி போட ஆரம்பித்தான்.

அதை கவனித்த ஒருவர், அவனை நோக்கி, ‘என்ன செய்கிறாய்’ என்று கேட்டார். அப்போது அந்த வாலிபன், ‘இந்த மீன்கள் இந்த வெயிலில் மரித்து போகாத வண்ணம் அவற்றை எடுத்து கடலில் போடுகிறேன்’ என்று கூறினான்.

அப்போது அவர், நீ செய்வதில் ‘என்ன பிரயோஜனம், நீ என்ன வித்தியாசத்தை காணப் போகிறாய்? இதோ இந்த கடற்கரையில் எண்ணற்ற மீன்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது பார்த்தாயா?’ என்று கேட்டார்.

அப்போது அந்த வாலிபன், ‘ இந்த ஒரு மீனுக்கு அது ஒரு பெரிய காரியமல்லவா? அதனுடைய உயிர் பிழைத்ததே’ என்று கூறினான்.

இன்றும் நன்மை செய்கிறவர்களை பார்த்து ஏளனம் செய்பவர்கள் ஏராளம் ஏராளம்.

பாருங்கள், கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பது, கொஞ்சத்தில் நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்பதே.

கொஞ்சத்தில் நாம் உண்மையாய் இருந்தால், அதற்கு அவர் தரும் பலன் மிகவும் பெரியதாகும். அதற்கு நாம் கொஞ்சம் மாத்திரம் உண்மையிருந்தால் போதும் என்று அர்த்தமில்லை.

நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் கொஞ்ச காரியத்தில் நாம் கர்த்தருக்கு உண்மையாயிருந்தால், நிச்சயம் அவர் நம்மை அநேகத்திற்கு அதிபதியாய் மாற்றுவார் என்பதே அதன் அர்த்தமாகும்.

வேதத்தில் பார்ப்போம்,

அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
மத்தேயு :25:23.

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
லூக்கா:16 :10.

எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்த படியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
லூக்கா :19:17.

பிரியமானவர்களே,

நம்மில் அநேகர் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற சிறிய ஊழியத்திலோ, சிறிய பொறுப்பிலோ உண்மையில்லாதவர்களாக இருப்பதால் தான் கர்த்தர் நம்மை உயர்த்துவதில்லை.
நாம் இருக்கிற இடத்திலேயே இருக்கிறோம்.

ஒருவேளை எனக்கு கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் சிறிய வேலை தானே என்று முறுமுறுக்கிறவர்களாக இருக்கலாம். அதையும் கர்த்தர் காண்கிறவராயிருக்கிறார்.

ஆனால் கொஞ்சத்திலும் நாம் உண்மையுள்ளவர்களாக, பரிபூரண சந்தோஷத்தோடே செய்யும் போது, கர்த்தர் சொல்கிறார், ‘நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு’ என்று நம்மை ஆசீர்வதிப்பார்.

ஒருவேளை நாம் செய்வது மிகவும் சிறிய காரியமாயிருக்கலாம், ஆறுதல் சொல்லி ஒரு ஆத்துமாவை தேற்றியிருக்கலாம், அல்லது அவர்களுக்கு ஒரு சிறிய உதவியை செய்திருக்கலாம், நமக்கு அது ஒன்றும் பெரிய காரியமாக தோன்றியிருக்காது,

ஆனால் அதனால் உதவியை பெற்றுக் கொண்டவர்களுக்கு அது மிகப் பெரிய காரியமாகும்.

இன்று இந்த உலகில் அன்பைத் தேடி அலைந்து திரிகிறவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஆறுதல் இன்றி தவிப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா? பெரிய பெரிய வேலைகளில் இருந்தாலும், அன்புக்காக ஏங்கி தவிக்கிற மக்கள் ஏராளம் ஏராளம். அன்புக்காக அலைந்து கொண்டிருப்பவர்கள் அநேகர் உண்டு.

வெளியே மிகவும் பகட்டாக இருப்பார்கள், ஆனால் சிறிது நேரம் அவர்களோடு பேசிப் பார்த்தால் தெரியும், உள்ளத்தில் எத்தனை வியாகுலங்களோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று.

அப்படிப்பட்டவர்களை நாம் தேற்றும் போது, அது அவர்களுக்கு நிச்சயமாக ஆசீர்வாதமாக இருக்கும். ஒருவேளை நாம் உலகத்தில் உள்ள எல்லாரையும் தேற்றி கொண்டிருக்க முடியாது.

ஆனால் உங்களால் இயன்ற அளவு, யாருக்காவது ஒருவருக்கு ஆறுதலாயிருந்தால், நிச்சயமாக அவர்கள் அதை மறக்கவே மாட்டார்கள்.

உலகில் நித்திய ஜீவனை அறியாதபடி மரித்து கொண்டிருக்கிற மக்கள் எத்தனையோ பேர் உண்டு. ஒருவருக்கு நீங்கள் ஜீவனுக்கு செல்லும் வழியைக் காட்டினால், மறுமையில் அவர்கள் உங்களுக்கு எத்தனையாய் நன்றி சொல்வார்கள்!

நம்மால் இயன்றதை கர்த்தருக்கென்று செய்வோமா? சிறிய காரியமானாலும், கொஞ்சமான காரியமானாலும், உண்மையாய் செய்வோமா? உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். – நீதிமொழிகள்: 28:20. என்று வேதம் சொல்கிறது.

அப்படிப்பட்ட உண்மையுள்ள மனுஷர்களாய், கர்த்தருக்கு மகிமையை கொண்டு வரும் பிள்ளைகளாய் இவ்வுலகில் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இந்த ஓய்வு நாளில் நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.

 

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God